Published:Updated:

நீங்களும் சேமிக்கலாம் பல கோடி!

சேமிப்பு சிறப்பிதழ்பிளானிங்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''வீட்டின் பண நிர்வாகம், சேமிப்பு, முதலீடு என எல்லாவற்றிலும் பெண்களின் பங்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதெல்லாம் முழுமையானதாக... முறையான தாக இருக்கும்போதுதானே அதன் பலன், பலமடங்கு பெருகும். எனவே, மேற்கண்ட விஷயங்களையெல்லாம் பெண்கள் முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்'' என்று வலியுறுத்துகிறார்... மும்பை, யங்புல்ஸ் எஜுகேஷன் தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் நிதி நிர்வாகக் கல்வியாளர்/ஆலோசகர், தண்மதி திருவேங்கடம்.

அதென்ன முழுமையாகக் கற்றுக் கொள்வது? என்று கேட்டதுமே... கடகடவென பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டார்.

''முதலில் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுங்கள். இந்தக் கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள்.

1. உங்கள் வீட்டு லோன் எவ்வளவு, மாத இ.எம்.ஐ எவ்வளவு, வட்டி இப்போது எவ்வளவு?

2. என்னென்ன இன்ஷூரன்ஸ் கட்டுகிறீர்கள்... எந்த மாதத்தில், எவ்வளவு தொகை?

3. ஃபிக்ஸட்/ரெக்கரிங் டெபாசிட் டில் எவ்வளவு போட்டு வைத்திருக்கிறீர்கள்? கிடைக்கும் வட்டி என்ன?

பதில்களை எழுதிவிட்டீர்களா? இதைப் பற்றி கடைசியில் பார்ப்போம். இப்போது, பணம் சேர்ப்பதற்கான படிகளை ஒவ்வொன்றாக பார்ப்போமா?!

நீங்களும் சேமிக்கலாம் பல கோடி!

பட்ஜெட் போடுங்கள்!

பணத்தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கைக்கு பட்ஜெட் அவசியம். பட்ஜெட் என்றவுடன்... என்னவோ கம்ப சூத்திரம் என்று அஞ்சாதீர்கள். வீட்டின் அன்றாட வரவு, செலவுகளை டைரியிலோ நோட்டிலோ எழுதுவதுதான் பட்ஜெட். இவ்வளவுதான் வருவாய், இப்படி இப்படி எல்லாம் செலவாகிறது என்று தவறாமல் எழுதி வந்தால், சில மாதங்களிலேயே வீட்டின் வரவு - செலவு கணக்கு நமக்கு அத்துப்படியாகிவிடும். பின், எதில் செலவைக் குறைக்க வேண்டும், எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதும் புரிந்துவிடும்.

இலக்கை நிர்ணயம் செய்துகொள்ளுங்கள்

2014      வீடு வாங்க வேண்டும்
2020      மகள் பூப்படைவாள், விழா செய்ய வேண்டும்.
2025      மகன் கல்லூரியில் சேருவான்
2027      மகள் கல்லூரியில் சேருவாள்
2032      மகளுக்கு கல்யாணம் செய்ய வேண்டும்
2034      மகனுக்கு கல்யாணம் செய்ய வேண்டும்
2036      ரிட்டயர்மென்ட்

இப்படி வரிசையாக எழுதி, வரப்போகும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப செலவை கணக்குப் போட்டுப் பாருங்கள். மலைப்பாக இருக்கும். ஆனால், முன்கூட்டியே திட்டமிட்டு சேமித்து வந்தால், ஒவ்வொரு இலக்கையும் எளிதாகக் கடந்துவிட முடியும்.

சேமியுங்கள்!

பட்ஜெட் கையில் இருந்தால், எப்படி எல்லாம் செலவாகிறதென்று தெரிந்துவிடும்இல்லையா? இலக்குகளும் தெளிவாக தெரிவதால் செலவுகளை அங்கே இங்கே கொஞ்சம் குறைத்து, கண்டிப்பாக ஒரு தொகையை மாதா மாதம் சேமியுங்கள். சேமிப்புதான் உங்கள் முதல் செலவாக இருக்கவேண்டும். பணம் காய்ச்சி மரம் வீட்டின் கொல்லைப்புறத்தில் வேண்டும்என்றால், பணத்தை விதைக்க வேண்டும்! அதற்குத்தான் இந்த சேமிப்பு!

நீங்களும் சேமிக்கலாம் பல கோடி!

முதலீடு செய்யுங்கள்!

சேமித்த பணத்தை சும்மாவே போட்டு வைத்திருக்காதீர்கள். பேங்கில் போட்டால் வட்டி வரும், ஃபிக்ஸட், ரெக்கரிங் டெபாசிட்டில் போட்டால் அதிக வட்டி வரும். மியூச்சுவல் ஃபண்ட், ஷேர், பாண்டுகள், தங்கம் என்று உங்கள் திறமைக்கு ஏற்ப முதலீடு பண்ணுங்கள். பணத்தைப் பெருக்குங்கள். எதுவுமே கஷ்டம் இல்லை. கம்ப்யூட்டர் இன்ஜினீயர், பைலட், பிஸினஸ் என்று பல துறைகளில் சக்கைப்போடு போடும் பெண்களுக்கு முதலீடு செய்யக் கற்றுக்கொள்வதும் சுலபமே.

கேள்வி கேளுங்கள்!

பதில்கள் புரியும் வரை மேலும் கேள்வி கேளுங்கள். நம்பிக்கை வந்தால் மட்டுமே ஒன்றில் முதலீடு செய்யுங்கள். உலகின் மிகப் பெரிய பணக்காரர் வாரன் பஃபெட் சொல்வது - ''எனக்குப் புரியாத தொழில்களில் நான் முதலீடு செய்வது இல்லை.''

சேமிப்பு எவ்வளவு முக்கியமோ... அவ்வளவு முக்கியம் இன்ஷூரன்ஸ். சம்பாதிப்பவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் வரும் திடீர் வருமான இழப்பை சரி கட்டவே இன்ஷூரன்ஸ். லைஃப் இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்ஷூரன்ஸ்களில் சிம்பிளான பாலிஸி எடுத்தாலே போதுமானது. விளம்பரங்களைப் பார்த்து மயங்க வேண்டியதில்லை.

படிப்படியாக திட்டமிட்டு ஏறினால் வானம்கூட தொட்டுவிடும் தூரம்தான்!

சரி, ஆரம்பத்தில் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் சரியாக பதில் எழுதியிருந்தீர்களேயானால்... வாழ்த்துக்கள்! நீங்கள் நிச்சயம் வெற்றியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஏறக்குறைய சரியாக எழுதியிருப்பவர்கள் குட். மேலும் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். 'என்னவருக்குத்தான் எல்லாம் தெரியும்' என்பவர்கள்... ப்ளீஸ் சீக்கிரம் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலம் இதில்தான் இருக்கிறது!''

- வே.கிருஷ்ணவேணி, படம்: பா.கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு