Published:Updated:

“அழுதுகொண்டே இருந்த அம்மாக்களின் காலம் மலையேறிவிட்டது!”

பொங்கும் பி.ஜே.பி. புயல் அவேர்னஸ்

“அழுதுகொண்டே இருந்த அம்மாக்களின் காலம் மலையேறிவிட்டது!”

பொங்கும் பி.ஜே.பி. புயல் அவேர்னஸ்

Published:Updated:
##~##

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது. என்றாலும், தேசிய கட்சிகளில் பெண்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆங்கில தொலைக்காட்சிகள் முன்பு உட்கார்ந்தால், ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பெண் பிரதிநிதிகளின் அனல் பறக்கும் விவாதங்கள்... ஆச்சர்யமூட்டுகின்றன!

திருச்சியை பூர்விகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன், முன்னாள் மும்பை ஷெரீஃப் மகளும் பிரபல ஃபேஷன் டிசைனரும் தற்போதைய ஹாட் அரசியல்வாதியுமான என்.சி.சைனா, நடிகை டு அரசியல்வாதியான உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வாணி திருப்தி, குஜராத்தின் ஆளும்கட்சியால் அரசியல் பயிற்சி கொடுக்கப்பட்ட பத்திரிகையாளர் அசீஃபா கான், இந்தி நடிகர் அனுபம் கெர் மனைவி கிரண் கெர், முன்னாள் டெலி சீரியல் நடிகை ஸ்மிரிதி இரானி, மத்திய இணையமைச்சர் ஜெயந்தி நடராஜன்... இப்படி தேசிய அரசியலில் குரல் ஓங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் பட்டியல் நீள்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதில் புதிதாக சேர்ந்திருப்பவர், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் மற்றும் சமூக அமைப்புகள் பலவற்றின் பிரதிநிதியாக இருக்கும் மீனாட்சி லேகி! தினமும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் இவரை நிச்சயமாக பார்த்துவிட முடியும்! தேசிய பெண்கள் ஆணைய பிரதிநிதியாக, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாக்கள் குழுவில் இடம் பெற்றிருந்த மீனாட்சி, தற்போது பி.ஜே.பி-யின் மேல்மட்ட தலைவர்களில் ஒருவர்.

''ஆரம்பத்தில் 'சுதேசி ஜாக்ரன் மஞ்ச்' என்ற அமைப்பில் இடம் பெற்றிருந்தேன். சுதேசி பொருட்கள் மற்றும் பொருளாதார சிந்தனைகளை மக்களிடம் விதைப்பதற்காக பிரசாரங்களையும் கருத்தரங்குகளையும் இந்த அமைப்பின் மூலம் நடத்தினோம். பின்னர், பி.ஜே.பி-யிலிருந்து அழைப்பு வந்தது. மகளிர் பிரிவின் பொறுப்பாளராக இருந்த நான், தற்போது கட்சியின் தேசிய துணைத்தலைவர் மற்றும் அதிகாரப்பூர்வமான பேச்சாளர். கணவர் அமன் லேகி, உச்ச நீதிமன்ற முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவர். மாமனார், பி.என்.லேகி, உச்ச நீதிமன்ற பிரபல வழக்கறிஞர் மற்றும் அந்தக் கால அரசியலில் முக்கிய புள்ளி.  என் பிள்ளைகள் சட்டக் கல்லூரி மற்றும் கல்லூரிகளில் உயர் வகுப்பு படிக்கின்றனர். கணவரின் வருவாய் குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கிறது. எனவே, நான் தீவிர அரசியல் கவனம் செலுத்திவருகிறேன்'' என்று குடும்பப் பின்னணி சொல்லும் மீனாட்சி,

''பெண்கள் அரசியலுக்கு வருவதை, இன்னமும்கூட அதிசயமாகத்தான் பார்க்கிறார்கள்...'' என்று புன்னகைத்தபடியே தொடர்ந்தார்.

''நம்முடைய குடும்ப முறையில் வெளியே சென்று மற்றவர்களோடு கலந்துரையாடக்கூட பெண்களுக்கு வாய்ப்புகள் இல்லை. அதற்கான பயிற்சியும் இல்லை. அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தால், ஆண்களுக்கு இணையாக சாதிப்பார்கள். இதற்கு உதாரணமாக என் மாமியாரையே சொல்லலாம். அந்தக் காலத்திலேயே மனவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். நல்ல அறிவாளி. அவரிடம் பேசும்போது நிறைய அரசியல் விஷயங்களைக் கற்றுக்கொள்வேன். அவர் அரசியலுக்கு வரவில்லை. காரணம்... அதற்கான குடும்ப, சமூக, அரசியல் சூழ்நிலை அப்போது இல்லை. எனக்கு அது வாய்த்திருக்கிறது. இனி... மகள்களும், மருமகள்களும், பேத்திகளும் பரவலாக அரசியலுக்கு வருவதற்கான வாசல், எதிர்காலத்தில் இன்னும் விரிவாகும் என்பதில் சந்தேகமில்லை.

“அழுதுகொண்டே இருந்த அம்மாக்களின் காலம் மலையேறிவிட்டது!”

அதேசமயம், சமீபகாலமாக பெருகிவரும் பாலின வன்முறைகள்தான்... அச்சத்தை ஏற்படுத்துகின்றன. 'இந்தியாவில் மட்டுமா... மற்ற நாடுகளில் எல்லாம் நடக்கவில்லையா?' என்றுகூட கேட்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நியூயார்க் நகரம் முன்னணியில் இருக்கிறது. சீன தலைநகர் பீஜிங்கில், அதிக அளவில் பெண் சிசுக்கொலைகள் நடக்கின்றன. பாங்காங்கில் செக்ஸுக்கு தடையில்லை. அங்கும் பாலின வன்முறைகள் அதிகம்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இந்தியா மற்ற நாடுகளைவிட அனைத்திலும் வேறுபட்ட நாடு. குறிப்பாக... பெண்களுக்கு இழிவோ, கொடுமைகளோ ஏற்படுவதை ஒரு போதும் அனுமதிக்காத நாடு. அதைத்தான் இங்கே நாம் பார்க்க வேண்டும்.

சமீபத்திய சமூகச் சீரழிவுகளுக்கு எதிராக இளம்தலைமுறைப் பெண்கள் காட்டும் ஆவேசம்... நம்பிக்கை தருவதாக இருக்கிறது. ஆண்களின் தவறுகளால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்று தெரிந்தும், அழுதுகொண்டே இருந்த அம்மாக்கள் காலம் மலையேறிவிட்டது. அதைத் தடுக்கும், ஒடுக்கும் துடிப்போடு செயல்படுகிறது புதிய தலைமுறை. தங்களால் சாதிக்கமுடியும் என்கிற நம்பிக்கையில் இருக்கும் அவர்களுக்கு சிறிய அளவில் வழிகாட்டினால் போதும்... மாற்றத்தை ஏற்படுத்திவிடுவார்கள். என் ஆயுள் நாட்களுக்குள்ளோ... உங்கள் ஆயுள் நாட்களுக்குள்ளோ அந்த மாற்றம் நிச்சயமாக வரும்!''

- புத்துணர்வுடன் கை குலுக்கினார் மீனாட்சி லேகி!

- சரோஜ் கண்பத் படம்: அர்ச்சனா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism