Published:Updated:

'உண்டியல் மட்டுமே சேமிப்பல்ல...'

சேவிங்ஸ்

'உண்டியல் மட்டுமே சேமிப்பல்ல...'

சேவிங்ஸ்

Published:Updated:
##~##

கௌரவமான அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அப்பா வாங்கிய கடைசி மாத சம்பளத்தைவிட, பணியில் அப்போதுதான் சேர்ந்திருக்கும் அவருடைய வாரிசு வாங்கும் முதல் மாதச் சம்பளம், பலமடங்கு அதிகம். ஆனால், வாங்கிய சம்பளம் மூன்றாவது வாரத்திலேயே கரைந்துவிட, 'எதிர்காலத்துக்காக என்ன சேமிக்கிறாய்?' என்ற அப்பாவின் கேள்விக்கு, வெளியில் எரிச்சலாகும் வாரிசு, உள்ளுக்குள் குமைகிறார். தவறு எங்கே நடந்தது?!

பால்ய வயதில் பாடம் என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காயாக, நிதி சார்ந்த நடைமுறை அனுபவங்கள் எதுவும் இல்லாமல் வளர்ந்ததன் விளைவு இது. எத்தனை உழைக்கிறோம், எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதைவிட என்ன சேமிக்கிறோம் என்பதில்தானே இருக்கிறது, அர்த்தமுள்ள வாழ்க்கை? குழந்தைகளுக்கு பாலியல் கல்வி பற்றியெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டோம். ஆனால், நிதிக்கல்வி பற்றி சற்றும் தெளிவில்லாது இருக்கிறோம். விளைவு... படிப்பு, வேலை, சம்பளம் என்று எல்லாம் சிறப்பாக தகைந்தாலும், செலவு - சேமிப்பு விகிதம் விளங்காது, தவித்து தத்தளிக்கிறது அடுத்த தலைமுறை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த விபத்து, உங்கள் வாரிசுகளின் வாழ்க்கைப் பயண வழியில் நிகழாதிருக்க, குழந்தை வளர்ப்பில் நிதிக்கல்வி குறித்தான உபயோகக் குறிப்புகளை வழங்குகிறார் நிதி ஆலோசகர் வி.நாகப்பன்.

'உண்டியல் மட்டுமே சேமிப்பல்ல...'

''உண்டியல் வாங்கித் தருவது என்பதோடு தற்போதைய தலைமுறை குழந்தைகளுக்கான, பெற்றோர்களின் அதிகபட்ச நிதிக்கல்வி முடிந்துவிடுகிறது. ஆனால், இதைத் தாண்டியும் குழந்தைப் பருவத்தில் நிதி சார்ந்து கற்றுக்கொள்ள ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. இதில் முதன்மையானது, முழு முன்மாதிரியாக பெற்றோர்கள் விளங்குவது. குழந்தைகள் நம்மை உற்றுக் கவனிக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

நான் பள்ளிப் பருவத்தில் இருக்கும்போது, வாடிக்கையாளர்களின் வரவு - செலவு கணக்குகளில் ஒன்றிரண்டை என்னிடம் தந்து சரிபார்க்கச் சொல்வார் என் அப்பா. அப்படி ஒருநாள் சரி பார்த்ததில், ''அப்பா, கணக்கில் 2 ரூபாய் அதிகமாக வருகிறது'' என்றேன், கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில். முகம் சுருங்கியவராக அப்போது அப்பா சொன்னது, இப்போதும் காதில் எதிரொலிக்கிறது. ''நீ பார்த்தது வரவு-செலவு கணக்கு. அதில் கூடுதலோ... குறைவோ வரக்கூடாது. இரண்டும் இரண்டும் நான்குதான் வரவேண்டும். நீயோ ஆறு என்கிறாயே! குறைவாக இருக்கிறது என்று சொன்னால்கூட, எதுவோ விடுபட்டு போயிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கூடுதலாக வருகிறது என்றால், உனக்கு கணக்குப் பார்க்கவே தெரியவில்லை என்றுதானே அர்த்தம்!''

- இப்படி நியாயத்தோடும், நிதர்சனத்தோடும் ஒட்டி அமைய வேண்டும் பெற்றோரின் குழந்தை வளர்ப்புக்கலை.

'குழந்தைதானே அதற்கு என்ன தெரிந்துவிடப் போகிறது, புரிந்துகொள்ளப் போகிறது' என்ற அலட்சியமின்றி உங்களது ஷாப்பிங்கின் அனைத்து நிலைகளிலும் குழந்தைகளை ஆர்வத்துடன் பழக்க வேண்டும். பொருட்களின் விலை நிலவரம், பிற பொருட்களோடு ஒப்பிடல், தரம், தள்ளுபடி குறித்தெல்லாம் அவர்களுக்கு கதை பாணியில் உற்சாகமாகச் சொல்லலாம். வீடு திரும்பியதும் கடையில் வழங்கிய பில்லை பொருட்களோடு சரிபார்க்கும் செயலில் நம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு அருகே இருக்கும் கடைகளுக்குச் சென்று வர குழந்தைகளை அனுமதிக்கலாம். அப்போதுதான் குழந்தைகளுக்கு சுயசார்பு வளரும் என்பதோடு, விலை, எடை குறித்தான வாழ்க்கைக் கல்வியும் கிட்டும்.

இந்த நடவடிக்கை தொடர்ந்தால் நிதிக்கல்வியின் பிற கூறுகள் குறித்தும் தாமாக கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதில் முக்கியமானது... பணவீக்கம். சேமிப்பு கலையின் முக்கிய அம்சம் இது. வளர்ந்தவர்கள் மத்தியிலும்கூட பணவீக்கம் குறித்தான விழிப்பு உணர்வு இல்லாததால் சேமிப்பு, முதலீடு குறித்த நடவடிக்கைகளில் சோம்பி, பொருள் இழப்பைச் சந்திக்கிறார்கள். நிதிக்கல்வி மூலம், தனக்குத் தேவையானது எது, தேவையில்லாதது எது என்பது குறித்த தெளிவும் குழந்தைகளுக்குக் கிட்டும். செலவை குறைப்பதுதானே சேமிப்பின் முதல்படி! இதன்மூலம் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், நாம் அறிவுறுத்தாமலேயே குழந்தைகளை சென்றுசேரும். ஒரு கட்டத்தில், 'இது வெட்டி செலவு' என நமக்கு எடுத்துச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் பாருங்கள்!

நிதி நிர்வாகம் குறித்தான அனைத்து செயல்பாடுகளிலும் குழந்தைகளை உடன் இருத்திக்கொள்வது முக்கியம். உதாரணமாக, வங்கிக்கு செல்லும்போதுகூட குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். ஒரு சலான் நிரப்பும்போது, உடன் வைத்துக் கொண்டு நிரப்பலாம். நாள்போக்கில் அவர்களையே நிரப்பச் சொல்லலாம். இந்தத் தருணங்களில் எல்லாம் அவர்கள் தங்கள் கேள்விகளால் நம்மை திணறடிப்பார்கள். அப்படியான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நமக்கான வாய்ப்பாக பாவித்து, அவர்களுக்கு கற்றுத் தரவேண்டும். இதற்கும் என் சின்ன வயதில் அப்பா கற்றுத்தந்த பாடம் இப்போதும் நினைவில் இருக்கிறது.

ஒரு தடவை, 20 ஆயிரம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்யச் சொல்லி கொடுத்தார் அப்பா. அதன்படியே டெபாசிட் செய்துவிட்டு வந்தேன். 'என்னப்பா, டெபாசிட் செய்துவிட்டாயா... பாஸ்புக்கில் என்ட்ரி போட்டார்களா... நீ செக் செய்துவிட்டாயா?' என்று கேட்டார். நான் செக் செய்யவே இல்லை. ஆனால், கோபப்படுவார் என்பதால், 'செக் செய்துவிட்டேன்' என்று பொய் சொன்னேன். பாஸ் புக்கை வாங்கிப் பார்த்தவர், 'மொத்தம் 60 ஆயிரம் இருக்கிறது. உடனே பணம் தேவைப்படுகிறது போய், 50 ஆயிரம் ரூபாயை எடுத்துவா' என்று மீண்டும் அனுப்பி வைத்தார். அங்கே போனால், 'ஏற்கெனவே, 20 ஆயிரம் ரூபாய் இருந்தது... காலையில் 20 ஆயிரம் போட்டீர்கள். மொத்தம் 40 ஆயிரம்தான் இருக்கிறது. தவறாக 60 ஆயிரம் என்று பதிவு செய்துவிட்டோம்' என்று சொல்லி, பாஸ்புக்கில் திருத்தித் தந்தனர். வீட்டுக்கு வந்து சொன்னால், 'அதெல்லாம் தெரியாது... எனக்கு 50 ஆயிரம் வேண்டும்' என்று சொல்லி, வேகாத வெயிலில் மூன்று, நான்கு தடவை வங்கிக்கு அலையவிட்டு, வங்கி நடைமுறைகளை புரிய வைத்தார் அப்பா'' என்று அனுபவப் பாடம் சொன்ன நாகப்பன்,

'உண்டியல் மட்டுமே சேமிப்பல்ல...'

''குழந்தைகளை, அவர்களின் வயதுக்கேற்ப வீட்டு வரவு - செலவு விவரங்களை எழுதச்சொல்லி மேற்பார்வையிடலாம். நிதி தொடர்பான பரிமாற்றங்களில் போலி பாவனைகள் வேண்டாம். குடும்பத்தின் பொருளாதார கஷ்டம், கடன் விவரங்களைக்கூட குழந்தைகள் அறிவது தவறில்லை. சேமிப்பு உள்ளிட்ட நிதி நிர்வாகம் மட்டுமல்ல... தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படவும் அவர்களுக்கு இது உதவும்.

குழந்தைகளை ஊக்கப்படுத்த பரிசுகள் தருவது தவறில்லை. அப்படித் தரும் பரிசுகளை அவர்கள் கையாலேயே சேமித்து, அவை முதிர்ந்ததும் நமது மேற்பார்வையில் அவர்கள் கையாலேயே செலவிடவும் அனுமதிக்க வேண்டும். அப்படியான செலவுக் கணக்கையும் அவர்களையே சரிபார்க்கச் செய்யலாம். இந்த செயல்பாட்டை ஊக்குவித்தும் பரிசளிக்கலாம். மாறாக, குழந்தை நம்மை தொந்தரவு செய்யாது டி.வி பார்த்தால் பரிசு; அவுட்டிங் அழைத்துச் செல்ல முடியாததற்கு பரிசு என்பது போல பரிசுகளை வாங்கித் தருவது தவறு. உண்மையில் இது வெகுமானம் அல்ல; லஞ்சம்.

பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிக்க முடியாத தங்கள் குற்ற உணர்வை மறைக்க, குழந்தைகள் கேட்பதைஎல்லாம் வாங்கித் தருவதையும், பணமாகத் தருவதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள். இது முதலுக்கே மோசமாகி குழந்தை வளர்ப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!'' என்று உண்மைகளை நன்றாகவே நமக்குள் பதியம் போட்டார்.  

- எஸ்.கே.நிலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism