Published:Updated:

வியக்க வைக்கும் ‘வெற்றிச் செல்வி’கள்!

ப்ளஸ் டூ ரிசல்ட்...சக்சஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

குறைந்தபட்சம் அரை லட்சத்தில் கல்விக் கட்டணம், ஐந்தாறு டியூஷன்கள், படித்த பெற்றோர், பிரமிக்க வைக்கும் பெரிய பள்ளி... இப்படி எதுவுமே இல்லாமல், கிராமங்களிலும், அரசுப் பள்ளிகளிலும், வறுமையிலும் இருந்து வந்த மாணவர்கள் வென்றிருக்கும் மதிப்பெண்கள்... திரும்பிப் பார்க்க வைக்கின்றன! சமீபத்தில் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அப்படி சாதித்த சில சுயம்புச் செல்வங்கள் இங்கே...

பவித்ரா, பெலோமினாஸ் மேல்நிலைப் பள்ளி, திருச்சி (1135/1200)

''முடி திருத்தும் தொழிலாளியோட மக நான். தினமும் 16 மணி நேரம் நின்னுட்டே வேலை பார்க்கும் அப்பா, வீட்டுக்கு வந்ததும் ஓய்ந்து படுக்கணும்னு நினைக்காம, படிப்பை பற்றி விசாரிப்பார். வீட்டுப் பாடம் செய்றப்போ பக்கத்துலயே இருந்து பார்த்துட்டு இருப்பார். 'பசங்க எல்லாரும் டியூஷன் போறாங்களே, நீயும் போறியாம்மா?’னு அம்மா கேட்டப்ப... வேண்டாம்னு சொல்லிட்டேன்.

ஜெமா மிஸ், உறுதுணையா இருக்க, எங்க அண்ணனும் பாடம் சொல்லிக் கொடுக்க, இப்ப நான் நிமிர்ந்து நிக்கறேன். 1,150 மார்க் இலக்கு வெச்சுப் படிச்சேன். 1,135 மார்க் வாங்கியிருக்கேன். பி.இ, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கணும்னு ஆசை. அப்பா, எங்களுக்காக இன்னும் மூணு வருஷம் கால் கடுக்க நின்னா போதும்... அப்புறம், உட்கார வெச்சு அவரை நான் தாங்குவேன்!''

கலைமணி, பார்வையற்ற மாணவி, ஈவா மேரி கோக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் (1148/1200)

''அரியலூர் மாவட்டம், செந்துறை, வடக்குபரணம் கிராமம்தான் என் ஊர். வரலாறு பாடத்தில் மாநில அளவில் நான் இரண்டாம் இடம் வாங்கியிருக்கிறதுக்காக ஊரே பாராட்டிட்டு இருக்கு. பிறவியிலேயே பார்வைக் குறைபாடு. 10% பார்வைதான் தெரியும். நான் சின்னக் குழந்தையா இருக்கறப்ப, என்னோட குறைபாட்டை நினைச்சு குடும்பமே வேதனைப்பட்டிருக்கு. அந்த நேரத்தில் எங்கப்பாவை குடும்ப தகராறில் வெட்டிக் கொன்னுட்டாரு சித்தப்பா. தம்பி, தங்கச்சி அப்புறம் நான்னு மூணு பேரையும் தாத்தா வீட்டுலயே விட்டுட்டு, அம்மாயி வீட்டுக்குப் போயிட்டாங்க எங்கம்மா. போஸ்ட் ஆபீஸ்ல வேலை பார்த்த தாத்தாதான் எங்களுக்கு எல்லாம்.

சின்ன வயசுல, என் வயசு பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கு போகும்போது, வீட்டு வாசல்ல ஏக்கத்தோட உட்கார்ந்திருப்பேன். அதைப் புரிஞ்சுகிட்ட தாத்தா, உள்ளூர் பள்ளிக்கூடத்துல அஞ்சாவது வரைக்கும் படிக்க வெச்சார். அதுக்கு மேல வெளியூர் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியல. அப்போ தான், பெரம்பலூர் ஈவா மேரி கோக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி டீச்சருங்க, அவங்க பள்ளிக்கூடத்துல சேர்த்து படிக்க வைக்கறதுக்காக கூட்டிட் டுப் போனாங்க. பத்தாம் வகுப்பில் 466 மார்க் எடுத்தேன். ப்ளஸ் டூ-வுல 1,148.

வியக்க வைக்கும் ‘வெற்றிச் செல்வி’கள்!

படிப்புல மட்டுமில்ல, பார்வையற்றவர்களுக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள்ல மாவட்ட அளவில் முதல் பரிசு வாங்கி இருக்கேன். தாத்தா, பாட்டி, என்னோட சிறப்பாசிரியர்கள் ஹெலன் ஜெயராணி மிஸ், பெல்சி மிஸ், ஹேமா ஆரோக்கிய மேரி மிஸ், ஜெயா மேரி மிஸ்களும், பள்ளி தலைமை ஆசிரியர் சுகன்யா மேடம் மற்றும் பள்ளி தாளாளர் வரதராஜன் அய்யா இவங்க எல்லாம் இல்லைனா, இந்த வெற்றி எனக்கில்லை.

கலெக்டராகணும்ங்கிறதுதான் என் ஆசை. தம்பி, தங்கையை நல்லா படிக்க வைக்கறதோட... கஷ்டப்படுகிற பிள்ளைகளுக்கும் உதவி செய்யணும்!''

ரஞ்சிதா, முத்துலெட்சுமி ரெட்டியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கன்னிவாடி, திண்டுக்கல் மாவட்டம் (1036/1200)

''ஏழ்மையான விவசாய குடும்பத்து பொண்ணு நான். பத்தாம் வகுப்பில் 471 மதிப்பெண்கள். கணிதத்தில் மட்டும் 100 மதிப்பெண்கள். பதினோராம் வகுப்புக்கு எல்லாரும் வெளியூர்ல பெரிய பள்ளிக்கூடத்துல சேர்ந்து படிச்சாங்க. நான் அம்மாவோட கூலி வேலைக்கு போயிட்டு, உள்ளூர்லயே படிச்சேன். களை வெட்டுறதுல ஆரம்பிச்சு... கதிர் அறுவடை செய்றது வரைக்கும் லீவு நாட்கள்ல நானும் என் தங்கையும் 'பிஸி’யா இருப்போம்.  அப்பாவும் அம்மாவும் வேலை முடிச்சு வர ராத்திரி ஆகிடும். நானும் தங்கச்சியும் அவங்களுக்கு சமைச்சு வெச்சு, வீட்டு வேலைகளைப் பார்த்து வைப்போம். இதுக்கு இடையில அப்பப்போ படிப்பு. கூலி வேலை போய் சேர்க்கிற காசில் தேவையான நோட்டு, புத்தகங்கள் வாங்கிக்குவோம்.

எனக்கு அக்ரி படிக்கணும்னு ஆசை. எங்க குடும்பத்தை வாழ வைக்கிறதே விவசாயம்தானே?!''

வியக்க வைக்கும் ‘வெற்றிச் செல்வி’கள்!

கவிதா, அரசுப் பள்ளி, கும்பகோணம் (1165/1200)

''அப்பா சிவராமன் நெசவுத் தொழில் பண்றாங்க. அப்பாவும் அம்மாவும் நான் நல்ல மதிப்பெண் வாங்குவேன்னு என்னைவிட அதிகமா நம்பினாங்க. அவங்களுக்காகவே அதிக முயற்சி எடுத்துப் படிச்சேன். 1,165 மதிப்பெண்கள் வாங்கினதோட காமர்ஸ், பிசினஸ் மேத்ஸ் ரெண்டுலயும் நூத்துக்கு நூறு எடுத்திருக்கேன். மின்வெட்டு பிரச்னையால அப்பாவோட தொழில்ல ஏகப்பட்ட பிரச்னைகள். ஆனாலும் என் படிப்புக்குத் தேவையானதை செய்து கொடுக்கத் தவறினதில்ல. ஆரம்பத்தில் மெழுகுவர்த்தியில் படிச்ச எனக்கு, எலெக்ட்ரானிக் சார்ஜர் லைட் வாங்கிக் கொடுத்தாங்க. அதுதான் இந்த மதிப்பெண்கள்! ஆடிட்டராகணும்னு ஆசை. மின்வெட்டு தீர்ந்து, அப்பாவோட தொழில் சிரமங்கள் குறையணும்கிறதுதான் என்னோட வேண்டுதல்.''

பிரியங்கா, சவுரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப் பள்ளி, இராயப்பன்பட்டி, தேனி (1110/1200)

''எங்கப்பா, எங்களை விட்டுட்டு பிரிஞ்சு போயிட்டார். அதுக்குப் பிறகு, டீக்கடை கிளாஸ் கழுவுறதுல இருந்து வீட்டு வேலை வரைக்கும் பார்த்துதான் என்னையும் தம்பியையும் அம்மா வளர்த்தாங்க. நல்லா படிக்கணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. வீட்டோட கஷ்டத்தை உணர்ந்து படிச்சதால, பத்தாவதுல 481 மார்க். வேதியியல் ஆசிரியர் பாண்டியன், என்னோட ஏழ்மை நிலைமையைப் பார்த்து இலவசக் கல்விக்கு ஏற்பாடு பண்ணினார். இப்போ அதுக்கு மரியாதை செய்ற விதமா நல்ல மதிப்பெண்கள் எடுத்த சந்தோஷம் எனக்கும் எங்கம்மாவுக்கும். கல்லூரிப் படிப்பை முடிச்சுட்டா, அம்மாவோட கஷ்டம் எல்லாம் தீர்ந்துடும். ஆனா, வழி கிடைக்குமானுதான் தெரியல.''

- சா.வடிவரசு, சி.ஆனந்தகுமார், வீ.சக்தி அருணகிரி, பி.விவேக் ஆனந்த், க.அருண்குமார், ச.மஞ்சுளா

படங்கள்: ஜெ.வேங்கடராஜ். எம்.ராமசாமி, வீ.சிவக்குமார், ஜெ.ராம்குமார், தே.தீட்ஷித்

வியக்க வைக்கும் ‘வெற்றிச் செல்வி’கள்!

அசத்திய இரட்டையர்!

ன்னிரண்டாம் வகுப்புப் தேர்வில் காதுகேளாதோருக்கான பிரிவில் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றுள்ளார்கள் சென்னை, அண்ணா நகர் மேற்குப் பகுதியில் உள்ள 'அஜய் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளி’யின் மாணவி களான வர்ஷா மற்றும் பாக்யா.

''அப்பா சீனிவாசன், பெயின்ட்டர். எங்கம்மா வீட்டு வேலை பார்க்கறாங்க. அவங்க ரெண்டு பேருக்குமே காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. அந்தக் குறைபாடு அப்படியே காலேஜ் படிக்கிற எங்க அக்காவுக்கும், எங்களுக்கும் வந்துடுச்சு. ஒண்ணாம் வகுப்புல இருந்தே இலவசமா கல்வியும், புத்தகங்களும் கொடுக்கறாங்க. நாங்களும் பொறுப்பா படிச்சோம். எங்களால எதையும் ரொம்ப நாளைக்கு நினைவுல வெச்சுருக்க முடியாது. அதனால் எப்பவும் படிச்சுட்டேதான் இருப்போம். சனி, ஞாயிற்றுகிழமைகள்ல கூட தலைமையாசிரியை ராணி டீச்சரும், மேனகா டீச்சரும் எங்களை வரவழைச்சு பயிற்சி கொடுத்தாங்க. இப்போ நாங்க ஸ்டேட் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் ரேங்க் வாங்கியிருக்கோம்!'' என்றனர் சந்தோஷமாக.

வர்ஷா 1000-க்கு 911 மதிப்பெண்களும், பாக்யா 1000-க்கு 909 மதிப்பெண்களும் பெற்று முறையே மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். அடுத்ததாக பி.காம்., படித்து வங்கித் துறையில் பணிபுரிய விரும்பம் தெரிவிக்கிறார்கள் இந்த சாதனையாளர்கள்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு