##~##

'காரைக்கால் அம்மையார்', கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து புனிதமானார் என்றால்... இந்த நூற்றாண்டில், அதுவும் நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்துக்குப் பிறகு, மக்களோடு மக்களாக வாழ்ந்து குளிர்ந்தவள்... காரைக்குடியில் கோயில் கொண்டிருக்கும் லலிதா முத்துமாரியம்மன்! அம்மனை நேரடியாகக் கண்டவர்கள், கூடவே இருந்து பணிவிடைகளைச் செய்தவர்கள், அவள் வாழ்ந்த காலத்தில் அவளின் அருமை தெரியாமல் திட்டித் தீர்த்தவர்கள் என்று பலரும் இன்னும் சாட்சியாக உயிரோடு இருக்கிறார்கள். அம்மனோ... இன்னுயிர் நீத்து விண்ணுலகம் சென்றுவிட்டாள். ஆனாலும், அருள் தருகிறவளாய், ஆற்றல் மிக்கவளாய் பலரும் போற்றி வணங்கும் தெய்வமாக அத்தனை பேரின் கண்களுக்கு எதிரேயே எப்போதும் வீற்றிருக்கிறாள் லலிதா!

காரைக்குடி, மீனாட்சிபுரத்தில், மீனாட்சியம்மன் கோயிலுக்கு எதிரே இருக்கிறது லலிதா முத்துமாரியம்மன் கோயில். உள்ளே நின்ற நிலையில் அம்மன் விக்கிரகம். அதற்கு கீழே இருக்கும் சிறிய பீடத்தில் சிறிய அம்மன் முகம் பொருத்தப்பட்டிருக்கிறது. அதுதான் லலிதா எனும் மானுட சிறுமியின் நினைவாக வைக்கப்பட்ட கல். அதற்குத்தான் அத்தனை பெருமை! ஆலயம் தேடி வரும் ஒவ்வொருவரும் அவளின் அருட்பார்வை வேண்டித்தான் வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வருக்கும் அவளின் அளவில்லாத அருளோடு... பிரசாதமாக தக்காளிப் பழமும் வழங்கப்படுவது சிறப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதோ எந்தன் தெய்வம்! - 2

அது ஏன் தக்காளிப்பழ பிரசாதம்? இக்கேள்விக்கான பதில் தெரிய... அம்மனின் வரலாற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம்!

1956-ம் ஆண்டில் ஒருநாள் மாலை மங்கும் நேரம்... காரைக்குடி, மீனாட்சியம்மன் கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தாள் எட்டு வயது சிறுமி. அவளுக்கு அம்மை நோய் தாக்கியிருந்தது. அவளைப் பார்த்தவர்கள் அருவருப்புற்று விலகிப்போக, கொஞ்சநேரம் அமைதியாக அமர்ந்திருந்தவள், அவ்வழியாக சென்ற தான்தோன்றிப்பெருமாள் என்பவரைப் பார்த்து, ''அண்ணே இங்க வா!'' என்று அழைத்தாள். அருகே வந்தவரிடம், ''எனக்கு ரொம்ப பசியா இருக்கு. சாப்பிட ஏதாவது தா...'' என்று பரிதாபமாகக் கேட்டாள். பதறிப்போனவர்... ''இதோ வர்றேம்மா...'' என்று சொல்லிவிட்டு, அருகிலிருந்த தன் வீட்டுக்குப் போய், விளக்கு வாங்குவதற்காக தன் மனைவி சேமித்து வைத்திருந்த 25 பைசாவை எடுத்துக் கொண்டவர், அதை வைத்து பழம் மற்றும் பால் வாங்கி வந்தார். அவற்றைத் தொட்டு வாயில் வைத்துக் கொண்ட சிறுமி, ''பசி தீர்ந்துவிட்டது'’ என்று சொல்லவும், ரொம்பவே குழம்பிப்போனார்.

'என்னடா இது பசிக்குதுனு சொன்ன பிள்ளை தொட்டு வாயில வெச்சதும் பசி தீர்ந்துடுச்சுனு சொல்லுதே!’ என்று ஆச்சர்யமாக பார்த்தவரை, ''நான் இனிமே இங்கதான் இருக்கப் போறேன். எனக்கு ஏதாவது ஒரு இடத்தைக் காட்டு!'' என்று கேட்டாள் அந்தச் சிறுமி. மீனாட்சிக் கோயிலின் காவல்காரர் தங்கும் கூரைக் கொட்டகையில், ஓர் ஓரமான இடத்தில் அவளை தங்க வைத்தார். வேளை தவறாமல் உணவும் கொடுத்தார்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மை நோய் தாக்கிய சிறுமியை இப்படி தங்க வைத்திருப்பதை சுட்டிக்காட்டி தான்தோன்றிப்பெருமாளைத் திட்டினார்கள். சிறுமியை அடிக்கவும் வந்தார்கள். அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்ப்பாள் சிறுமி. ஒருநாள் காவல்காரரை கூப்பிட்ட கோயில் நிர்வாகிகள், ''அவளை பிடித்து வெளியே தள்ளு'' என்று உத்தரவிட்டார்கள். அவரும் அப்படி செய்ய முயல, ''உன் வீட்டு கிணற்றடியில் இருக்கும் தக்காளிச் செடியில் ஒரே ஒரு தக்காளிப்பழம் இருக்கு. அதை பறித்து வா'' என்று காவல்காரரிடம் சொன்னாள் லலிதா. 'என் வீட்டில் கிணறு இருக்கு. ஆனா... தக்காளி செடி எதுவும் இல்லையே’ என்று குழம்பிய காவல்காரர்... நேராக கிணற்றடிக்கு ஓடிப்போய் பார்க்க, அங்கே ஒரு தக்காளிச் செடி... அதில் ஒரே ஒரு தக்காளிப்பழம்! ஆச்சர்யத்தில் உறைந்துபோனவர், திரும்பி ஒடிவந்து சிறுமியின் காலில் விழுந்து வணங்கினார். அவளை வெளியேற்ற முடியாது என்றும் மறுத்தார்.

இதோ எந்தன் தெய்வம்! - 2

அதற்கு பிறகான வரலாற்றை, அவளை வரவேற்று உபசரித்து பணிவிடைகள் செய்து அவள் நினைவாக ஆலயம் அமைத்தவரும், தற்போது 85 வயது நிரம்பியவருமான தான்தோன்றிப்பெருமாள் வாயாலேயே கேட்போம்.

''யார் இந்த வழியா போனாலும்... இவள பார்க்காம போகமாட்டாங்க. ஏதாவது அவங்க கேட்க, இவ அவங்களுக்கு சொல்லும் பதில் அப்படியே நடக்கவும்... எல்லோரும் இவகிட்ட நம்பிக்கை கொள்ள ஆரம்பிச்சாங்க. 'சந்தைக்கா போற... அங்க ரெண்டுபேர் பனங்கிழங்கு விப்பாங்க. அதுல சிவப்பு பொடவை கட்டுனவ பெரிசா இருக்கிற ஒரு பனங்கிழங்கை, தன் பசங்களுக்குனு எடுத்து வெச்சுருப்பா. அதை நான் கேட்டேன்னு கேட்டு வாங்கிட்டு வா’னு ஒரு பொண்ணுகிட்ட கேட்க, அதே மாதிரி நடக்கவும் செய்துச்சு.

இப்படி நாளுக்கு நாள் அவளோட பெருமை பரவிக்கிட்டே இருக்க, அதுக்கேத்த மாதிரி எதிர்ப்புகளும் இருந்துச்சு. ஆனா... காலப்போக்குல எல்லாமும் மாறி, இன்னிக்கு அவளோட கீர்த்தி மட்டுமே நிலைச்சுருக்கு. அவளோட அருள்சக்தி இப்ப உலகெங்கும் பரவியிருக்கு!'' என்று பெருமிதத்தோடு சொன்னார் தான்தோன்றிப்பெருமாள்.

சில மாதங்கள் மட்டுமே உயிரோடு இருந்த சிறுமி லலிதா, தான் எங்கிருந்து வந்தவள் என்பதை யாரிடமும் சொல்லவே இல்லை. திடீரென அவள் இறந்து போகவே... அவளை அடக்கம் செய்துவிட்டு, மீனாட்சியம்மன் கோயிலுக்கு எதிரே ஒரு கல்லை நிறுத்தி அவள் நினைவாக வழிபட ஆரம்பித்தார் தான்தோன்றிப்பெருமாள். அது 1956-ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 2-ம் நாள். இப்படி ஒரு சிறுமி வந்தது... அருள்வாக்கு சொன்னது... பிறகு, குளிர்ந்து தெய்வமாக ஆனது... இதெல்லாம் காற்றுவாக்கில் பரவி, கூட்டம் வர ஆரம்பித்தது. லலிதா தக்காளிப் பழம் கேட்ட கதையை தெரிந்துகொண்ட மக்கள்... வரும்போதே தக்காளிப் பழத்தோடு வர ஆரம்பித்தனர். அவர்களின் வேண்டுதல்கள் எல்லாமும் பலித்துவிட, அம்மனின் வழிபாடு முக்கிய மாகிப் போனது.

அந்த சிறிய கல்பீடம் அப்படியே இருக்க, வருகிற கூட்டத்துக்கு அம்மன் நன்றாகத் தெரிய வேண்டும் என்பதால் நின்ற நிலையிலான விக்கிரகம் வைக்கப்பட்டது. அம்மை நோயால் குளிர்ந்ததால் லலிதா, முத்துமாரியாக அழைக்கப்பட்டாள். இப்போது லலிதா முத்துமாரியம்மன் ஆலயம் அறநிலையத்துறையின் கீழ் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படுகிறது.

இதோ எந்தன் தெய்வம்! - 2

''அம்மை நோயால அதிகம் அவதிப்படுறவங்கள உடனே அம்மை இறங்கச் செய்றா எங்க அம்மை. உடல் உபாதைகள், திருமணத் தடை, குழந்தைப் பேறின்மைனு எந்த வேண்டுதலா இருந்தாலும் உடனே நிறைவேற்றித் தந்து கண்கண்ட தெய்வமா இருக்கா. அப்படி பிரார்த்தனை செய்றவங்க தங்களோட சக்திக்கு ஏத்தமாதிரி தக்காளிப்பழத்தை வாங்கிவந்து காணிக்கை செலுத்துறாங்க. வர்ற பக்தர்களுக்கும் அம்மனோட பிரசாதமா விபூதி குங்குமத்தோடு தக்காளிப்பழமும் கொடுக்கப்படுது. அது எல்லா துன்பங்களையும் போக்கவல்ல அமுதக்கனி!'' என்று மெய்யுருகிச் சொல்கிறார் ஆலயத்தின் பாண்டி பூசாரி.

முதலில் சிறிதாக தொடங்கப்பட்ட மாசித் திருவிழா... இப்போது மாசி மாதம் தொடங்கி பங்குனி வரையிலும் 30 நாட்களை கடந்தும் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவாக உருவெடுத்திருக்கிறது. ஒவ்வொரு சமூகத்தினரும் போட்டிப் போட்டுக்கொன்டு தங்கள் வீட்டு சிறுமியாக நினைத்து லலிதா மாரியம்மனுக்கு ஆராதனைகள் செய்கிறார்கள். பக்தர்களால் எடுத்து வரப்படும் பாற்குடங்கள் பல ஆயிரங்களை தாண்டும். பத்து வயதை தாண்டாத சிறுமிகள் பலரும் ஒருசேர அருள்வந்து ஆடிவரும் அற்புத காட்சி ஒன்றே அம்மனின் அருளை அகிலத்துக்கு உணர்த்தும்!

- தெய்வங்கள் பேசும்...

படங்கள்: சாய்.தர்மராஜ்

வழிகாட்டி!

காரைக்குடிக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் பேருந்து மற்றும் புகைவண்டி வசதிகள் உண்டு. கோயில் வாசலிலேயே அர்ச்சனை தட்டுகள் கிடைக்கும். அதிலேயே தக்காளிப் பழமும் சேர்ந்துதான் கொடுக்கிறார்கள்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 முதல் மதியம் 1.30 மணி வரை. மாலை 4 - 8.30 மணி வரை.

கோயில் தொலைபேசி: 04565-232199

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism