Published:Updated:

இதெல்லாம்கூட சேமிப்புத்தானுங்க!

சேமிப்பு சிறப்பிதழ்டெக்னாலஜி

##~##

சேமிப்பு என்பது பணத்தை சேமிப்பது மட்டுமல்ல... நேரம், உழைப்பு உள்ளிட்டவற்றை   சேமிப்பதும், சேமிப்புதான். இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் உலகத்தில் கம்ப்யூட்டர், செல்போன் இவற்றைக் கொண்டு இருந்த இடத்தில் இருந்துகொண்டே வேலைகளை முடித்து, நம் பணத்தையும், நேரத்தையும், வீண் அலைச்சலையும் தவிர்த்து, நம் உழைப்பையும் சேமிப்பது சாத்தியம். எப்படி என்று பார்ப்போமா!

அஞ்சலே போ... மின்னஞ்சலே வா!

கடிதம் எழுதும் பழக்கம் இப்போது மலையேறிவிட்டது. பதிலாக, எல்லா தொடர்பு களுக்கும் 'மின்னஞ்சல்' எனும் இ-மெயில் பயன்படுத்தும் தலைமுறை இது. கடிதம், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மிகமிகக் குறைந்த செலவில் சுலபமாக அனுப்ப இ-மெயில் அனுப்ப பழகுங்கள். நேரம், பணம், அலைச்சல் என அனைத்தையும் சேமிக்கலாம்.  

கல்லூரி, வேலைக்கான விண்ணப்பங்கள்!

இன்று பெரும்பாலான கல்லூரிகளும், அலுவலகங்களும் தொழில்நுட்ப ரீதியாக தங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன. எனவே, முன்புபோல விண்ணப்பம் பெற கல்லூரி கல்லூரியாக ஏறி இறங்கவோ, வெளியூர் கல்லூரிகளுக்கு அலையவோ, உறவினர்களை அலையவிட்டு விண்ணப்பம் வாங்கி அனுப்பச் சொல்லவோ தேவையில்லை. இருந்த இடத்தில் இருந்தே வலைதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து தபால் மூலமாக அனுப்பலாம். சில கல்லூரிகள் ஆன் லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளன.

வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை, www.tnvelaivaaippu.gov.in என்கிற அரசு வேலைவாய்ப்பு அலுவலக வலைதளத்தில் நமது தகவலைக் கொடுத்து சுலபமாக விண்ணப்பித்து விடலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (www.tnpsc.gov.in)  ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர, வேலைக்காகவே பல்வேறு வலைதளங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றிலும் பதிந்து வைக்கலாம்.

இதெல்லாம்கூட சேமிப்புத்தானுங்க!

இலவசமாகப் படிக்கலாம் வாங்க!

ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு படிக்க நினைப்பவர்கள் முன்பெல்லாம் அதற்கான பயிற்சி மையத்தை அணுகினார்கள். இன்றோ... வீட்டிலிருந்தபடியே இன்டர்நெட் உதவியுடன் தேவையான பாடங்களையும், மாதிரி வினாத்தாள்களையும் பார்த்து, படித்து தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் தொடங்கி, வங்கித் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள், மாதிரி கேள்விகள், மாதிரி ஆன்லைன் தேர்வுகள் என எல்லாமே வலைதளத்தில் சாத்தியமே!

புத்தகம் வாங்கலாமா?

இன்று வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி, இருக்கும் இடத்துக்கே புத்தகத்தை வரவழைக்க முடியும். பொதுவாக, இப்படி ஆன்லைன் மூலமாக புத்தகம் வாங்குவதற்கு டெலிவரி கட்டணம் வசூலிப்பார்கள். ஆனால், சில வலைதளங்களில் குறிப்பிட்ட தொகைக்கு  மேல் புத்தகம் வாங்கினால் டெலிவரி இலவசம். இது மட்டுமில்லாமல், பல்வேறுவிதமான தள்ளுபடிகளையும் வழங்கிவருகிறார்கள். செல்போன், கம்ப்யூட்டர் எனத் தொடங்கி மளிகை சாமான்கள் வரையில் எது வேண்டுமானாலும் ஆன்லைன் ஷாப்பிங் மூலமாகவே ஆர்டர் கொடுத்து வீட்டுக்கே வரவழைத்துக் கொள்ளலாம்.

இதெல்லாம்கூட சேமிப்புத்தானுங்க!

ரயில்/பஸ் டிக்கெட்!

ரயில் டிக்கெட் எடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். காலையில் எட்டு மணிக்கு கவுன்டர் திறக்கப்படுகிறது என்றால், முதல் நாள் இரவே போய் துண்டு விரித்து இடம்பிடிக்கும் கொடுமைகள்கூட இங்கே உண்டு. ஆனால், இந்த முன்பதிவு முறை, இன்றைக்கு வீட்டில் இருந்தபடியே சுலபமாகவும், அலைச்சல் இன்றியும் விரைவில் செய்யக்கூடிய வகையில் வந்துவிட்டது... ஆன்லைன் புக்கிங் எனும் அற்புதத்தால். ரயில் மட்டுமல்ல, பேருந்து, சினிமா டிக்கெட் உள்ளிட்ட எல்லாமே இன்றைக்கு ஆன்லைன் வசம்!

இலவசமாக எஸ்.எம்.எஸ்!

செலவே இல்லாமல் இலவச எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை பலர் அறியாதது. உதாரணமாக, www.way2sms.com என்ற வலைதளத்தில் நமது மொபைல் நம்பரை ஒருமுறை பதித்துவிட்டால் போதும், எப்போது வேண்டுமானாலும் நமது மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உள்நுழைந்து, நமது நண்பர்களின் மொபைல் எண்களுக்கு இலவசமாக எத்தனை எஸ்.எம்.எஸ் வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளலாம்... பண்டிகை காலங்களில்கூட!

இ-புத்தகம், மின்சாரம், வங்கி, கணினி, இணைய பயன்பாடு என்று இன்னும் ஏகப்பட்ட சேமிப்புகள் இருக்கின்றன. அவையெல்லாம்... அடுத்த இதழில்!

- சா.வடிவரசு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு