Published:Updated:

“வறுமைதான், வைராக்கியத்தைத் தந்துச்சு..!”

பத்தாம் வகுப்பு பளீர் மாணவிகள்சக்சஸ்

“வறுமைதான், வைராக்கியத்தைத் தந்துச்சு..!”

பத்தாம் வகுப்பு பளீர் மாணவிகள்சக்சஸ்

Published:Updated:
##~##

ழ்மை, குடும்பச் சிக்கல் என்று ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும், பத்தாம் வகுப்புத் தேர்வில் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றன இளம் குருத்துகள் பல! இவர்களின் உணர்ச்சிப் பூர்வமான வார்த்தைகள், அடுத்த ஆண்டு தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அனை வருக்குமே உற்சாக டானிக்!

ரேவதி, 414/500 (அரசினர் மேல்நிலைப் பள்ளி, உள்ளிக்கோட்டை, திருவாரூர்): ''அம்மாவும், பாட்டியும்தான் படிக்க வெச்சாங்க. காலையில் 4 மணிக்கு எழுந்து படிச்சுட்டு, ஆடு மேய்க்க போயிடுவேன். திரும்ப வந்து கஞ்சி குடிச்சுட்டு, ஸ்கூலுக்குப் போவேன். கூட படிக்கிற புள்ளைங்க சாயந்திரம் டியூஷன் போகும்போது... மறுபடியும் ஆடு மேய்க்க கிளம்பிடுவேன். வீட்டுக்கு வந்து, வேலைகளை முடிச்சுட்டு, படிக்க உட்காருவேன். மொத்தத்துல படிக்கறதுக்கு கொஞ்ச நேரம்தான் கிடைக்கும். அதனால, வகுப்புல பாடம் நடத்துறதையே உள்வாங்கிக்குவேன். கணித ஆசிரியை ஆகணும்கிறது ஆசை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஹாரிகா, 495/500 (அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை): ''எங்கப்பா மாரடைப்பால் திடீர்னு இறந்த பிறகு, என்னை ஆளாக்குறதுல அம்மாவுக்கு வைராக்கியம் கூடுச்சு. வீட்டு வாடகைதான் வருமானம். என்னோட எல்லாத் தேவைகளையும் செய்து கொடுத்து, படிப்பு மட்டுமில்லாம ஓவியம், பரதநாட்டியம்னு நேஷனல் லெவல் போட்டி கள்ல கலந்துக்கற அளவுக்கு வளர்த்தெடுத்தாங்க. சந்தேகங்களுக்கு நெட்ல பார்த்து பதில் சொல்றது, படிக்குறதுக்கு பக்கபலமா இருக்கறதுனு கைதூக்கி விட்டாங்க. ஸ்டேட்லயே நாலாவது இடம் வாங்கியிருக்கறது... அம்மாவுக்கு சமர்ப்பணம்!''

 “வறுமைதான், வைராக்கியத்தைத் தந்துச்சு..!”

ஈஸ்வரி, 497/500 (தனலட்சுமி-சீனிவாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி, உறையூர், திருச்சி): ''எனக்கு 3 வயசு இருக்கும்போதே அம்மா இறந்துட்டாங்க. இன்னொரு கல்யாணத்த பத்தி யோசிக்காம, அம்மாவாவும் இருந்து என்னையும் தங்கையையும் கவனிச்சுக்கறது லாரி டிரைவரான எங்கப்பாதான். சமைச்சுக் கொடுக்கிறதுல இருந்து, ஸ்கூல்ல விடுறது வரைக்கும் அவர்தான்.  லாரிக்கு போறப்போ மட்டும் நான் சமைப்பேன். ஸ்டேட் ரேங்க் வாங்கணும்கிற அவரோட ஆசைப்படியே, மாநிலத்தில் இரண்டாம் இடத்தைப் பிடிச்சுட்டேன்!''

 “வறுமைதான், வைராக்கியத்தைத் தந்துச்சு..!”

