Published:Updated:

உங்கள் தட்டில் உணவா விஷமா...?! - 15

டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்

உங்கள் தட்டில் உணவா விஷமா...?! - 15

டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்

Published:Updated:
உங்கள் தட்டில் உணவா விஷமா...?! - 15
##~##

'சர்க்கரை, நம்மை நேரடியாகத் தாக்குவதைவிட, மறைந்திருந்து (Hidden sugar)  தாக்குவதுதான் தற்போது அதிகம்' என்று குறிப்பிட்டேன். அது ஒளிந்திருக்கும் முக்கிய உணவுகள் ஏராளம். அவற்றில் முக்கியமானவை, கோலா வகையைச் சேர்ந்த குளிர்பானங்கள். நாம் குடிக்கும் காபியில் இரண்டு ஸ்பூன் சர்க்கரைதான் போடுகிறோம். ஆனால், ஒரு பாட்டில் கோலா பானத்தில் 9 ஸ்பூன் சர்க்கரை இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோலா பானங்களின் பிடியில் மனிதகுலம் எப்படிச் சிக்கியிருக்கிறது... என்னென்ன கேடுகளை எதிர்கொண்டிருக்கிறது... என்பதையெல்லாம்தான் இங்கே ஆராயப் போகிறோம். அதற்கு முன்பாக... கோலா பானங்களின் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே!

அந்தக் காலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு காற்றடைத்த சோடா பானங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. அவற்றை ஒரு மருந்தாகவே பலர் பாவித்தனர். இப்போதும்கூட அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு நம் ஊரில் சோடா குடிப்பது ஒரு வகை வைத்தியம்தான். அப்போதெல்லாம் மருந்துக்கடைகளில்தான் சோடா கிடைக்கும் - பெட்டிக்கடைகளில் அல்ல.

கோகோ - கோலாவை கண்டுபிடித்த அமெரிக்க டாக்டர் பெம்பர்டன், ஒரு மருந்தாளுநர் (Pharmacist). அவருக்கு 'மைக்ரேன்’ என்கிற ஒற்றைத் தலைவலி அடிக்கடி வரும். அன்றைய காலகட்டத்தில் அதற்கு நல்ல மருந்துகள் கிடையாது. இத்தாலியின் பிரபல நரம்பியல் டாக்டர் மான்டகேயா என்பவர், கோகோ செடியின் கொட்டையிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட 'கொகெய்ன்’ என்ற மருந்தை இதற்கு நிவாரணமாகக் கண்டுபிடித்தார். டாக்டர் பெம்பர்டனும் இதையே தலைவலிக்கு உபயோகித்தார். இது சற்று போதைத் தன்மை கொண்டது. இந்நிலையில், 1865-ல் கொலம்பஸ் யுத்தம் வெடித்தது. இதில் பங்கேற்ற பெம்பர்டன் பலத்த காயமடைந்தார். அவை ஆறுவதற்கு வெகுநாள் ஆயிற்று. தலைவலியோடு இந்த திருகுவலியும் சேர்ந்து கொண்டதால் மிகவும் அவதிப்பட்டார். அதற்கு நிவாரணமாக 'மார்பின்’ என்கிற போதை ஊசிக்கு அவர் அடிமையானார்.

உங்கள் தட்டில் உணவா விஷமா...?! - 15

அவருடைய ஆழ்மனதில், 'இந்த மாதிரியான வலிகளுக்கு நல்ல நிவாரணம் இல்லையே' என்கிற ஏக்கம் இருந்து வந்தது. தன்னுடைய மருந்துக்கடையில், சோடாவில் ஒவ்வொரு பொருளாகக் கலந்து... பரிசோதித்தார். கடைசியில் 1885-ல் 'கோகோ' கொட்டையின் கொகெய்னை யும், 'கோலா' கொட்டையின் கேஃபினையும் (Caffeine), இன்னும் பல உதிரிச்சரக்குகளையும் சோடாவில் கலந்து 'கோகோ - கோலா’ பானத்தைக் கண்டுபிடித்தார். இதை எல்லோரும் விரும்பிப் பருகினார்கள். ஆனாலும், முதல் ஆண்டில் அவருக்கு மிஞ்சியது நஷ்டமே. அடுத்த வருடமே இதன் உரிமத்தை தன் நண்பரான கேண்ட்லர் என்பவருக்கு வெறும் 2,300 டாலருக்கு விற்றுவிட்டார். அதன் பின்னர், கோகோ - கோலாவின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. உலகெங்கும் உள்ள அத்தனை நாடுகளிலும் இது படையெடுத்தது. பல்வேறு ரூபத்தில் 3,500 வகையான பானங்களை, 500 வெவ்வேறு பெயர்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

'காபி சாப்பிடுவோமா’ என்று நண்பர்களை அழைப்பதுபோல், 'ஒரு கோக் சாப்பிடுவோமா’ என்று அழைப்பது சகஜமாகிவிட்டது (மொரீஷியஸ் ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு தண்ணீர் சப்ளை கிடையாது - கோக்தான். தண்ணீர் வேண்டும் என்று கேட்டால், மிக அதிக விலைக்கே கிடைக்கும். இது என்னுடைய பயண அனுபவம்).

ஹிட்லரின் நாஜி சாம்ராஜ்யமான ஜெர்மனியிலும் அமோகமாக விற்பனையானது. இரண்டாம் உலகப்போரின்போது, அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்படும் சர்க்கரை, கோலா போன்ற மூலப்பொருட்கள் ஜெர்மனிக்குள் நுழைய முடிய வில்லை. கோலா நிறுவனத்தின் ஜெர்மனி கிளையின் தலைமைப் பொறுப்பிலிருந்த மேக்ஸ் கீத், மண்டையைப் பிய்த்துக்கொண்டு பல்வேறு பரிசோதனைகளும் ஆராய்ச்சிகளும் மேற்கொண்டார். கடைசியில், பழச்சாறு கம்பெனிகளின் ஆப்பிள் நார்க் கழிவுகளையும், வெண்ணெய் கம்பெனிகளின் 'சீஸ்’ முதலியவற்றையும் மற்றும் பல வேதிப்பொருட்களையும் சோடாவில் கலந்து சுவையான பானம் ஒன்று உருவானது. 'கனவுகளில் (fantasy) பிறந்த பானம்' என்கிற அர்த்தத்தில் 'ஃபேன்டா’ என்று பெயரிட்டார். நாஜி படை வீரர்களுக்கு இது சோமபானமாகவே பட... கோகோ கோலா விட்ட இடத்தை இது பூரணமாக ஆக்கிரமித்தது.

பிறகு, இந்த 'ஃபேன்டா', 'ஸ்ப்ரைட்' (Sprite) என்கிற பெயரில் அமெரிக்காவுக்குள் பிரவேசித்தது. கோகோ - கோலா முதலாளிகளுக்கு ஒரே சந்தோஷம். மேக்ஸ் கீத், நாஜிகள் கட்சியில் சேர்ந்து 'ஃபேன்டா’ என்ற போட்டி பானத்தை தயாரித்ததாக நினைத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு, உண்மையில் கோகோ - கோலாவை சரிவிலிருந்து மீட்ட ஹீரோ அவர் என்பது தெரியவந்தது. ஃபேன்டா விற்பனையில் கிடைத்த அத்தனை கோடி டாலர்களையும் முதலாளிகளிடம் ஒப்படைத்தார் மேக்ஸ்.

உங்கள் தட்டில் உணவா விஷமா...?! - 15

பெப்சியின் கதையும் கிட்டத்தட்ட இப்படித்தான். கேலப் பிராட்ஹாம் என்ற அமெரிக்கரும் ஒரு மருந்தாளுநர்தான். அவரும் தன்னுடைய மருந்துக்கடையில் விற்கப்படும் சோடாவின் சுவையைக் கூட்டுவதற்காக பல்வேறு பரிசோதனைகள் செய்து, கடைசியில் கோலாவின் கேஃபின் பெப்சின் மற்றும் பல வேதிப்பொருட்களைக் கலந்து 1893-ல் ஒரு புதிய பானத்தைக் கண்டுபிடித்தார். 'பெப்சி கோலா’ என்ற பெயரை, ஏற்கெனவே சோடா தொழில் செய்து நொடித்துப்போன ஒருவரிடம் வெறும் 100 டாலர்கள் கொடுத்து விலைக்கு வாங்கினார். பெப்சியும் உலகளவில் 'ஓஹோ’ என்று பேசப்பட்டது.

