இதோ எந்தன் தெய்வம்! - 4

சித்தர்கள் மாநாட்டில், 'இவர் யார்... எங்கிருந்து வந்தவர்?' என்று விவாதிக்கப்பட்டு, 'இமயமலையில் இருந்து வந்தவர்' என்றும், '400 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறவர்' என்றும் முடிவு எடுக்கப்பட்டவர்...

பூண்டி மகான், கசாவனம்பட்டி மௌனஜோதிகள், கோடி சாமிகள், மருந்துவாழ்மலை நாயனார் சுவாமிகள் ஆகிய மகான்களால் 'கன்னியாகுமரி அம்மன்!’ என்று அழைக்கப்பட்டவர்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் ஜனாதிபதிகள் ஜெயில் சிங், வி.வி.கிரி ஆகியோரால் தேடிவந்து வணங்கப்பட்டவர்...

தமிழ் திரையுலகத்தினர் சிலரால் இப்போதும் துதிக்கப்படுகிறவர்...

மனிதர்களுக்கு இணையாக நாய்களையும் மதித்து அன்பு காட்டி, சமகாலத்தில் வாழ்ந்து, 1992-ம் ஆண்டு பிப்ரவரி ஒன்பதாம் தேதி ஜீவன்முக்தி அடைந்த ஜீவகாருண்ய சொரூபிதான்... இந்த அன்னை மாயம்மா!

சேலம், ஏற்காடு மலை அடிவாரத்தில், சட்டக்கல்லூரிக்கு எதிரில் இருக்கிறது மாயம்மா கோயில். அது ஜீவசமாதி அடைந்த இடமாக இருந்தாலும், கோயில் என்றே அழைக்கிறார்கள் பக்தர்கள். வட்ட வடிவில் ஆறு நிலைகளாக உயர்ந்து, உச்சியில் தாமரை மலர்வது போல் அமைக்கப்பட்டிருக்கிறது சமாதி. கீழே ஒரு அணையாவிளக்கு சுடர்விட்டு எரிகிறது. சுற்றிலும் உள்ள தாழ்வாரத்தில் மாயம்மாவின் படங்கள். அவர் அமர்ந்து ஆசிகொடுத்த நாற்காலி, டீப்பாய் ஆகியவையும் அங்கே இருக்கின்றன. பக்தர்கள் மணிக் கணக்கில்கூட மாயம்மாவை நினைத்து தியானம் செய்கிறார்கள். துயரத்தோடு வருகிறவர்கள், மாயம்மாவை நினைத்து தியா னம் செய்து, மனத்துயர் நீங்கி பிரகாச முகத்தோடு திரும்புகிறார்கள். இதைத் தவிர, வேறு எந்த பூஜைகளும் இங்கே கிடையாது!

இவர் யார்... தெய்வமாக வழிபடும் அளவுக்கு இவர் சாதித்தது என்ன? மாயம்மாவின் அருகிருந்து பணிவிடை செய்து, இப்போதும் அவருக்கு நேரடி சீடராக இருக்கும் ராஜேந்திரன், இந்தக் கேள்வி களுக்கு விடை பகிர்ந்தார்.

''எப்போது வந்தார்... எப்படி வந்தார்... என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. இமயமலையில் இருந்து வெகுகாலத்துக்கு முன் கன்னியாகுமரி கடற்கரைக்கு வந்திருக்கிறார். தேவையில்லாமல் யாரிடமும் எதுவும் பேசமாட்டார். கடற்கரையில் படுத்திருப்பார், கடலில் விளையாடுவார், சிப்பி பொறுக்குவார். சுற்றுலா வருகிறவர்கள் எந்த மொழியில் பேசினாலும், அவர்கள் திகைக்கும்படியாக ஓரிரு வார்த்தைகளில் அந்தந்த மொழியில் பதில் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

இதோ எந்தன் தெய்வம்! - 4

யாராவது சாப்பாடு கொடுப்பார்கள். அவற்றை அப்படியே நாய்களுக்குக் கொடுப்பார். சாப்பாடு கொடுத்தவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட மன நிம்மதியையும், வாழ்க்கையின் வளர்ச்சியையும் கண்டு... 'இவர் ஒரு சித்தர்' என்று நம்ப ஆரம்பித்தார்கள். அதனால், இவருக்கு சாப்பாடு கொடுக்கிறவர்களின் கூட்டம் அதிகமானது. கூடவே நாய்களின் கூட்டமும் அறுபதைத் தாண்டியது. யாரும் சாப்பாடு கொடுக்காத நாட்களில், நாய்களோடு கிளம்பி கடைவீதிக்குப் போவார். ஏதாவது ஒரு கடையைத் தேர்ந்தெடுத்து நின்று அங்கு பூரி, இட்லி, போண்டா எது இருந்தாலும் அதை எடுத்து நாய்களுக்கு வீசுவார். அதற்கு பிறகு, உள்ளே எவ்வளவு சாப்பாடு இருக்கிறதோ அத்தனையையும் மொத்தமாக எடுத்து வந்து கடைக்காரரே நாய்களுக்குப் போட்டுவிடுவார்.

'இதைவிடப் பல மடங்கு அதிகமாக வருமானம் வரப்போகிறது, எனக்கு தெய்வகடாட்சம் கிடைத்துவிட்டது' என்கிற நம்பிக்கைதான், கடைக்காரரை இப்படி செய்ய வைக்கிறது. அதனால்தான், 'மாயம்மா, நம் கடைக்கு வரமாட்டாரா?' என்றுதான் அனைவரும் காத்துக் கிடக்கச் செய்தது. கொஞ்சம் கொஞ்சமாக செய்தி பரவ, அவரைப் பார்க்கவும், ஆசி வாங்கவும் கூட்டம் அதிகமாகிவிட்டது.

ஆசி என்றால்... அவருக்குக் கொடுக்கும் உணவையோ, பிஸ்கெட்டையோ, வருக்கியையோ அவரது கையால் நமக்கு ஊட்டிவிடுவதுதான். அந்த பாக்கியத்துக்காக வடநாட்டில் இருந்தெல்லாம் பக்தர்கள் வர ஆரம்பித்தார்கள். ஆனால், மனிதர்களைவிட... நாய்களுக்குத்தான் அவர் அதிகம் ஊட்டிவிட்டிருக்கிறார். அந்த நேரங்களில் மனிதர்கள், நாய்களிடம் போட்டி போடுவதை பலமுறை கண்டிருக் கிறேன். மதுரையிலிருந்து ஒரு வேலையாக கன்னியாகுமரிக்கு போன நான், அம்மாவின் அருளால் கவரப்பட்டு, கூடவே தங்கி பணிவிடைகளைச் செய்ய ஆரம்பித்தேன். அதுவரையிலும் யாரிடமும் நெருக்கம் காட்டாத அம்மா, மகன்போல் என்னை ஏற்றுக்கொண்டார்.

அவருடைய கையால் உணவு வாங்க கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. ஆனால், எல்லோருக்கும் உணவு கிடைக்காது. என்றாலும், பல நாட்கள் காத்திருந்து... குழந்தை போல் அம்மா சிரிக்கும் சிரிப்பாவது காண கிடைக்காதா என்று ஏங்குவார்கள். சாதாரண மனிதர்களைப் போலவே பல ஊர்களில் இருந்தும் மகான்கள், சாமியார்கள், சித்தர்கள் என்று பலரும் இவரைத் தேடிவந்து தரிசிக்க ஆரம்பித்தனர். நோயாளிகள் இவரை தரிசித்து குணம் பெற்றார்கள்.

இதோ எந்தன் தெய்வம்! - 4

திடீரென அம்மா கடலுக்குள் போய் விடுவார். பல மணி நேரம் வர மாட்டார். அவர் ஜலசமாதியாகி விட்டார் என்று நினைத்தால், நாய்கள் மட்டும் நம்பிக்கையோடு கடலையே பார்த்துக் கொண்டிருக்கும். அம்மா திரும்பி வருவார். சில நேரங்களில் படுத்த இடத்தில் மூச்சு பேச்சு இருக்காது. 'அம்மா முக்தியடைந்து விட்டார்' என்று பக்தர்கள் முடிவு செய்தால், எழுந்து உட்காருவார். இப்படி தன்னளவில் சித்திகளை செய்தாலும், நாடி வருகிறவர்களின் துயரைப் போக்குவதற்கு முன்னுரிமை கொடுத்தார். ஒரு கட்டத்தில் அம்மாவின் உடல்நலம் பாதிக்கப்படவே... 'எங்காவது  கிராமத்துப் பக்கம் போய்விடலாம்' என்று சொன்னார். தமிழ்நாடு முழுவதும் ஓராண்டு அலைந்து திரிந்துதான் இந்தக் கிராமத்தில் வந்து தங்கினோம்!'' என்று கோவையாக, மாயம்மா வரலாற்றைச் சொல்லி முடித்தார் ராஜேந்திரன்.

மாயம்மா, கன்னியாகுமரியை விட்டுப் புறப்படப்போகிறார் என்றதும், பக்தர்கள் பலரும் தங்கள் தங்கள் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எங்குமே நிரந்தரமாக தங்காதவர், இந்த இடத்தில் மட்டும் தங்கிவிட்டார். மாயம்மாவை தேடி கன்னியாகுமரி போன பக்தர்கள், அவர் அங்கில்லையென்றதும் விசாரித்துக் கொண்டு ஏற்காடு அடிவாரத்துக்கே வர ஆரம்பித்தனர்.

இதோ எந்தன் தெய்வம்! - 4

கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் உருண்ட நிலையில், அந்தப் பகுதியில் மழை இல்லாமல் கடும் வறட்சி தாக்கியிருக்கிறது. 'எங்கிருந்தோ வந்த ஒரு சூனியக்கார கிழவி இங்க      இருக்கறதாலதான் மழையே பெய்யல. அவளை அடிச்சு விரட்டணும்’ என்று ஊரில் ஒரு பிரிவினர் தயாராக, அதை மாயம்மாவின் காதில் சொன்னார் ராஜேந்திரன். அதைத் தொடர்ந்து ஆரம்பித்த மழை, இரண்டு நாட்களுக்கு குடிசைகளில் தண்ணீர் புகும் அளவுக்கு அடித்துப் பெய்துவிட்டுத்தான் ஓய்ந்ததாம்!

பல அற்புதங்களைச் செய்த மாயம்மாவின் ஆன்மா, 92-ம் ஆண்டு, பிப்ரவரி ஒன்பதாம் தேதி மாலை மெள்ள அடங்கியிருக்கிறது. அவரது உடல் வைக்கப்பட்டு எழுப்பப்பட்ட     மண்டபம்தான்... இன்றைய மாயம்மா கோயில்.

''அம்மா இங்க வந்தப்ப, நாங்க சின்னப் பசங்க. அவங்ககிட்டக்கூட போக மாட்டோம். பந்து விளையாடினா... வேடிக்கை பார்ப்பாங்க. பந்து அவங்ககிட்ட போனா எடுத்துப் போடுவாங்க. ஆனாலும், அவங்கள நாங்க மதிக்கவே மாட்டோம். இன்னிக்கு, நாங்க நூறு பேருக்கும் மேல மாயம்மாவின் பக்தர்களா மாறியிருக்கோம். தேடி வர்ற அவரோட பக்தர் களுக்கு, சேவகர்களாகவும் இருக்கோம். அப்படி எங்களை ஆட்கொண்டது அவரோட அருள். இனம் தெரியாதவர்கள், மொழி தெரியாதவர்கள், தேசம் தெரியாதவர்கள்னு இங்கே தேடி வரும் போது அவர்களையெல்லாம் எப்படி அம்மா ஆட்கொண்டார்னு ஆச்சர்யமா இருக்கும்.

இங்க வர்றவங்க கையில எதையும் எடுத்துவரத் தேவையில்ல. வந்தபிறகு, அனுபவிச்ச துன்பங்களை தாராளமா இங்கயே விட்டுச் செல்லலாம். அப்படி இறக்கி வைக்கப்படுற துன்பங்களை, துயரங்களை சுமக்கும் சுமைதாங்கிதான் இந்த மாயம்மா!'' என்று கசிந் துருகிச் சொல்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த கார்த்திக்.

படங்கள்: க.தனசேகரன் 

வழிகாட்டி

சேலம் நகரிலிருந்து ஏற்காடு செல்லும் வழியில் சட்டக் கல்லூரி நிறுத்தத்தில் இருக்கிறது தேவி மாயம்மா கோயில். ஏற்காடு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இங்கு நின்று செல்லும். கோயில், காலை 7.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இடைவேளையின்றி திறந்திருக்கும். பிஸ்கட், ரஸ்க் போன்றவற்றை வாங்கிச் செல்லலாம். அவற்றை கோயிலைச் சுற்றியிருக்கும் நாய்களுக்குப் போட்டால்... அது மாயம்மாவுக்கு போய்ச் சேரும் என்பது நம்பிக்கை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism