Published:Updated:

‘கட்டித் தங்க’த்தைவிட லாபம் தரும் ‘காகித தங்கம்’!

சேமிப்பு சிறப்பிதழ்இன்வெஸ்ட்மென்ட்

##~##

னந்தி, கமலா இருவரும் தோழிகள். ஐந்தாண்டுகளுக்கு முன் இருவரும் ஒரு லட்ச ரூபாய்க்கு தங்கம் வாங்கினார்கள். இவர்கள் இருவரும் அண்மையில் தாங்கள் வாங்கிய தங்கத்தை விற்றார்கள். ஆனந்திக்கு சுமார் 2 லட்ச ரூபாயும், கமலாவுக்கு 2 லட்சத்து 32,000 ரூபாயும் கிடைத்தது.

''கமலாவுக்கு மட்டும் எப்படி கூடுதலாக 32,000 ரூபாய் கிடைத்தது?'' என்கிறீர்களா?

ஆனந்தி ஆபரண நகையாக வாங்கினார். வாங்கும்போதே சேதாரம் 12% போனது. விற்கும்போது சேதாரம் 2% போனது. ஐந்தாண்டு காலத்தில் தங்கத்தின் விலை ஆண்டுக்கு சராசரியாக 17% அதிகரித்த நிலையில் நகையை விற்றது மூலம் ஆனந்திக்கு 2 லட்ச ரூபாய் கிடைத்தது. கமலா, 'காகித தங்கம்' என்கிற பேப்பர் கோல்டு முறையில் முதலீடு செய்ததால், வாங்கும்போது, விற்கும்போது சேதாரம் போகவில்லை. தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப அவருக்கு 2,32,000 ரூபாய் கிடைத்தது!

தங்கத்தையும் தமிழர்களையும் பிரிக்க முடியாது. அந்த அளவுக்கு அது அவர்களை ஆபரணமாக, முதலீடாக ஆக்கிரமித்துள்ளது. தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு நீண்ட காலத்தில் லாபகரமாக இருந்து வருகிறது. எனவே, கையில் கொஞ்சம் அதிக பணமிருந்தால் அல்லது அட்சய திருதியை, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற காலங்களில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகமாக உள்ளது. தங்கத்தில் லாபகரமாக முதலீடு செய்வது என்கிறபோது காயின்கள், மியூச்சுவல் ஃபண்ட் சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப், இ-கோல்டு என்கிற திட்டங்கள் முன்னணியில் இருக்கின்றன.

‘கட்டித் தங்க’த்தைவிட லாபம் தரும் ‘காகித தங்கம்’!

கோல்டு காயின்கள்

ஆபரணத் தங்க நகையோடு ஒப்பிடும்போது சில சதவிகித சேதாரத்தில் தங்கத்தில் முதலீடு செய்யும் எளிய முறையாக காயின்களை வாங்குவது இருக்கிறது. வாய்ப்பு வசதிக்கு ஏற்ப அரை கிராம் தொடங்கி, 100 கிராம் என்பதுபோல் தங்க காயின்களை வாங்கலாம். இந்த காயின்கள் நகைக் கடைகள், தபால் அலுவலகம், வங்கிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.  

தங்க காயின்களை விற்கும் நகைக் கடைகள் அவற்றை திரும்ப எடுத்துக்கொண்டு பெரும்பாலும் பணம் தருவதில்லை. அப்படியே தந்தாலும் விலையில் சுமார் 5 சதவிகிதம் தள்ளுபடி செய்துவிடுகின்றன. அந்த வகையில் இந்த காயின்களைக் கொடுத்து, நகைக் கடைகளில் வேறு தங்கம் அல்லது நகை வாங்கிக்கொள்வது லாபகரமாக இருக்கும். அதுவும் காயின் வாங்கிய கடையில் விற்றால் சேதாரம் குறைவாக இருக்கும். வேறு கடை என்கிறபோது சுமார் 3 சதவிகிதம் சேதாரம் என்று கழித்துவிடுவார்கள்.

இந்தியாவில் வங்கிகள், அவை விற்ற கோல்டு காயின்களை திரும்ப வாங்கிக்கொள்வது நடைமுறையில் இல்லை. மேலும், தங்க காயின்களை வங்கிகள் அடமானம் எடுத்துக்கொள்வதும் அரிதாகத்தான் உள்ளது. அவசரத் தேவைக்கு தங்கத்தை அடமானம் வைக்க வேண்டி இருக்கும் என்றால், காயினாக வாங்குவதற்கு பதில் சேதாரம் குறைவாக உள்ள நகைகளை வாங்குவது நல்லது.  

வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் வாங்கும் கோல்டு காயின்கள் சுத்த தங்கமாக இருக்கும். இந்த தரத்துக்கு ஏற்ப விலை, சந்தை விலையைவிட கிட்டத்தட்ட 5 சதவிகிதம் அதிகமாக இருக்கும். ஆனால், அவர்கள் திரும்ப வாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதால், நகைக் கடைகளில் கோல்டு காயின்கள் வாங்குவதுதான் லாபம்.  

‘கட்டித் தங்க’த்தைவிட லாபம் தரும் ‘காகித தங்கம்’!

கோல்டு இ.டி.எஃப் ஃபண்ட்

தங்கத்தை முதலீடு நோக்கில் வாங்குபவர்களுக்காக கொண்டு வரப்பட்டிருக்கும் முதலீட்டு திட்டம்தான் கோல்டு இ.டி.எஃப் (Gold ETF -Gold Exchanged Traded Fund) என்ற காகித தங்க முதலீடு. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய டீ-மேட் என்கிற எலெக்ட்ரானிக் கணக்கு வேண்டும். இது வழக்கமாக நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய பயன்படுத்தும் டீ-மேட் கணக்குதான். இதற்கு ஆண்டு பராமரிப்பு கட்டணம் சுமார் 300 ரூபாய். இந்த டீ-மேட் கணக்கு தொடங்க வருமான வரித்துறை வழங்கும் நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் வங்கிக் கணக்கு வேண்டும்.

கோல்டு இ.டி.எஃப். முதலீட்டில் ஒரு யூனிட் என்பது ஒரு கிராம் தங்கத்தை குறிக்கும். குறைந்தது ஒரு யூனிட் வாங்க வேண்டும். அந்த வகையில் முதலீடு செய்ய ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு இணையான தொகை (சுமார் 2,700 ரூபாய்) தேவை. இந்த முதலீட்டு வாய்ப்பை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அளிக்கின்றன. புதிய வெளியீடாக (என்.எஃப்.ஓ.) வரும்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் வாங்கிக் கொள்ளலாம். அதன் பிறகு இதன் யூனிட்கள் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். பிறகு பங்குச் சந்தை இயங்கும் காலை 9.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை எப்போது வேண்டுமானாலும் இந்த யூனிட்களை வாங்கவோ... விற்கவோ செய்யலாம். தங்கத்தின் விலை மாற்றத்தை பொறுத்து லாப, நஷ்டம் இருக்கும். இதில் முதலீடு செய்பவர்களுக்கு தங்கமாக தரமாட்டார்கள். யூனிட்களை விற்று கிடைக்கும் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த முதலீட்டு முறையில் சேதாரம் இல்லை. மேலும், நகை, கோல்டு காயின்கள் போல் லாக்கரில் பாதுகாக்கும் பிரச்னை இல்லை. விற்கும்போது, விலையில் தள்ளுபடி எதுவும் இல்லை என்பதால் தங்க விலை ஏற்றத்தின் முழு லாபத்தையும் பெற முடியும். யூனிட்களை வாங்க மற்றும் விற்க அதிகபட்சம் 2% தான் செலவு இருக்கும்.  

கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்ட்

கோல்டு இ.டி.எஃப். திட்டத்திலிருந்து உருவானதுதான் 'கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்ட்'. இதையும் காகித தங்கம் என்று சொல்லலாம். இதில் திரட்டப்படும் நிதி, அதே நிறுவனத்தின் கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் முதலீடு செய்யப்படும். இதில் முதலீடு செய்ய டீ-மேட் கணக்கு தேவை இல்லை. பான் கார்டு இருந்தால் போதும் என்பது சலுகை. மேலும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 1,000 ரூபாய் வீதம்கூட முதலீடு செய்து வரலாம்.

இதில் வருமானத்தைப் பொறுத்தவரையில், கோல்டு இ.டி.எஃப். திட்டத்தைவிட ஓரிரு சதவிகிதம் குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு ஓராண்டில் கோல்டு இ.டி.எஃப்-ல் 17% வருமானம் கிடைக்கிறது என்றால் கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்டில் சுமார் 15% முதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இ - கோல்டு திட்டம் (Electronic Gold- e-gold)

இது, 'கோல்டு இ.டி.எஃப்' திட்டம் போன்றதொரு திட்டம்தான். இதற்கும், தனியாக டீ-மேட் கணக்கு தொடங்க வேண்டும். ஆண்டு பராமரிப்பு கட்டணமும் (300 ரூபாய்) உண்டு. 'நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச்' (NSEL-  National Spot Exchange) நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள நிறுவனங்களின் மூலம் நாம் முதலீடு செய்ய முடியும். இ - கோல்டு முறையில், ஒரு கிராம் தங்கம்கூட வாங்கலாம்.

கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் தங்கமாக தர மாட்டார்கள். யூனிட்களை விற்று நாம்தான் சந்தையில் தங்கமாக வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால், இ - கோல்டு முறையில் 24 கேரட் சுத்தமான தங்கத்தை தேவைப்படும்போது டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். செய்கூலி, சேதாரம் இல்லாமல், சந்தை விலைக்கே தங்கமாக வாங்கலாம். தேவைப்படும்போது மட்டுமே டெலிவரி என்பதால், தங்கத்தை பாதுகாக்கும் லாக்கர் செலவும் இல்லை என்பது கூடுதல் லாபம்.!  

உங்களின் வாய்ப்பு வசதிக்கு ஏற்ற திட்டத்தை தேர்ந்தெடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய தங்கமான வாழ்த்துகள்!

- சேனா சரவணன்

‘கட்டித் தங்க’த்தைவிட லாபம் தரும் ‘காகித தங்கம்’!

காகித தங்க முதலீட்டைப் பொறுத்தவரை, யாருக்கு எந்த திட்டம் ஏற்றது என்பது பற்றி விளக்குகிறார், பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன்.

''கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் முதலீடு செய்யும்போது டீ-மேட் கணக்கு பராமரிப்புக்கு ஆண்டுதோறும் சுமார் 200-300 ரூபாய் செலவாகும். அந்த வகையில் அதிக தொகையை முதலீடு செய்பவர்கள் இதை தேர்வு செய்யலாம். குறைவான தொகையை முதலீடு செய்பவர்களுக்கு டீ-மேட் பராமரிப்பு கட்டணம் கூடுதல் செலவாக இருக்கும் என்பதால், அவர்கள் கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்டை தேர்வு செய்யலாம். இதில் முதலீடு செய்ய பான் கார்டு மட்டும் இருந்தால் போதும்.

இன்னும் 10, 15 ஆண்டுகள் கழித்துதான் தங்க நகையாக தேவைப்படும் என்கிறபோது காகித தங்கம்தான் சிறந்தது. அந்த யூனிட்களை விற்று புத்தம்புதிதாக நவீன வடிவமைப்புகளில் தங்க நகைகளை வாங்கிக் கொள்ள முடியும்.

பொதுவாக, ஒருவரின் முதலீட்டுக் கலவையில் தங்கத்தின் பங்களிப்பு சுமார் 15 முதல் 20% இருக்க வேண்டும். ஆனால், தமிழர்களின் வாழ்வோடு தங்கம் என்பது நெருக்கமான ஒன்றாக இருக்கிறது. பல குடும்ப விழாக்களில் தங்கம்தான் முக்கிய பரிசுப் பொருளாக இருக்கிறது. மேலும், சீர் வரிசையில் அதுதான் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என்பதால், உங்களின் தேவையைக் கணக்கிட்டு அதற்கு ஏற்ப காகித தங்கத் திட்டங்களில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.''