Published:Updated:

பசுமை நிறைந்த நினைவுகளே!

ரிலாக்ஸ்

பசுமை நிறைந்த நினைவுகளே!

ரிலாக்ஸ்

Published:Updated:
##~##

கிராமிய வாழ்வியலின் சுவை அறியாமல் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு, கிராம வாழ்க்கை குறித்து விளக்கும் வகையில், தமிழக அரசு மற்றும் கோவை கதிர் பொறியியல் கல்லூரி சார்பில், 'கிராமிய மணம்’ எனும் கண்காட்சி கோயம்புத்தூரில் நடத்தப்பட்டது.

மூன்று நாள் கண்காட்சியில்... எல்லை காக்கும் அய்யனார் சிலை துவங்கி, டூரிங் டாக்கீஸ், பஞ்சாயத்து மேடை, சுமைதாங்கி கல், கிராமப்புற குடிசைகள், பண்ணையார் வீடு, தாமரைக்குளம், ஆட்டு கொட்டில், வால்வு ரேடியோ, கிராமத்து பெட்டிக்கடை என அனைத்தும் செட் வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. நம் தற்போதைய வாழ்க்கையில் கிட்டத்தட்ட மறந்துபோன, உரல், உலக்கை, திருக்கை, அம்மி, ஆட்டுக்கல், எண்ணெய் செக்கு, ரேக்ளா வண்டி, வில்லு வண்டி, கூண்டு வண்டி, பஞ்சரம், முறம், லாந்தர் விளக்கு, தாம்புக்கயிறு, கைராட்டை உள்ளிட்ட பலவகையான கிராமத்து பொருட்களும் இடம்பெற்றிருந்தன. வளையல் கடை, ரிப்பன் கடை, சர்பத், குச்சி ஐஸ் என கண்காட்சியில் எங்கு திரும்பினாலும், அழகிய கிராமத்தின் வாழ்வியல் கண்முன் நின்றது. தவிர கிராமத்துக்கே உரிய களி, ராகி, கம்பு போன்ற உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

'சனி, ஞாயிறுனு எல்லா லீவ்லயும் நான் போறது ஷாப்பிங் மால்களுக்குத்தான். இந்த வாரம் இங்க வந்தேன். அசந்துட்டேன். சின்ன வயசுல எங்க பாட்டி வீட்டுக்குப் போயிருக்கேன். மதுரை பக்கம் ஒரு கிராமம். அப்படியே இருந்துச்சு இந்த இடம். எனக்கு ரொம்ப பிடிச்சது. கிராமங்கள் எவ்வளவு அழகு..! நாமதான் மிஸ் பண்றோம்!'' என்றார் 10-ம் வகுப்பு மாணவி அர்ச்சனா.

பசுமை நிறைந்த நினைவுகளே!

களரி, புள்ளிக்கோலம், கபடி, மாறுவேடப் போட்டிகள், தப்பாட்டம், பெரிய குச்சியாட்டம், ஒயிலாட்டம், மான் கொம்பாட்டம், பொம்மையாட்டம், பறையாட்டம், கரகாட்டம், மாட்டு கொம்பாட்டம், சக்கைக் குச்சியாட்டம், பொய்க்கால் குதிரை, காவடி, நையாண்டி மேளம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்து போட்டிகளும் நடந்தன. தினமும் கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கண்காட்சி அமைப்பாளரும், கதிர் பொறியியல் கல்லூரி செயலாளருமான லாவண்யா கதிர், ''பல ஆண்டுகளாக இதற்குத் திட்டமிட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக இதற்கான வேலைகளை ஒருங்கிணைத் தோம். தற்போது அரசுடன் இணைந்து இந்த கண்காட்சியை நடத்தியுள்ளோம். இந்த செட் எல்லாம் அமைக்க கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆனது!'' என்றார் பிரமித்தபடி.

கண்காட்சியை பார்வையிட்டவர்களின் முகங்களில் மனதுக்கு நெருக்கமான ஒன்றை இழந்த ஏக்கமும், மனதுக்கு பிடித்த ஒன்றை நினைவுபடுத்திய மகிழ்ச்சியும் நிறைந்து வழிந்தது!

- ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்