Published:Updated:

ரேஷ்மா... செத்துப் பிழைத்த அதிசயம்!

ஃபீலிங்ஸ்

##~##

ங்களாதேஷில் சமீபத்தில் நடந்த அந்தத் திடீர் கொடுமை... உலக அளவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதி சவேர். இங்கு புற்றீசல்களாக ஏகப்பட்ட ஏற்றுமதி ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. இப்பகுதியில் எட்டு மாடி கட்டடம் ஒன்று திடீர் என இடிந்து விழ... உள்ளே இருந்த ஐந்து ரெடிமேட் ஏற்றுமதி ஆடை நிறுவனங்களில் பணியாற்றிய சுமார் ஐந்தாயிரம் பேர் அநியாயமாக சிக்கிக் கொண்டனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். மொத்தமுள்ளவர்களில் 2,500 பேர் மட்டுமே இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200-க்கும் மேலே!

சம்பவம் நடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைத்துக் கொண்டே இருக்க... 17-ம் நாளன்று உலகையே ஆச்சர்யப்பட வைக்கும் வகையில், உயிரோடு மீண்டிருக்கிறார் 19 வயது ரேஷ்மா! மூன்று வயதிலேயே தந்தையை இழந்த ரேஷ்மா, பால்ய வயதிலேயே மணமுடிக்கப்பட்டவர். வரதட்சணை கொடுமை தாங்காமல் டாக்காவுக்கு  வந்தவரை, மூத்த சகோதரி அஸ்மா இந்த ஃபேக்டரியில் வேலைக்கு சேர்த்துள்ளார். இந்த நிலையில்தான், இப்படியரு திகிலில் சிக்கி மீண்டிருக்கிறார்!

ஏப்ரல் 24 அன்று கட்டடம் இடிந்து விழுந்த செய்தியைக் கேட்டதுமே விரைந்து மீட்புப் பணியில் இறங்கினர் பங்களாதேஷ் ராணுவத்தினர். நான்காவது நாள், இடிபாடுகளிடையே அவர்களின் கண்களில் சிக்கினார் ஷாஹீனா அக்தர் என்ற இளம்பெண். 'அநேகமாக இவர்தான் கடைசியாக தாம் உயிருடன் மீட்கும் பெண்ணாக இருக்கக் கூடும்’ என எண்ணி மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். ஆனால், அவரை உயிரோடு மீட்க முடியவில்லை. அதற்குப் பின் எந்த நம்பிக்கையும் இன்றி வெறும் சடலங்களை மட்டும் மீட்டு வந்த நிலையில்தான், ரேஷ்மா அதிசயம்!

ரேஷ்மா... செத்துப் பிழைத்த அதிசயம்!

''இரண்டாவது தளத்தில் பணியில் இருந்த ரேஷ்மா, கட்டடம் இடிந்த வேகத்தில் அடித்தளத்தின் ஓர் அறையில் போய் விழுந்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அந்த அறையின் ஒரு சிறிய பகுதி, தூண்களுக்கு இடையே சிக்கிவிட, சிறு வெற்றிடம் கிடைத்துள்ளது. ரேஷ்மாவை இழந்துவிடக்கூடாது என அதிக கவனமாக இருந்தோம்... அதில் வெற்றியும் பெற்றுவிட்டோம்'' என்று உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார் மீட்புப் பணியில் இருந்த ராணுவ மேஜர் மௌசம் உசைன்.

''நான் விழுந்த இடத்துக்கு அருகில் பணியாளர்களின் மதிய உணவுகள் மற்றும் உலர்ந்த பழ வகைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை உண்டு 15 நாள் கடத்திய பின், கடைசி இரண்டு நாட்களுக்கு மட்டும் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று. அங்கிருந்த தண்ணீரையும் முழுக்க பருகாமல்... சிறிது, சிறிதாகக் குடித்தேன். மீட்பு பணியாளர்களின் குரல்கள், சில தினங்களுக்கு முன்புதான் எனக்கு கேட்டபடி இருந்தது. ஆனால், அவர்களை அழைக்க நான் போட்ட குரல்... இடிபாடுகளுக்குள்ளேயே அமுங்கி போனது, அவர்களை எட்டவே இல்லை. கையில் கிடைத்த இரும்புக் கம்பி மற்றும் குச்சிகளையெல்லாம் இடைவெளிகள் மூலமாக அசைத்து அசைத்து அவர்களுடைய கவனத்தை கவர முயன்றது வீண் போகவில்லை. நான் சிக்கியிருந்த இடம் சற்று பெரிதாக இருந்ததால், சிறு காயம்கூட இன்றி கடவுள் அருளால் தப்பிவிட்டேன்.

அக்கம்பக்கத்து அறைகளிலிருந்து தொடர்ந்து சிலர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தனர். முகம் தெரியாமலே நண்பர்களாகிவிட்ட அவர்களிடம் இருந்து அடுத்தடுத்த நாட்களில் எந்தப் பேச்சும் இல்லை. பாவம், பரிதாபமாக இறந்துவிட்டார்கள். சிறிது தூரத்தில் விழுந்திருந்த இரு பெண்கள், என் கண் முன்னே இடிபாடுகள் விழுந்து நசுங்கி இறந்தனர். இதையெல்லாம் பார்த்த பின்னும் நம்பிக்கையுடன் இருந்தேன்!'' என்கிறார் ரேஷ்மா பெருமூச்சுடன்!

பெண் மனதளவிலும் உறுதியானவள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது!  

- ஆர்.ஷஃபி முன்னா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு