Published:Updated:

வாழ வைக்கும் வாழை நார்...

சாதனைப் பெண்மணி முனியம்மாள்!ஸ்டெப்ஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''வாழ்க்கையில நிறைய கஷ்டங்கள் கடந்து, இப்போ நல்ல நிலைமைக்கு வந்திருக்கேன். சிறுதொழில் மூலமா சாதிச்சி இருக்கேன்னு போன வாரம் டெல்லியில் ராகுல் காந்தி சார் கையால அவார்டு வாங்கினப்போ, ரொம்ப பெருமையா இருந்ததுங்க!''

- தனக்கு தினம் தினம் வந்து குவிந்து கொண்டிருக்கும் பாராட்டுகளுக்கு மத்தியில் மலர்ந்து சிரிக்கிறார், முனியம்மாள்.

திருவண்ணாமலை மாவட்டம், படவேடு பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். கணவர் தவறிவிட்ட நிலையில், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளோடு வசித்து வருகிறார். கடந்த 13 வருடங்களாக வாழை நாரில் கைவினைப்பொருட்கள் செய்து வரும் இவர், ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சிறுதொழில்களில் சாதனை செய்யும் பெண்களுக்கு 'அகில இந்திய தொழில் கூட்டமைப்பு’ சிறந்த சாதனையாளர்கள் விருது வழங்கும். இந்திய அளவில் 2013 ஆண்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில், முனியம்மாளும் ஒருவர்! இதற்காக ராகுல் காந்தியிடமிருந்து தங்கப் பதக்கமும், 1.5 லட்சம் ரொக்கப் பரிசும் வாங்கி வந்திருப்பவரை படவேட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.

வாழ வைக்கும் வாழை நார்...
வாழ வைக்கும் வாழை நார்...

''நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் படவேடுதாங்க. அஞ்சாவது வரைக்கும் படிச்சுட்டு, கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். 17 வயசுல கல்யாணம். ஆரம்பத்துல என் வீட்டுக்காரர் பொறுப்பா வேலைக்கு போனாரு. அப்புறம் கெட்ட சகவாசத்தால குடிக்கு அடிமையாகிட்டார். இந்த மனுஷனை நம்பினா... மூணு குழந்தைங்களோட நடுத்தெருவுலதான் நிக்கணும்னு புரிஞ்சுது. என் குழந்தைங்களை காப்பாத்த கூலி வேலைக்குப் போனேன். இருக்கிற காசை வெச்சு குடும்பத்தை ஓட்டினேன்.

வாழ வைக்கும் வாழை நார்...

2000 வருஷம் படவேட்டுக்கு 'சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை’யை சேர்ந்தவங்க வந்தாங்க. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பற்றி எங்களிடம் விரிவா பேசினாங்க. 12 பேரு சேர்ந்து 'ஸ்ரீ ரேணுகாம்பாள் மகளிர் குழு’வைச் ஆரம்பிச்சோம். அப்போ அதிகாரிங்க எங்கிட்ட, 'உங்க பகுதியில் வாழை மரங்கள் அதிகமா இருக்கு. ஆனா, வாழை நார்கள் எல்லாம் எந்தப் பயன்பாடும் இல்லாம மக்கிப் போகுது. அதே வாழை நார்களால கைவினைப் பொருட்கள் செய்யலாம். நீங்களும் தொழில் கத்துக்கிட்ட மாதிரி இருக்கும்!’னு அவங்க சொன்னது, என் வாழ்க்கையில முன்னேற்றத்தைக் கொண்டு வரும் அப்போ எனக்குத் தெரியல. இருந்தாலும், பெரிய பெரிய அதிகாரிங்க சொல்றதைக் கேட்போம்னு சம்மதிச்சேன். என்னை பெங்களூருவுக்கு கூட்டிக்கிட்டு போனாங்க. அங்கே வாழை நார்ல பூக்கூடையில இருந்து அழகழகான பூக்கள் வரை எல்லா கலைப்பொருட்கள் எப்படி செய்யலாம்னு ஒரு வாரம் கத்துக்கொடுத்தாங்க'' என்றவர்,

''இங்க எங்க ஊர்ல வாழை நார்கள் அதிகமா கிடைக்கும்ங்கிறதால, எங்க குழுவுக்கு அதை கத்துக் கொடுத்தேன். எல்லோருமா சேர்ந்து வாழை நார் பொருட்கள் செய்ய ஆரம்பிச்சோம். அதை 'சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை’ எங்களுக்கு விற்பனை செய்து கொடுப்பாங்க. ஒரு பொருளுக்கு எங்களுக்கு 200 முதல் 400 ரூபாய் வரை பணம் கிடைக்கும். எங்களோட வருமானத்தையும் வெற்றியையும் பார்த்துட்டு எங்க சுத்து வட்டாரப் பெண்களும் இதில் ஆர்வமானாங்க. அவங்களுக்கு எல்லாம் எங்க அறக்கட்டளை சார்பா என்னை பயிற்சி கொடுக்கச் சொன்னாங்க. நானும் ஒவ்வொரு குழுக்களா பயிற்சி கொடுத்தேன். எல்லோரும் ஆர்வமா கத்துக்கிட்டாங்க.

இந்த சுயதொழிலை கத்துக்கிட்டவங்களுக்கு பேங்க்ல 3 லட்சம் வரை லோன் கொடுத்தாங்க. தொழிலை ஆரம்பிச்ச ரெண்டே வருஷத்துல அது எங்க வாழ்க்கையையே மாத்திடுச்சு. தினமும் 30 ரூபாய் கூலி வேலைக்குப் போன நாங்க எல்லோரும் இப்போ முதலாளிகள். எங்க வேலையை நாங்களே தீர்மானிச்சுக்குறோம். படவேடு சுத்தி இருக்கிற 29 கிராமங்களைச் சேர்ந்த சுயஉதவிக் குழு பெண்களும், இப்போ வாழை நார் தொழில் செய்றாங்க!''

வாழ வைக்கும் வாழை நார்...

-  ஒரு பெண்ணின் முயற்சியும் பயிற்சியும் பல கிராமப் பெண்களின் வாழ்வில் விடியல் ஏற்படுத்திய கதை வியப்பாக இருந்தது!  

''டெல்லிக்கு போயிருந்தப்போ ராகுல் காந்தி ஐயா என்கிட்ட இந்தியில பேசினாரு. பக்கத்துல இருந்தவர் எங்கிட்ட தமிழ்ல, 'சாதிச்சி இருக்கீங்க. இன்னும் நீங்க முன்னுக்கு போகணும்னு சொன்னார்!’னு மொழிபெயர்த்து சொன்னார். எனக்கு ஒரு நிமிஷம் கண்ணு கலங்கிடுச்சி. ஆனா, நான் அந்த அளவுக்கு ஏதும் சாதனை பண்ணலைங்க. சின்ன வயசுல நாம பட்ட கஷ்டம்... நம்ம குழந்தைங்க படக்கூடாதுன்னு ஒரு வைராக் கியம். நான் மட்டும் முன்னுக்கு வந்தா போதும்னு ஒதுங்காம, பல கிராமப் பெண்களுக்கும் அந்த தெம்பு கிடைக்கணும்னு உழைச்சேன். இன்னைக்கு எல்லோரும் நிம்மதியா இருக்கோம்!''

- கண்களில் நிறைவு முனியம்மாளுக்கு.

'சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை’ செயல் இயக்குநர் கிருஷ்ணன், ''முனியம்மாள்கிட்ட இருக்கிற அளவுக்கு தன்னம்பிக்கையை வேற யார்கிட்டயும் நாங்க பார்த்ததில்ல. அப்போ வாழை நார் பற்றி சொன்னபோது, 'நான் செய்யுறேன் சார்!’ முன்வந்தாங்க. அந்த ஆர்வம் இப்போ வரை தொடருது. இந்த விருதுக்கு முழுக்க முழுக்க தகுதியானவங்க. கணவர் இல்லாம குழந்தைகளை வளர்த்ததில் அவங்க பட்ட கஷ்டம் கொஞ்சம்நஞ்சமில்ல. ஆனா, எல்லாத்தையும் தாண்டி இன்னிக்கு பெண்களுக்கு ஒரு ரோல்மாடலா இருக்காங்க!'' என்றார் பெருமையும் பாராட்டுமாக!

- ஏ.சசிகுமார், படங்கள்: கா.முரளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு