Published:Updated:

சம்மர் ஆட்டோகிராஃப்!

மோடி வித்தையில் மோசம் போன ஆட்டுக்கால்!ரீடர்ஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

பரிசு:

சம்மர் ஆட்டோகிராஃப்!

200

கோடை விடுமுறையின் ருசியை விளையாட்டிலும் வியர்வையிலும் உணர்ந்த தலைமுறையில் இருந்து வந்தவள் நான்!

எங்கள் தெரு பிள்ளைகளின் கோடை வாசஸ்தலம்... பிள்ளையார் கோயில். அங்குதான் ஆடு - புலி ஆட்டம், பல்லாங்குழி, தாயம் விளையாட்டு, கிச்சுக் கிச்சுத் தாம்பளம்... என சலிக்க சலிக்க விளையாடுவோம். மாலை 6 மணிக்கு பெரிய வீட்டின் வாசலை சாணமிட்டு மெழுகி கோலமிட்டு, அவரவர் வீட்டில் இருந்து எச்சில் படாத சாதம் கொண்டு வந்து வாசலில் வைத்து, பெரிய பெண்கள் உட்பட வட்டமாகச் சுற்றி கும்மி அடித்துப் பாட்டுப் பாடுவார்கள். பிறகு சடுகுடு, நொண்டி என வரிசையாக பல விளையாட்டுகளை இரவு 12 மணி வரை விளையாடிவிட்டுத்தான் தூங்கச் சொல்வோம்.

சந்தைக்குப் போவதென்றால், குஷியோ குஷி! ஒருமுறை அம்மாவின் அம்மாவும், அப்பாவின் அம்மாவும் சந்தைக்கு அழைத்துச் சென்று, கத்திரிப்பூ நிற கவுனை பேரம் பேசி வாங்கிக் கொடுத்தனர். வீட்டில் வந்து கவுனை போட்ட நான், தாகத்துக்கு தண்ணீர் குடிக்க, கசிந்த சாயத்தில் நானே கத்தரிப் பூ ஆனேன்! அது துணி அல்ல... கித்தான் சாக்கில் தைத்த சட்டை என்று பிறகுதான் எல்லோருக்குமே புரிந்தது.

சம்மர் ஆட்டோகிராஃப்!

கோடைக்காலத்தில் வாய்க்காலில் தண்ணீர் இருக்காது என்பதால் எல்லா பிள்ளைகளையும் வீட்டில் உள்ள பழைய சாதத்தை தூக்கில் எடுத்துக் கொள்ள வைத்து, காவிரி ஆற்றுக்கு அழைத்துச் செல்வார் அப்பா. அங்கே கொஞ்சமாக ஓடி வந்து கொண்டிருக்கும் நீரில், துணிகளையெல்லாம் துவைத்து ரயில் பாலத்தின் அடியில் காய வைப்பார். ஒரு தடவை... காய்ந்த துணிகளை எடுக்கச் சென்றால், ரயில் இன்ஜினில் இருந்து பறந்து வந்த நிலக்கரி (நெருப்பு) விழுந்து, துணியெல்லாம் ஆங்காங்கே ஓட்டையாகியிருக்க... பலத்த அதிர்ச்சி, கூடவே சிரிப்பும்.

ஒரு நாள், நான்கு ஆட்டுக் கால்களை இட்லி பானையில் போட்டு மூடி, சும்மாடுகட்டி என் தலையில் வைத்து, லீவுக்கு மலையம்பாளையம் பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார் அப்பா. வழியில் மோடி வித்தையை வேடிக்கை பார்த்த நான், ஒரு மணி நேரம் தாமதமாக பாட்டி வீடு சென்றபோது பானையைத் திறந்து பார்த்தால், ஆட்டுக்கால்களை காணோம். வித்தை பார்த்த நேரத்தில் யாரோ 'வித்தை’ காட்டியிருக்கிறார்கள். அப்போது பாட்டியிடம் வாங்கிய அடி, இன்று இனிய நினைவுகளாக பொங்குகிறது நெஞ்சில்!

- பி.சுப்புலட்சுமி, ஈரோடு

படம்: அருண் டைட்டன்

இந்தப் பகுதிக்கு உங்கள் அனுபவங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 'சம்மர் ஆட்டோகிராஃப்’, அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு