Published:Updated:

முத்துக்கள் பத்து!

முத்துக்கள் பத்து!

பிரீமியம் ஸ்டோரி
##~##

'பாழாப்போன வெயில் இப்படி படுத்தி எடுக்கிறதே!’ என்று கோடைக்காலத்தில் வெயில் பற்றி ஆதங்கப்படாதவர்கள் மிகவும் குறைவு. ஆனால், நம் வாழ்க்கைக்கு இன்றியமையாதவற்றில் மிகமுக்கிய இடம் வெயிலுக்கு உண்டு. 'குழந்தைகளின் மனதில் வெயில் பற்றிய பயத்தை பதிவு செய்யாதீர்கள்' என்று இதைப் பற்றி கடந்த இதழ் 'நமக்குள்ளே' பகுதியில் ஆசிரியர் விவாதித்த விஷயத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு! அதைத் தொடர்ந்து... வெயிலின் சாதகங்கள் பற்றியும், நமக்கு உதவிகரமாக விளங்கும் விதத்தில் வெயிலை பதமாக பயன்படுத்துவது பற்றியும் சில டிப்ஸ்கள், 'முத்துக்கள் பத்து’ என்கிற தலைப்பில் இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

தொகுப்பு: லதானந்த்

முத்துக்கள் பத்து!

வியர்வை வெளியேற்றும் நச்சுக்களை!

உடலில் தேவையற்றதாக, நச்சுத்தன்மை கொண்டதாக இருப்பவற்றை... நுரையீரல், சிறுநீரகங்கள், குடல் மற்றும் கல்லீரல் ஆகியன வெளியேற்றுவதைப் போலவே தோலும் வியர்வை மூலமாக வெளியேற்றுகிறது. தோலில் உள்ள நுண்ணிய துவாரங்கள் மூலம் இவை வெளியேற்றப்படுகின்றன. வெப்பத்தின் சமநிலையைப் பேணுவதில் வியர்வைக்குப் பெரும் பங்கு உண்டு. அதிக வியர்வை வெளியேறுவதால் 'ஸ்டீம் பாத்’ எடுத்த நன்மைகள் கிடைக்கும்.

முத்துக்கள் பத்து!

சத்து தரும் சம்மருக்கு சல்யூட்!

 மற்ற நாட்களில் எப்படியோ... கோடைக் காலத்தில் வெம்மையைக் குறைப்பதற்கென்றே நிச்சயம் பழங்கள், நுங்கு, இளநீர், வெள்ளரி, காய்கறி சாலடுகள், பழ ரசங்கள் என்று உட்கொள்ள வேண்டி இருக்கும். இதனால், வெப்பத்தைக் குறைத்த மாதிரியும் இருக்கும்... உடலுக்கு வேண்டிய சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொண்ட மாதிரியும் இருக்கும். இதற்காகவே வெயிலுக்கு வைப்போம் ஒரு வணக்கம்!

 வெயில் ஒரு கிருமிநாசினி!

முத்துக்கள் பத்து!

மழைக் காலத்தில் சின்னதாக வெயில் அடித்தால்கூட... வீட்டில் இருக்கும் மெத்தை, தலையணைகள், மேஜை, நாற்காலிகள் என்று எல்லாவற்றையும் வீதிக்கு கொண்டு வந்து வெயிலில் காய வைப்பது நம் வழக்கம். பூஞ்சை, பூச்சிகள் போன்றவற்றின் மூலமாக ஏற்படும் தொற்றுகளை அறவே ஒழிக்கும் ஆற்றல் வெயிலுக்கு உண்டு என்பதுதான் காரணம். மழைக் காலத்தில்தான் என்றில்லாமல், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இப்படி வீட்டு உபயோகப் பொருட்களை வெயிலில் வைத்து எடுக்கத் தவறாதீர்கள். வெயிலை, இணையற்ற கிருமிநாசினியாக பயன்படுத்தி, உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்!

முத்துக்கள் பத்து!

தன்னிகரில்லா சூரிய மின்சாரம்!

 மரபு சார்ந்த எரிசக்தி (நீர், அனல் மின்சாரம் போன்றவை) தீர்ந்துபோகக் கூடிய தன்மை உடையவை. கூடவே தொடர்ச்சியாக அதிக செலவும் வைக்கக் கூடியவை. சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கக் கூடியவை. சூரிய மின்சாரம் இவற்றிலிருந்து மாறுபடுவதோடு, நீண்டகால பயன் அளிக்கக் கூடியது. வீட்டிலேயே சோலார் பேனல் அமைத்து, மின்சாரம் தயாரிக்கலாம். ஒரு முறை முதலீடு செய்தால்... பற்பல ஆண்டுகளுக்கு பயன்பெறலாம். நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது இதற்கான செலவும் சிக்கனமானதுதான்! கோடையில் மட்டுமல்ல... ஆண்டில் பெரும்பாலான நாட்கள், சூரியனின் அருட்கொடை தமிழகத்தில் தொடர்வதால்... சூரிய மின்சாரத்தை தைரியமாக நம்பலாம்!

முத்துக்கள் பத்து!

கையோடு கொண்டு  செல்லுங்கள் பானங்களை!

வெயிலில் நேரடியாக அதிக நேரம் இருப்பது நல்லதல்ல. அது 'சன்ஸ்ட்ரோக்' எனப்படும் பாதிப்புக்கு நம்மை இழுத்துச் சென்றுவிடும். இதற்குக் காரணமே உடலில் நீர்ச்சத்து வேகமாக குறைந்துபோவதுதான். எனவே, வெயிலில் அதிகம் நடமாட வேண்டியிருந்தால்... தண்ணீர் அல்லது தரமான பானங்களை (இளநீர், நுங்கு, எலுமிச்சை சர்பத் போன்றவை) அதிகம் பருக வேண்டும். பொதுவாக தண்ணீரையும், பானங்களையும் கையோடு கொண்டு செல்வதே நல்லது. வெளியில் கிடைக்கும் தண்ணீர் மற்றும் பானங்களின் தரம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அவற்றின் காரணமாக வேறு ஏதேனும் உபாதைகள் வராமல் தடுக்க... இந்த விஷயத்தில் உஷாராகவே இருங்கள். பேருந்து, கார், ரயில் போன்ற வாகனங்களில் பயணித்தாலும்... அவ்வப்போது தண்ணீர் மற்றும் பானங்களை அருந்தத் தவறாதீர்கள்!

முத்துக்கள் பத்து!

மாலை வெயில் இதம்!

 'வெயில் நல்லது' என்றதுமே கண்மூடித்தனமாக, கண்ட நேரத்திலும் வெயிலில் போய் நிற்பது ஆபத்தானது. 'காலை எழுந்த உடன் படிப்பு... மாலை முழுதும் விளையாட்டு' என்கிற பாரதியின் வாக்குக்குக்கேற்ப... மாலை வெயில்தான் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக, மதியம் இரண்டு மணிக்கு மேல் வரும் வெயிலில் தைரியமாக நடமாடலாம். இது கோடைக் காலத்துக்கு மட்டுல்ல... எக்காலத்து வெயிலுக்கும் பொருந்தும்!

முத்துக்கள் பத்து!

வருடம் முழுவதும் சுவைக்கலாம்!

 கொளுத்தும் கோடை வெயிலை, எந்த அளவுக்கு சாதகமாகப் பயன்படுத்த முடியுமோ... அந்த அளவுக்கு திட்டமிட்டு பயன்படுத்தும் யுக்தியை நம் முன்னோர்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். அடுத்து வரப்போகும் மழை மற்றும் குளிர் காலங்களின் உணவுத் தேவையைச் சமாளிக்கத்தானே... வற்றல், வடாம், ஊறுகாய், உப்புக்கண்டம் என்று விதம்விதமான உணவுப் பொருட்களையும் கோடையிலேயே தயாரித்தார்கள்.

முத்துக்கள் பத்து!

சுற்றுப்புறத்தை ரசியுங்கள்!

 மழைக்காலம், பனிக் காலம் என்பதுபோலவே... கோடைக் காலம் என்பதும் நம்முடைய சுற்றுச்சூழலுக்கு மிகமிக முக்கியமாக தேவை. சொல்லப்போனால்... முந்தைய மழை மற்றும் பனிக்காலத்தின் காரணமாக முளைத்துவிட்ட பலவித தொல்லைகளையும் (சேறு, சகதி, கொசு இத்யாதி... இத்யாதி) துரத்தியடிப்பதே... கோடைதான். தெளிவான வானம்... பிரகாசிக்கும் நிலவு... என சுற்றுப்புறத்தை ரசித்து 'கோடையும் நல்லதொரு பருவம்’ என்பதை மனதில் பதியுங்கள்!

முத்துக்கள் பத்து!

விலை இல்லாமல் கிடைக்கும் வைட்டமின்' டி’!

 ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சி, சீரான ரத்த அழுத்தம் மற்றும் உடலின் சர்க்கரை அளவு, முறையான இன்சுலின் சுரப்பு, காசநோய் எதிர்ப்பு போன்றவற்றுக்கு வைட்டமின் 'டி’ மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது. இந்த அத்தியாவசியமான வைட்டமின் 'டி’-யை, சூரிய ஒளியில் இருந்தே தோல் செல்கள் உற்பத்தி செய்ய முடியும். வெயிலில் கொஞ்ச நேரம் இருந்தாலே விலையில்லா வைட்டமின் ’டி’ போதுமான அளவு கிடைத்துவிடும்!

முத்துக்கள் பத்து!

ஆடை சௌகரியம்!

 இறுக்கமான ஆடைகளை அணியும் சமயம், அசௌகரியமாக உணர்வதோடு... போதுமான அளவு வியர்வையும் வெளியேறாது. பூஞ்சை போன்ற தொற்றுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. வழக்கமாக அணியும் இறுக்கமான செயற்கை இழை ஆடைகளுக்கு விடைகொடுத்து, தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்து இன்புறும் காலமாக, கோடைக்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு