Published:Updated:

பலே வருமானம் தரும் பதப்படுத்தும் தொழில்கள்!

ஹெல்ப் லைன்பிஸினஸ் கேள்வி - பதில்

பலே வருமானம் தரும் பதப்படுத்தும் தொழில்கள்!

ஹெல்ப் லைன்பிஸினஸ் கேள்வி - பதில்

Published:Updated:

வாருங்கள்... வழிகாட்டுகிறோம்!

##~##

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி.ராமசாமி தேசாய் பதிலளிக்கிறார்...

''ஊறுகாய், இட்லிப் பொடி, சாஸ், ஜாம் என்று உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் தொழிலை எடுத்துச் செய்ய ஆர்வமாக உள்ளேன். இதற்கான வழிகாட்டல் விவரங்கள் கிடைக்குமா..?''

-  டி.ஜெயகுமாரி, தஞ்சாவூர்

''இன்று உணவு விஷயத்தில் நம்நாட்டில் அதிக அக்கறை காட்டப்படுகிறது. பழவகை மற்றும் காய்கறி உற்பத்தியை அதிகரிக்கும் வேலைகளும் நடக்கின்றன. எனவே, சரியான நேரத்தில்தான் லாபகரமான இந்த உணவு பதப்படுத்தும் தொழில் பற்றிய விவரங்களைக் கேட்டுள்ளீர்கள். இதற்காகவே முதலில் தங்களைப் பாராட்ட வேண்டும்.

உணவுத் துறையில் தொழில் துவங்குபவர்களை இன்றைக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே இருகரம் நீட்டி வரவேற்க காத்திருக்கின்றன. அத்தகையோருக்கு வழி காட்டுவதற்காகவே அரசு அமைப்புகள் பலவும் களத்தில் இயங்கி வருகின்றன. அவற்றின் பட்டியலை கீழே வரிசைப்படுத்தியிருக்கிறேன். கவனமாகக் குறித்துக் கொள்ளுங்கள்!

50 லட்சம் வரை மானியம்!

உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான மத்திய அரசின் அமைச்சகம், இதில் ஈடுபடும் தொழில்முனைவோருக்கு 25 சதவிகிதம் மூலதன மானியம் வழங்குகிறது. குறிப்பாக, அதிகபட்சம் 50 லட்ச ரூபாய் வரை மானியமாக வழங்க உள்ளது. உணவு பதப்படுத்துதல் துறையின்கீழ் உள்ள தொழில்கள், அவற்றின் திட்ட அறிக்கைகளின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் www.mofpi.nic.in இந்த வலைதளத்தில் பெறலாம்.

பலே வருமானம் தரும் பதப்படுத்தும் தொழில்கள்!

சந்தேகங்களுக்கு அணுகுங்கள்!

நம் நாட்டின் பழமையான உணவுப் பதப்படுத்துதல் ஆராய்ச்சிக் கூடம், மைசூரில் உள்ள 'சிஎஃப்டிஆர்' (CFTR-Central Food Technological Research Institute).  இவர்கள், தங்களின் ஆராய்ச்சியில் கொண்டுவந்துள்ள அனைத்துத் திட்டங் களையும் தொழில்முனைவோருக்கு தொழில்நுட்ப உதவியாக தர உள்ளனர். உணவு பதப்படுத்துதல் தொழிலில் எந்த சந்தேகங்களுக்கும் இவர்களை அணுகலாம். வலைதளம் - www.cftri.com. தொலைபேசி எண்: 0821-2514534.

நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய நிறுவனம்!

உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய நிறுவனம், பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும், மைசூரில் உள்ள 'ஃபுட் ரிசர்ச் லேப்' (Food Research Lab). இவர்களும் பல ஆராய்ச்சிகளை உணவு உற்பத்தித் துறையில் செய்து வருவதுடன், தங்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடித்த உணவு உற்பத்தி நுட்பங்களை மக்களிடம் பகிர்ந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர். இவர்களின் ஆராய்ச்சித் திட்டங்களை பெற்று, புதிய தொழில் களைத் துவங்கலாம். அணுகவேண்டிய முகவரி, Director, Defence Food Research Laboratory, Mysore. தொலைபேசி எண்: 0821-2473783.

உங்கள் ஊரிலேயே கைகாட்டி!

இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கும் நீங்கள் குடியிருக்கும் தஞ்சாவூரிலேயே... இந்திய பயிர் பதன தொழில்நுட்ப மையம் (IICPT-Indian Institute Of Crop Processing Technology) இருக்கிறது. இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளாம். இது மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனம். இங்கு பயிற்சி மையமும், ஒரு காப்பகமும் உள்ளது. உணவுப் பதப்படுத்துவது குறித்து ஒன்று முதல் மூன்று நாட்கள் வரையிலான பயிற்சிகளை, வருடம் முழுவதும் நடத்துகிறார்கள். இதில் செயல்முறை பயிற்சியும் அடங்கும். இது கட்டண பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள எந்திரங்களில் தொழில்முனைவோர் தங்களுக்குத் தேவையான எந்திரங்களில் உணவுப் பதப்படுத்தும் தொழிலை செய்து கொள்ளலாம்.

நேரில் சென்று இந்த நிறுவனத்தின் செயல் பாடு மற்றும் அங்குள்ள எந்திரங்களின் விவரங்கள் பற்றி அறிந்துகொள்வது, உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். தொடர்புக்கு: 04362-228155.

வங்கியின் இலவச பயிற்சிகள்!

தஞ்சாவூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தன் கிராமிய சுயவேலைவாய்ப்பு மையத்தின் மூலம், உணவுப் பொருட்கள் தயாரித்தல், பதப்படுத்துதல், சமையல் கலை, சணல் பைகள் தயாரித்தல், அழகுக் கலை, செல்போன் சர்வீஸ் உள்ளிட்ட பலதரப்பட்ட இலவச பயிற்சிகளை அளிக்கிறது. அணுக வேண்டிய முகவரி: இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், பக்கிரிசாமி தெரு, ஈஸ்வரி நகர், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர். தொலைபேசி: 04362-243377

பலே வருமானம் தரும் பதப்படுத்தும் தொழில்கள்!

ஐந்து நாட்கள்... 25 ரூபாய் கட்டணம்!

காய், பழவகை பதப்படுத்துதல் போன்ற முக்கியமான பயிற்சி அளிக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் (Food and Nutrition Board) பற்றி தாங்கள் அறிந்துகொள்வது அவசியம். இது, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 10 இடங்களில் செயல்படும் இந்த வாரியம், தமிழ்நாட்டில் இரண்டு இடங்களிலும், புதுச்சேரியில் ஓரிடத்திலும் செயல்படுகிறது. சென்னையில் உள்ள அலுவலகம் சென்னையைச் சுற்றி உள்ள மாவட்டங்களுக்கும், புதுச்சேரியில் உள்ள அலுவலகம் புதுச்சேரி, தஞ்சாவூர் மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கும், மதுரையில் உள்ள அலுவலகம் தென் மாவட்டங்களுக்கும் பயிற்சி அளிக்கிறது!

ஐந்து நாட்களுக்கு இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். 25 ரூபாய் மட்டுமே கட்டணம் (புத்தகங்களுக்காக). குறைந்தது 30 பேர் பங்கு பெறவேண்டும். இடம் மற்றும் தயாரிப்பு உபகரணங்களுக்கு பயிற்சி பெறுபவர்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். உணவு உற்பத்தி பற்றிய புத்தகத்தை மட்டும் வாரியம் வழங்கும். இப்பயிற்சியில் பழரசம், ஜாம், டூட்டிஃபுரூட்டி, ஊறுகாய், தக்காளி சாஸ் என ஊட்டச்சத்து நிறைந்த உணவு தயாரிப்புமுறை, பாதுகாப்பான சேமிப்பு முறை உள்ளிட்ட அனைத்தும் செய்முறை விளக்கத்துடன் கற்றுத்தரப்படும். பயிற்சி நிறைவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

தொடர்பு முகவரி: ஃபுட் அண்ட் நியூட்ரிஷன் போர்டு எக்ஸ்டென்ஷன் சென்டர், A-1-A, ராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை. 044-24916004.

மதுரை அலுவலகத்தின் தொடர்புக்கு: 0452-2530834.''

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...
'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’ கேள்வி  பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை  600 002