செல்வி, 456/500 (அரசு மேல்நிலைப் பள்ளி, ஊமச்சிகுளம், மதுரை): ''கூலி வேலைக்குப் போற அம்மா, அப்பா ரெண்டுபேரும், ரொம்ப கஷ்டப்பட்டுதான் என்னையும் தங்கையையும் படிக்க வைக்கறாங்க. வறுமைதான், நிறைய மார்க் வாங்கணும்கிற வைராக்கியத்தை கொடுத்துச்சு. தினமும் டைம்டேபிள் போட்டு படிச்சேன். கரன்ட் இல்லாதப்போ, விளக்கு வெளிச்சத்துல படிச்சேன். ப்ளஸ் டூ-லயும் நல்ல மார்க் எடுத்து, டாக்டருக்குப் படிக்கணும்கிறது ஆசை. இப்படியரு குடும்பச் சூழல்ல... இந்த ஆசை சரியா, தவறானு தெரியல!''

தீபிகா, 496/500 (அரசு மேல்நிலைப் பள்ளி, வேடசந்தூர், திண்டுக்கல்): ''தம்மனம்பட்டிதான் சொந்த ஊரு. அப்பா, டீக்கடை. அம்மா, டெய்லர். ஒரு தம்பியும், தங்கையும் இருக்காங்க. வீட்டுல ஒரே ஒரு ரூம்தான். வாசல்லதான் டீக்கடை. காலையில நாலு மணிக்கு எந்திரிச்சு, அஞ்சு மணி வரை படிப்பேன். பிறகு, கடைக்கு ஆளுங்க வந்துடறதால சத்தமா இருக்கும். சாயங்காலம் ஸ்கூல்ல இருந்து திரும்பி வந்ததும்... அம்மா தைச்சி வெச்சிருக்கற துணிகளுக்கு கொக்கி வெக்குறது, எம்மிங் பண்றதுனு செஞ்சுட்டு, எட்டு மணிக்கு படிக்க உக்காருவேன். கவனமா படிச்சதுதான் மாநில அளவில் மூணாவது இடத்தை வாங்கிக் கொடுத்திருக்கு.

தினமும் காலையில நாலு மணிக்கு போன் போட்டு எழுப்பிவிடறது, நைட்ல போன் போட்டு 'படிக்கிறியா... ஏதாவது டவுட் இருக்கா?’னு கேட்கறதுனு எனக்கு உதவிகள் செய்த கிளாஸ் டீச்சர் திருநாவுக்கரசு, ஈஸ்வரி டீச்சர், தலைமையாசிரியர் இவங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்''

ஆர்.டி.நதியா, 486/500 (சரஸ்வதி பாடசாலை மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்): ''எங்கப்பா கூலி நெசவாளி. மாசம் 3,000 வருமானம் வர்றதே பெருசு. சிரமத்துக்கு இடையிலதான் படிக்க வெச்சாங்க. 'நம்ம குடும்பத்துல நீதான் பத்தாவது வரை வந்திருக்க. நல்ல மார்க் எடுக்கணும். வீட்டுக் கவலை எதுவும் மனசுல இருக்கக் கூடாது’னு சொல்லிட்டே இருப்பாங்க. பொறுப்பை உணர்ந்து படிச்சு, பெருமை தேடித் தந்துட்டேன். ப்ளஸ் டூ-விலும் நல்ல மார்க் எடுத்து ஐ.ஐ.டி-யில் படிக்கணும்னு ஆசை. 'கடன் வாங்கியாவது படிக்க வைக்கிறேன்!’னு அப்பா சொல்லியிருக்கார்!''

ஏ.ரம்யா, 444/500 (சரஸ்வதி பாடசாலை மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்): ''எங்கப்பா நெசவுல பாகு போடுற வேலை பார்க்கிறார். அம்மா வீட்டுல தனியா தறி வெச்சு கூலிக்கு நெய்து கொடுக்கு றாங்க. எங்கக்கா பி.காம், இறுதியாண்டு. கடன் வாங்கித்தான் ஸ்கூல், காலேஜ் ஃபீஸ் கட்டுவாங்க. 'படிச்சு நல்ல வேலைக்குப் போகும்போதுதான், கஷ்டத்துக்கு எல்லாம் பலன் கிடைக்கும்’னு சொல்லியே ஊக்கப்படுத்துவாங்க. 'குடும்பத் துக்கான ஒரே ஏணி இதுதான்'னு உணர்ந்து படிச்சதாலதான், இன்னிக்கு நல்ல மார்க் வாங்கியிருக்கேன்!''

- ஆர்.குமரேசன், ஆ.சாதிக்பாட்ஷா, க.பிரபாகரன், க.அருண்குமார், மு.சா.கௌதமன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், வீ.சிவக்குமார், செ.சிவபாலன், த.ரூபேந்தர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism