Published:Updated:

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

டீன் ஏஜ் பிள்ளைக்கு பெஸ்ட் ஃப்ரெண்டாக வேண்டுமா? அவேர்னஸ்

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

டீன் ஏஜ் பிள்ளைக்கு பெஸ்ட் ஃப்ரெண்டாக வேண்டுமா? அவேர்னஸ்

Published:Updated:
##~##

 ''எங்கம்மா, எப்பவுமே என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்!’'

- வீட்டில் இருக்கும் விடலைகள் (டீன்ஸ்), இப்படி உங்களை உணர்வுப்பூர்வமாகச் சொல்கிறார்களா... நிச்சயமாக உங்கள் வீட்டில் உறவுகள் ஆரோக்கியமாக இருக்கிறது என்று தெம்பாக நீங்கள் சொல்லிக் கொள்ளலாம்'' என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மருத்துவ உளவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி, ஒவ்வொரு பெற்றோரும், குழந்தைகளின் பெஸ்ட் ஃப்ரெண்டாக இருப்பதற்கான வழிமுறைகளை இங்கே பட்டியலிடுகிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1. 13 - 18 வயதில் இருக்கும் விடலைப் பருவத்தினர், குழந்தை என்பதில் இருந்து பெரியவர் வயதுத் தகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருப்பவர்கள். எனவே, 'அவர்களுக்கு எதுவும் தெரியாது' என்கிற உங்கள் எண்ணத்தை இன்றிலிருந்து கைவிடுங்கள். பெற்றோரான நீங்கள், குழந்தைகளின் தோழனாக/தோழியாக மாற விரும்பினால், 12 வயதிலேயே தொடங்கிவிடுங்கள்.

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

2. கல்வி முதல் கல்யாணம் வரை அவர்கள் எந்தக் கேள்விகள் கேட்டாலும், அம்மாவோ அல்லது அப்பாவோ யாராவது ஒருவர் அதற்குரிய பதிலைச் சொல்லுங்கள். இருவரும் ஒரே பதிலைச் சொல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். 'இந்த பெரிய பேச்செல்லாம் எதுக்கு நீ பேசற?’ என்று அடக்கினால், தவறான பதில்கள்... வேறு இடத்தில் இருந்து அவர்களுக்குக் கிடைத்து, அதனால் அவர்கள் தடுமாற வாய்ப்பிருக்கிறது என்பதை மறக்காதீர்கள்.

3. விடலைப் பருவத்தினரிடம் வழக்கமான அல்லது கண்டிப்பான பெற்றோராக தொடர்ந்து இருந்துவிட்டு, திடீரென பதினான்கு, பதினைந்து வயதில்... 'நான் உன் ஃப்ரெண்டா இருக்கேன்... நீ எல்லாத்தையும் எங்கிட்ட பகிர்ந்துக்க’ என்று சொன்னால், 'நம்மை கண்காணிக்கறதுக்காக சொல்றாங்க போல’ என்று யோசித்து, உங்களை நம்பத் தயங்குவார்கள்.

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

4. நீங்கள் வேறு, உங்கள் எண்ணங்கள் வேறு, உங்கள் குழந்தைகளின் உலகம் வேறு என்பதை அவர்களிடம் பேசும்போதும், விவாதம் செய்யும் தருணங்களிலும் முதலில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பதையே குழந்தைகளும் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

5. நட்புச் சூழலை உருவாக்க, முதலில் இறுக்கம் தளர்த்தி தோழமையுடன் பேச ஆரம்பியுங்கள். உங்களுடைய சின்னச் சின்ன பெர்சனல் விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டு, 'இதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?’ என்று கேட்டு, அவர்களுக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை உணர வையுங்கள்.

6. குழந்தை வீடு திரும்பியதும், 'இன்னிக்கு ஏதாச்சும் பனிஷ்மென்ட் வாங்கினியா... என்ன தப்பு செஞ்சே?’ என்று விசாரணை அதிகாரியாக நடக்காமல், சாப்பிட ஏதாவது கொடுத்துவிட்டு, 'ஸ்கூல்ல என்ன நடந்தது? உன் ஃப்ரெண்ட் ஸ்கூலுக்கு வந்தாளா? என்ன விளையாடினீங்க?’ என்று அன்பாக கேளுங்கள். அவர்கள் தரும் பதில்களுக்கு... 'அப்புறம்?! அப்படியா... சூப்பர்!’ என்று ஆர்வத்துடன் ரியாக்ட் செய்யுங்கள். தான் தவறு செய்திருந்தால்கூட, மறைக்காமல் உங்களிடம் சொல்கிற மனப்பான்மை குழந்தைக்கு  வந்துவிடும்.

7. விடலைப் பருவத்தினரை நிறைய பேசவிடுங்கள். அதன் பிறகு உங்கள் ஆலோசனைகளை (கவனிக்க... முடிவுகளை அல்ல ஆலோசனைகளை மட்டும்) அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் செய்கிற செயலில் உள்ள நன்மை, தீமைகளை சொல்லிவிட்டு அதன் பிறகு 'நீ நல்ல முடிவா எடுப்பேனு நம்புறேன்’ என்று சொல்லி, அதற்குச் சம்மதியுங்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த காரியம் தோல்வியில் முடியும்போது, பக்கபலமாக இருந்து, தோல்விக்கான காரணத்தைக் கண்டறிவதுதான் உண்மையான நண்பர்களுக்கான செயல்.

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

8. 'படி படி’ என்று நச்சரிக்காமல்... தினமும் ஒரு மணி நேரமாவது விளையாடவிடுங்கள். படிப்பு அழுத்தமும், இப்போதுள்ள குழந்தைகளின் முக்கியப் பிரச்னை. குழந்தையின் திறனுக்கும் அதிகமான, தாங்க முடியாத படிப்புச் சுமைகளை திணிக்காதீர்கள். படிப்பில் அதிகம் சிரமங்களைச் சந்திக்கும் குழந்தையை 'சென்ட்ரல் போர்டு சிலபஸ்தான் படிக்க வேண்டும்' என்று நிர்ப்பந்திக்காமல், எளிய கல்வித் திட்டத்துக்கு மாற்றுங்கள்.

9. அவர்கள் ஏதாவது தப்பு செய்தால், வழக்கமான உங்களுடைய கோபம், திட்டு, அடி என எதையும் காண்பிக்காமல், 'இந்த விஷயத்தை சரிசெய்துக்கிட்டாலே போதும்... அடுத்த தடவை இந்த தப்பு நடக்காது’ என்பதை பேசி புரிய வையுங்கள்.

10. 'அப்பா, அம்மா நம்மகிட்ட இவ்வளவு ஃப்ரீயா பேசுறாங்க. அவங்ககிட்ட நாமளும் எல்லாத்தையும் பகிர்ந்துக்கலாம்' என்கிற மனநிலைக்கு கொண்டு வாருங்கள். படிப்படியாக அவர்களின் தோழி/தோழன் ஆகுங்கள். உடனடி ரியாக்ஷனை எதிர்பார்க்காதீர்கள். அது நடக்கவும் செய்யாது.

11. டீன் வயதுப் பிள்ளைகளுக்கு ஸ்பூன் ஃபீடிங் செய்வதை விட்டுவிட்டு ஆலோசனைகளை மட்டுமே கொடுங்கள். கல்வி மற்றும் வேலை விஷயத்தில் முடிவை அவர்கள் எடுக்கட்டும். அதற்காக 'என் பசங்க தங்கமானவங்க’ என்று கண்டுகொள்ளாமல் விடாதீர்கள். அவர்களை கண்காணியுங்கள்... ஆனால், வேவு பார்க்காதீர்கள்.

12. தோல்வியில் அவர்கள் துவண்டு போகும் போதெல்லாம், எங்காவது அழைத்துச் சென்று, மனதுக்கு மாற்றம் கொடுங்கள். வெற்றிக்கு முதல் படி, தோல்விதான் என்பதைப் புரிய வைத்து, தொடர்ந்து புத்துணர்வு ஊட்டுங்கள்.

- ம.பிரியதர்ஷினி, படங்கள்: தே.தீட்ஷித், மாடல்கள்: தீபா - அனு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism