Published:Updated:

“காத்திருந்தேன்... கைப்பற்றினேன்!”

நம்பிக்கைப் பெண்மணி 57 வயது கீதாஸ்டெப்ஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''பி.யூ.சி முடிச்சதும் 38 வருஷத்துக்கு முன்ன வேலைவாய்ப்பு அலுவலகத்துல பதிவு செஞ்சேன். இப்போ 57 வயசுல அரசாங்க வேலை கிடைச்சிருக்கு!''

- சந்தோஷம் கீதாவின் குரலில்!

படித்து முடித்ததும் எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்கிற கனவோடு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவிட்டு காத்திருப்பவர்கள் நம் நாட்டில் ஏராளம். அப்படி பதிவு செய்பவர்கள், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தவறாது தங்க ளது பதிவை நம்பிக்கை யோடு புதுப்பித்தும் வருகிறார்கள். ஆனால், இவர்களில் அதிகமானோர், குறிப்பிட்ட வயதைக் கடந்தவுடன் புதுப்பிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். காரணம், 'இனிமே எங்கே நமக்கு அரசாங்க வேலை கிடைக்கப் போகுது’ என்கிற சலிப்புதான். ஆனால், சென்னையைச் சேர்ந்த கீதா, நம்பிக்கையுடன் தனது பதிவை புதுப்பித்து வர, 57 வயதில் அவருக்குக் கிடைத்திருக்கிறது அரசு வேலை!

சேப்பாக்கத்தில் உள்ள தன் இல்லத்தில் இனிப்புடன் நம்மை வரவேற்ற கீதா, ''பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையிலதான். என் கணவர் தனியார் நிறுவனத்துல செக்யூரிட்டியா வேலை செய்றார். எங்களுக்கு ரெண்டு பெண்கள். மூத்த பெண் பி.இ முடிச்சிருக்கா. ரெண்டாவது பெண் பி.காம் ரெண்டாவது வருஷம் படிக்கிறா. நான் பி.யூ.சி முடிச்சதுமே, தனியார் கம்பெனியில் தட்டச்சரா வேலைக்கு சேர்ந்துட்டேன். தொடர்ந்து அதே கம்பெனியிலதான் வேலை. வறுமையான சூழல்ல படாத கஷ்டம் இல்லை. இருந்தாலும் நானும் கணவரும் சொற்ப சம்பளத்தோட, வங்கிக் கடன் வாங்கி ரெண்டு பொண்ணுங்களையும் படிக்க வெச்சோம்'' என்று குடும்ப அறிமுகம் தந்து, தொடர்ந்தார்.    

“காத்திருந்தேன்... கைப்பற்றினேன்!”

''1975-ல் பி.யூ.சி முடிச்சப்போ, என்கூட படிச்ச நிறைய பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செஞ்சாங்க. நானும் பதிவு செஞ்சேன். ஒருநாள் இல்லை ஒருநாள் அரசு வேலை கிடைக்கும்னு நம்பிக்கையோட தவறாம பதிவை புதுப்பிச்சுட்டே வந்தேன். நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் 40 வயசுக்கு மேலயும் நான் பதிவை புதுப்பிக்கறதை சலிப்பாவும்... சிரிப்பாவும் பேச ஆரம்பிச்சாங்க. 'இனி எங்க உனக்கு அரசாங்க வேலை கிடைக்கப் போகுது’னு 'அறிவுரை’ வேற சொன்னாங்க. எதையும் கண்டுக்காம, அதை ஒரு கடமையாவே செய்துட்டு வந்தேன். அதன் பலன், இப்போ நானும் அரசு ஊழியர்!

“காத்திருந்தேன்... கைப்பற்றினேன்!”

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள நிலஉடைமை பிரிவில் வேலையில் சேர்ந்திருக்கேன். வேலை கிடைச்சது ஒருபக்கம் சந்தோஷமா இருந்தாலும், காலாகாலத்தில் கிடைக்கலையேங்கற வருத்தமும் இருக்கு. அடுத்த வருஷமே நான் ஓய்வு பெற்றிடுவேன். இருந்தாலும் ஒரு வருஷமாவது அரசு வேலை பார்க்கப் போறது சந்தோஷமா இருக்கு. ஒருவேளை, மத்தவங்களைப்போல நானும் 40 வயதுக்கு மேல, இனிமே எங்கே நமக்கு அரசு வேலை கிடைக்கப் போகுதுனு முடிவெடுத்து பதிவைப் புதுப்பிக்காம இருந்திருந்தா... இன்னிக்கு எல்லாருக்கும் உதாரணமா, நம்பிக்கையா... நான் மாறியிருக்க முடியாது. அந்த வகையிலயும் எனக்கு இப்ப ரொம்ப சந்தோஷமாவே இருக்கு'' என்றார் மனதிலும் புன்னகையுடன்!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவது, புதுப்பிப்பது பற்றிய விவரங்களைப் பெறுவதற்காக... ''57 வயதிலும் வேலை கொடுப்பீர்களா...?'' என்றபடி சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின், மண்டல துணை இயக்குநர் (பொறுப்பு)  த.விஜயகுமாரைச் சந்தித்தோம். அவர் நம்மிடம், ''மக்களுக்கு அரசுப் பணி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவே மாவட்டம்தோறும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் செயல்பட்டு வரு கின்றன. இவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருமே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். இதற்கு வயது வரம்பு... 14 முதல், 57 வயது வரை. இதன் மூலம் அவர்களுக்கு உரிய பணி வாய்ப்புகளைப் பெறலாம்!

மாவட்டம்தோறும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம், ஆலோசனை முகாம் உள்ளிட்டவற்றை அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. தனியார் நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்புகளையும் எங்கள் அலுவலகங்கள் மூலமாக உருவாக்கித் தருகிறோம். இதையெல்லாம் மக்கள்தான் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அக்கறையோடு சொன்னவர், வேலை வாய்ப்பு பதிவு தொடர்பான முக்கியக் குறிப்புகளையும் பட்டியலிட்டார் (பார்க்க: பெட்டி செய்தி).

- சா.வடிவரசு படங்கள்: ரா.மூகாம்பிகை

முக்கியக் குறிப்புகள்!

 எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்களில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 வயது வரை, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 32 வயது வரை, எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 35 வயது வரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பினை பெற முடியும். இதற்கு மேல் படித்தவர்கள், 57 வயது வரையிலும் பதிவு செய்து வேலை வாய்ப்பினை பெறலாம்.  

“காத்திருந்தேன்... கைப்பற்றினேன்!”

  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், அதற்குக் குறைவாக படித்தவர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டையை வைத்து பதிவு செய்துகொள்ளலாம். ஓட்டுநர் பணி போன்ற பணிவாய்ப்புகளை இதன் மூலம் பெற முடியும்.

“காத்திருந்தேன்... கைப்பற்றினேன்!”

 பள்ளிப் படிப்பு படிக்காதவர்கள்... பிறப்பு சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகிய இரண்டையும் வைத்து பதிவு செய்யலாம். இவர்களுக்கு துப்புரவு பணி போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

“காத்திருந்தேன்... கைப்பற்றினேன்!”

 மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவைப் புதுப்பிக்க வேண்டும். அதன்படி ஜனவரி மாதம் ஒருவர் புதுப்பிக்க வேண்டும் என்றால், அவர் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் வரை புதுப்பித்துக் கொள்ளலாம். அடுத்த 18 மாதங்கள் வரையில்கூட இவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அப்படியும் தவறுபவர்களுக்கு... அரசாங்க அறிவிப்பு மூலம் சலுகைகள் தரப்படுகின்றன.

“காத்திருந்தேன்... கைப்பற்றினேன்!”

ஒரு மாவட்டத்தில் பதிவு செய்தவர், வேறு மாவட்டத்துக்கு மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர், சென்னை மாவட்டத்துக்கு மாற நினைத்தால்... அவர் சென்னைக்கு குடிபெயர்ந்ததற்கு அத்தாட்சியாக சென்னை வட்டாட்சியரிடமிருந்து பெற்ற குடும்ப குடிபெயர்ச்சி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் நகலை, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலரிடம் உறுதிபெற்று பின்னர், சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றிக்   கொடுப்பார்கள். இப்படி ஓர் ஆண்டுக்கு ஒருமுறைதான் மாற்றமுடியும்.  

“காத்திருந்தேன்... கைப்பற்றினேன்!”

புதிதாக பதிவு செய்பவர்கள், புதுப்பிக்க நினைப்பவர்கள், கூடுதல் தகுதிகளை இணைக்க நினைப்பவர்கள் என அனைவருமே வேலைவாய்ப்பு அலுவலகத்தின் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவேகூட பதிவு செய்யலாம். நேரில் செல்லத் தேவையில்லை. உங்களுக்கான  அனைத்து வழிகாட்டல்களும் இதிலேயே கிடைக்கும். தவறான தகவல்கள் கொடுத்தால், சான்றிதழ் சரிபார்த்தலின்போது பிடிபட்டு, அதற்கான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பதிவு செய்தபின் அந்தப் பக்கத்தை அப்படியே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு