Published:Updated:

எங்கே என் மகன்..?

ஒரு தாயின் 21 ஆண்டு தேடல்ஃபீலிங்ஸ்

எங்கே என் மகன்..?

ஒரு தாயின் 21 ஆண்டு தேடல்ஃபீலிங்ஸ்

Published:Updated:
##~##

''என் மகன் நாட்டுக்காக ராணுவத்தில் சேர்ந்ததுதான் அவன் செய்த மிகப்பெரிய தவறு. அவன் காணாமல்போய் ஆண்டுகள் பலவாகின்றன. அவனைத் தேடும் முயற்சியில் ராணுவத்தின் அலட்சியத்தையும் அராஜகத்தையும் நேராக சந்தித்து, மனம் வெந்துபோனாலும் என் தேடலை மட்டும் இன்னும் நிறுத்தவில்லை. என் மகன் எனக்கு வேண்டும்!''

 - 67 வயதான அனுசுயா பாட்டியின் குரலில்தான் நடுக்கம். ஆனால், 21 ஆண்டுகள் ஆகியும் மனதில் இரும்பு உறுதி.

சென்னை, ராஜகீழ்பாக்கம், சத்யசாய் நகரில் உள்ள அனுசுயா பாட்டி, ராணுவத்தில் பணியில் இருந்தபோது மாயமான தன் மகனை மீட்க கடந்த 21 ஆண்டுகளாக போராடி வருகிறார். அந்தக் கண்ணீர்க் கதையை அவர் சொல்லக் கேட்டபோது, ஒரு தாயின் இடைவிடாத தேடல்... நம்மை திகைக்க வைத்தது!

''என் கணவர் பெயர் ராமையா. எங்களுக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் சங்கரசுப்ரமணியன். படிப்பில் சுட்டி. 12-ம் வகுப்புத் தேர்வில் 1050-க்கும் மேல் மதிப்பெண் எடுத்தான். குடும்ப வறுமை காரணமாக தொடர்ந்து படிக்க வைக்க முடியவில்லை. சூழ்நிலையைப் புரிந்து எங்களைத் தொந்தரவு செய்யாமல் வேலை தேட ஆரம்பித்தான். 'ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்யப் போகிறேன்' என்று சொல்லி, 1986-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரூர்கியில் ராணுவப் பணியிலும் சேர்ந்தான்.

எங்கே என் மகன்..?

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்துவந்தான். ஒருநாள்கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றியவன், 91-ம் ஆண்டு இரண்டு மாத விடுப்பில் வீட்டுக்கு வந்திருந்தான். எங்களுடன் இருந்ததில் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. மீண்டும் பணிக்குச் சென்று சேர்ந்த சில தினங்களில்,  'உங்கள் மகன் மாயமாகிவிட்டான்’ என்று ராணுவத்திலிருந்து தந்திவர... அதிர்ச்சியாகிவிட்டோம் நாங்கள். ராணுவ அதிகாரியிடம் என் மகன் குறித்த தகவலைக் கேட்டோம்... கேட்டுக்கொண்டே இருந்தோம். ஆனால், அவர்களிடமிருந்து, எவ்வித தகவல்களும் பதிலாக வரவில்லை. என் மகனை தேடுவதற்கான முயற்சிகளையும் அவர்கள் எடுக்கவில்லை. மனமுடைந்திருந்த வேளையில், ராணுவத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், 'உங்கள் மகனை ராணுவப் பணியில் இருந்து நீக்கிவிட்டோம். இனி அவருக்கும், ராணுவத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது’ என்று குறிப்பிட்டிருந்தது. உயிரே பதறிவிட்டது எங்களுக்கு!''

- கண்ணீர் உருண்டோடியது பாட்டிக்கு. துடைத்துத் தொடர்ந்தார்.

''அந்தக் கடிதத்தை தொடர்ந்து என் கணவர், 'எங்கள் மகன் ராணுவத்தில் பணியில் இருந்தபோதுதான் காணாமல் போயுள்ளான். அதனால், ராணுவம்தான் முழுபொறுப்பையும் ஏற்கவேண்டும். எப்படியாவது நீங்கள்தான் மகனைக் கண்டுபிடித்து கொடுக்கவேண்டும்’ என்று பதில் கடிதம் எழுதினார். இன்று வரைக்கும், எந்தவித பதிலும் வரவில்லை. என் மகன் தொலைந்து போவதற்கு காரணம் என்னவாக இருக்குமென்று, அவனுடன் ராணுவத்தில் பணிபுரிந்த நண்பர்களிடம் கடிதம் மூலம் கேட்டோம்.

'கடந்த நான்கரை ஆண்டுகளாக பணியில் இருந்த உங்கள் மகன், ஒருநாள்கூட விடுப்பு எடுத்துக் கொண்டதில்லை. அதனால், மேலும் ஒரு மாதம் கூடுதலாக விடுப்பு வேண்டுமென்று உயர் அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள் தர மறுத்ததோடு, ஏதோ தகாத வார்த்தைகளாலும் பேசியிருக்கிறார்கள். அதனால் கோபமடைந்த உங்கள் மகனுக்கும், உயர் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. இதைக் காரணமாக வைத்து, அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக கூறி, ஆறு முறை கரன்ட் ஷாக் கொடுத்தார்கள் உயர் அதிகாரிகள். இதனால் ரொம்பவே மனமுடைந்து போனான். தொலைந்து போவதற்கு முந்தைய நாளன்று, மாலை 7 மணிக்கு பணி முடிந்ததும் அவன் அறைக்கு வரவில்லை. மிக தாமதமாக இரவு 10 மணிக்கே வந்தான். அதை வைத்துதான்... அவனை ஏதோ செய்திருக்கிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். அதனால்தான் அன்று இரவே அவன் காணாமல் போய்விட்டான்’ என்று பதில் எழுதியிருந்தார்கள். உயர் அதிகாரிகள் என்கிற போர்வையில் அந்தப் பாவிகள் என் மகனை என்ன செய்தார்களென்று தெரியவில்லையே...'' என்றபோது... ஆத்திரத்திலும் ஆற்றாமையிலும் உயர்ந்தது பாட்டியின் குரல். தொடர்ந்தார்...

எங்கே என் மகன்..?

''கணவர் இறந்த பிறகும், ராணுவத்துக்கு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், சரியான பதில்தான் வந்தபாடில்லை. அவனை என்னமோ செய்திருக்கிறார்கள். அதனால்தான் ராணுவத்தினர், என் மகன் குறித்த விவரத்தை இன்றளவும் மறைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தேன். அதற்கு, 'உங்கள் மகனை ராணுவம்தான் கண்டுபிடித்து தர வேண்டும்’ என்று பதிலளித்தனர். பிறகு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள ராணுவ உதவி மையத்துக்குச் சென்று கேட்டேன். 'இவ்ளோ நாள் என்ன பண்ணீங்க? என் நேரத்தை வீணாக்காம வெளியில போயிடுங்க’ என்று       கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பிவிட்டனர்.

எங்கே என் மகன்..?

'இனி எதுவும் முடியாது' என்று நான் சோர்ந்து நின்றபோதுதான், சமூக சேவகி பூமா... உதவிக்கு வந்தார். அவரின் துணையோடு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக என் பையனைப் பற்றிய பல்வேறு தகவல்களை வாங்கியிருக்கிறோம். ரூர்கி போலீஸாரிடமும் புகார் கொடுத்திருக்கிறோம். நான் சாவதற்குள் என் மகனைப் பார்க்க வேண்டும். அவன் கையால்தான் எனக்கு இறுதி சடங்கு நடக்க வேண்டும்'' என்று உறுதியான குரலில் சொன்ன அனுசுயா,

''ராணுவத்தில் சேர்ந்தது என் மகன் செய்த தவறா? மகனை நாட்டுக்காக அனுப்பியதற்கு எங்களுக்கு இந்த தண்டனையா?'' என்று கேட்டார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இந்தத் தாயின் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லையென்றால்... 'ராணுவத்துக்கு நம் மகனை அனுப்பித்தான் ஆக வேண்டுமா?' என்று பிற தாய்மார்களிடம் கேள்வி பூப்பதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும்!

- சா.வடிவரசு, படங்கள்: ரா.மூகாம்பிகை

''எந்தத் தகவலும் எங்களிடம் கிடையாது!'

ங்கரசுப்ரமணியன் காணாமல் போனது மற்றும் அவருடைய குடும்பத்தாரின் தொடர் தேடுதல் முயற்சிகளுக்கு இதுவரை பலன் இல்லாது போனது இவை பற்றியெல்லாம் கேட்டறிவதற்காக சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள இந்திய ராணுவ உதவி மையத்தை அணுகினோம். ''அவரைப் பற்றிய எந்தத் தகவலும் எங்களிடம் கிடையாது. லக்னோவில் உள்ள ஏ.எம்.சி ஆர்மி மையத்தில்தான் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும். அங்கே தொடர்புகொள்ளுங்கள்'' என்று சொன்னார்கள்.

சங்கரசுப்பிரமணியத்தின் குடும்பத்தினர், இந்த மையத்தைதான் அடிக்கடி தொடர்பு கொண்டு வருகின்றனர். ஆனால், அங்கிருந்து அவர்களுக்கு உருப்படியாக எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில், மத்திய ராணுவ அமைச்சர், தமிழக முதலமைச்சர் என்று அடுத்தகட்டமாக தங்களுடைய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம்!