Published:Updated:

நேற்று, ஒலிம்பிக் விராங்கனை... இன்று, பானிபூரி விற்பனை!

நியூஸ்

நேற்று, ஒலிம்பிக் விராங்கனை... இன்று, பானிபூரி விற்பனை!

நியூஸ்

Published:Updated:
##~##

சீதா சாஹு... மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டில் சாதனை படைத்த 17 வயது இந்திய நட்சத்திரம்! ஆனால், அதற்கான மரியாதையை நம்முடைய அரசுகள் அளிக்காததால்... மத்தியப்பிரதேச மாநிலம், ரேவா அருகே உள்ள தோபியா டேங்கி எனும் இடத்தில் பானிபூரி விற்றுக் கொண் டிருக்கிறார் பரிதாபத்துக்குரிய இந்தச் சிறுமி. இவர், உலக அளவிலான விளையாட்டு நம்பிக்கை நட்சத்திரம் என்பதே... சமீபகாலம் வரை அந்தப் பகுதியில் யாருக்கும் தெரியாது. சமீபத்தில் மீடியாக்கள் இவரை அடையாளம் கண்டுகொள்ள... தற்போது இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். கூடவே, உதவிகளும் தேடி வர ஆரம்பித்துள்ளன.

பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய பதினேழு வயதில், இப்படி சீதா பானிபூரி விற்பது கொடுமை! அதிலும் விளையாட்டுத் துறையில் பல வெற்றிகளைப் பார்த்தவர், மேலும் பல உலக சாதனைகளைப் புரியக்கூடிய அளவுக்கு திறமைகளைத் தன்னகத்தே கொண்டிருந் தும் இப்படியரு நிலைக்குத் தள்ளப்பட்டது கொடுமையிலும் கொடுமை! தந்தை... பணியாற்றும் உடல் தகுதியை இழந்துவிட்ட நிலையில், தன் இளம் சகோதரனுடைய படிப்புக்கும்... குடும்பத்தின் அன்றாட செலவுகளுக்காகவும் பானிபூரி விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. இத்தனைக்கும் போதுமான மூளைவளர்ச்சியற்றவர்தான் சீதா!

நேற்று, ஒலிம்பிக் விராங்கனை... இன்று, பானிபூரி விற்பனை!

மூளைவளர்ச்சியற்றவரான இவர், உலக பந்தயங்களில்   கலந்து கொள்ளும் அளவுக்கு முன்னேறியது சர்வசாதாரணமாகத்தான் நடந்தது. ஆரம்பத்தில் உள்ளூர் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்றவர் மீது உள்ளூர் கோச்களின் பார்வை பட... கொஞ்சம் கொஞ்சமாக சீதாவுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகள் என படிப்படியாக முன்னேறிய சீதா, 2011-ல் ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார். 200 மீட்டர், 1,600 மீட்டர் தடகளப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களைக் கண்டவர், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் உலக அளவில் நான்காவது இடத்தைப் பெற்றவர்.

உடல் தகுதியிருந்தும், அறிவுத்திறன் போதுமான அளவுக்கு இல்லாதவர்களுக்காக (Intellectual disabilities) ஒலிம்பிக் போல தனியாக விளையாட்டுப் போட்டிகளை நடத்த விரும்பினார் மறைந்த அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி. அதை, அவருடைய சகோதரி யூனிஸ் நனவாக்கினார். ஆரம்பத்தில் அமெரிக்காவில் மட்டும் நடைபெற்ற இந்தப் போட்டிகள், பின்னர் 'சிறப்பு ஒலிம்பிக்’ என்கிற பெயரில் உலக அளவில் தொடர்கின்றன. நம் நாட்டின் சார்பில் மாற்றுத்திறனாளிகளை கலந்துகொள்ள வைக்க ஆரம்பகட்டத்தில் முயற்சி செய்யவில்லை. இப்போதுதான் இந்தியாவும் பங்கெடுக்கிறது. இதில் பங்கேற்று சாதனை புரிந்த சீதா, மேற்கொண்டு இந்தியாவுக்காக பல பதக்கங்களைப் பெற்றுத் தரவேண்டிய தகுதி படைத்திருந்தும், நம்முடைய அரசாங்கங்கள் கண்டுகொள்ளவே இல்லை. உச்சகட்ட வறுமை வாட்டியெடுக்க... பானிபூரி விற்க ஆரம்பித்துவிட்டார்.

இதுகுறித்து பேசும் சீதாவின் சகோதரர் தர்மேந்திரா, ''மத்திய பிரதேச மாநில அரசு, இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் வரை பரிசு வழங்கப்படும் என்று போட்டிக்கு முன்பாக அறிவித்தது. சீதா, வெண்கலப்பதக்கம் வென்ற பின்னர்... 'அதைவிட இன்னும் அதிகமான தொகை பரிசாக சீதாவுக்கு வழங்கப்படும்' என்று மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், அறிவித்தபடி பரிசுகள் வழங்கப்படவில்லை'' என்று வருத்தம் பொங்கச் சொன்னார்.

''கணவருக்கு கை, கால் சரியாக வராத நிலையில், என் குடும்பமே நிலைகுலைந்து விட்டது. குழந்தைகளுக்கு வயிறார சாப்பாடுகூட கொடுக்க முடியாத நிலை. இத்தகைய சூழலிலும் போட்டிகளில் சீதா வெற்றி பெற்று சாதித்திருப்பது... எங்களுக்கெல்லாம் பெருமையே. ஆனால், இந்தப் பெருமை... அவளுக்கோ, எங்கள் குடும்பத்துக்கோ எந்த வகையிலும் உதவவில்லை என்பதுதான் வேதனை'' என்று ஏக்கத்துடன் சொல்கிறார் சீதாவின் அம்மா கிரண்.

நேற்று, ஒலிம்பிக் விராங்கனை... இன்று, பானிபூரி விற்பனை!

மீடியாக்கள் மூலம் விஷயத்தை தெரிந்து கொண்ட மத்திய மின்சாரத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சீதா மற்றும் குடும்பத்தினரை டெல்லிக்கு அழைத்து, முதற்கட்டமாக பொருளாதார ரீதியாக அவர்கள் மேம்படுவதற்காக ஐந்து லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறார். குடியிருக்க வீடு மற்றும் படிப்பைத் தொடரும் வகையில் உதவிகளைச் செய்வதற்காக என்.டி.பி.சி (தேசிய அனல் மின்சார கழகம்) அமைப்புக்கு சிபாரிசும் செய்திருக்கிறார் சிந்தியா.

ஆனால்... இந்தியாவில் பல சீதாக்கள் இதே நிலையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை! பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தேசிய கபாடி வீராங்கனை சாந்திதேவிக்கு தற்போது வயது நாற்பது. தன்னுடைய குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்ற... அவர் காய்கறி விற்றுக் கொண்டிருக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிஷா ராணி தத் வில்வித்தையில் ஆசிய அளவில் பல கோப்பைகளை பெற்றுத் வந்தவர். குடிசையில் வாழும் நிஷா, வருமானம் போதாத நிலையில் தனக்கு விருதாகக் கிடைத்த நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள கொரிய வில் - அம்பினை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்று காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்.

- சரோஜ் கண்பத், படங்கள்: அர்ச்சனா