17 வருடங்கள் லாபத்தை அள்ளிக்குவித்த அந்த நிறுவனம், முதல் உலகப்போரில் சர்க்கரை விலை வீழ்ச்சியால் பெரிய நஷ்டத்தில் மூழ்கியது. இதைச் சமாளிக்க முடியாத பிராட்ஹாம், பெப்சிகோலா கம்பெனியை கூத் என்பவருக்கு 30 ஆயிரம் டாலருக்கு விற்றுவிட்டார். அடுத்த ஏழு ஆண்டுகளில் கம்பெனி மற்றொரு பெரிய நஷ்டத்தில் மூழ்கியது. கூத் இந்தக் கம்பெனியை தன் போட்டியாளரான கோகோ - கோலாவுக்கே விற்றுவிட முன்வந்தார். ஆனால், கோகோ - கோலா மறுத்துவிட்டது. 1931-ல் ரிச்சர்ட் ரிச்சி என்பவர் புதிய ஃபார்முலாவைக் கண்டுபிடித்து, பெப்சி கோலாவின் திசையையே மாற்றிவிட்டார்.

கோகோ - கோலாவுக்கும்... பெப்சி கோலாவுக்கும் இடையே ஒரு யுத்தமே (Cola War) இன்று வரை தொடர்கிறது. இவர்கள் இல்லாமல் எந்த டி.வி நிகழ்ச்சிகளும் இல்லை, விளையாட்டுப் போட்டிகளும் இல்லை என்றாகிவிட்டது.

கோலா நிறுவனங்கள் உலகளவில் சந்தித்த பிரச்னைகளும் போராட்டங்களும் வழக்குகளும் பலப்பல. தொழிலாளர் ஊதியப் பிரச்னைகள், கறுப்பு - வெள்ளை இனப் பிரச்னைகள் மற்றும் உள்ளூர் போராட்டங்கள் முதல் உலகப்போர் வரை அவை வகித்த முக்கியப் பங்குகள் எல்லாம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. அமெரிக்காவில் நடைபெற்ற மனித உரிமைப் போராட்டத்தில் கறுப்பர் இனத் தலைவர் மார்டின் லூதர் கிங் சுட்டுக்கொல்லப்பட்டதன் உண்மைப் பின்னணிகூட கோலாவுக்கு எதிராக அவர் எடுத்த நிலைப்பாடுதான் என்றும்கூட ஒரு கருத்து உண்டு. கூடவே... 'கோலா பானங்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து, சுகாதாரத்துக்கு கேடு, மனிதர்களின் உடல்நலத்துக்கு கேடு' என்றெல்லாம் பல பிரச்னைகள் எழுப்பப்பட்டன.

சரி, கோலா பானங்களால் என்ன சுகாதார கேடு என்பது பற்றி மட்டும் நாம் ஆராய்வோம்.

- நலம் வரும்...

கோகோ - கோலா 1953-ல் இந்தியாவில் நுழைந்தது. 1977 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி மாறி, ஜனதா கட்சி முதன் முறையாக ஆட்சிக்கு வந்தது. அப்போதைய தொழில்துறை அமைச்சரான ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், கோலா நிறுவனத்துக்கு எதிராக கடுமையான நிலையை எடுத்தார். 'உங்களுடைய ரகசிய ஃபார்முலாவை வெளியிட வேண்டும். அதோடு உங்களுடைய முதலீட்டையும் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவைவிட்டு வெளியேறலாம்’ என்று அறிவித்தார். நிபந்தனைகளை ஏற்காத கோலா நிறுவனம் 1977-ல் இந்தியாவைவிட்டு வெளியேறியது. 1993-ல் மீண்டும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. 'தாராள பொருளாதாரக் கொள்கை’ அமலுக்கு வந்தது. கோலா நிறுவனங்கள் மீண்டும் வெற்றிகரமாக நுழைந்து சக்கைப்போடு போடுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism