##~## |
'ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 87% சதவிகிதம் இருந்ததால், தன்னுடைய மார்பகங்களை மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் அகற்றிவிட்டார்' என்கிற செய்தி, உலக அளவில் ஏற்படுத்திய அதிர்ச்சி யைத் தொடர்ந்து, ''செய்திகளைப் படித்துவிட்டோ... கேட்டுவிட்டோ... மார்பகப்புற்று பற்றி அச்சம் கொள்ள வேண்டாம்'’ என்று சென்ற இதழில் அறிவுறுத்தியிருந்தார், சென்னையைச் சேர்ந்த பிரபல மார்பகப்புற்று நோய் நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணா. இந்த இதழில், மார்பகப்புற்று பற்றிய விழிப்பு உணர்வுத் தகவல்களைத் தருகிறார் டாக்டர்.
எதனால் ஏற்படுகிறது புற்று?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''நம் உடம்பு செல்களால் ஆனது. ஒரு வரைமுறைக்குட்பட்ட அந்த செல்களில் ஏதாவது பிறழ்வு ஏற்பட்டு, வரைமுறை இல்லாமல் தான்தோன்றித்தனமாக செல்கள் பெருகுகிறது என்றால், அதுதான் புற்றுநோய். மார்பக செல்கள் அப்படி பெருகினால், அது மார்பகப்புற்று. மார்பகங்கள் என்பவை, இதயம், மூளையைப்போல அத்தியாவசிய உறுப்பு இல்லை. குழந்தைக்குப் பால் கொடுப்பது மட்டுமே அதன் பயன். பின்னர் ஏன் மார்பகப்புற்று பயமுறுத்துவதாக உள்ளது என்றால், ரத்த ஓட்டத்தின்போது மார்பகம் வழியாக வரும் ரத்தத்தில் கேன்சர் செல்கள் கலந்தால், உயிருக்கு அத்தியாவசிய மான உறுப்பான மூளை, கல்லீரல், நுரையீரல் போன்றவற்றுக்கு அந்த ரத்தம் செல்லும்போது, கேன்சர் செல்களும் அங்கே போய் சேர்ந்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதுதான் அச்சத்துக்குக் காரணம். எனவே மார்பகப்புற்று செல்கள், மற்ற உறுப்புகளுக்குச் செல்லாமல் தடுக்கத்தான், அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தை நீக்குகிறோம்.

இதுவரை, 80 சதவிகித புற்றுநோய்கள் எதனால் வருகின்றன என்பதே கண்டறியப்படவில்லை என்பதுதான் உண்மை. மரபணு மூலம் வருகிற கேன்சர் 5 - 10% தான். ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு மேல் கேன்சர் இருக்கும்பட்சத்தில், அந்தக் குடும்பத் தில் மற்ற பெண்களுக்கு கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகம்.
எப்படி அறிவது?
மார்பகத்தில் உள்ள புற்று செல், ஒரு செ.மீ அளவுக்கு வளர்ந்தால் மட்டுமே நம் கைகளுக்கு தட்டுப்படும். எனவே, பரிசோதனைகள் மூலமாக அதற்கு முன்னதாக கண்டுபிடிப்பதே உசிதம். அதற்கு வழிவகுக்கிறது 'மேமோகிராம்’ பரிசோதனை. 40 வயதை தொட்ட மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒரு தடவை இந்த பரிசோதனையை, தரமான மருத்துவமனையில் செய்துகொள்வது முக்கியம். ஏனென்றால், பரிசோதனை நிலையங்களில் தொழில்நுட்ப குறைபாடு இருந்தால்... இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருக்கிறது என்றும் பரிசோதனை முடிவுகள் தவறாக வந்துவிடும். இதன் காரணமாக, தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யும் அவலமும் ஏற்பட்டுவிடும்... ஜாக்கிரதை!

சுயபரிசோதனை செய்யலாம்!
என்னைப் பொறுத்தவரை, எந்த ஒரு நோய்க்குமான அறிகுறிகளை எப்போதும் பேட்டிகள் மூலமாக சொல்வதில்லை. இதனால் பலர் வீணாக குழம்பி நிம்மதி இழப்பார்கள் என்பதுதான் காரணம். ஆனால், எல்லா பெண்களும் கண்டிப்பாக மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவேன். மார்பகப் பரிசோதனையின் முக்கிய அம்சமே, இயல்பான நிலையில் இருந்து மாறுபட்டிருப்பதைக் கண்டறிவதுதான். அப்படி எதுவும் புலப்பட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டும். மாதவிலக்கு சமயத்தில் இயல்பாகவே மார்பகம் ஒருவித கனத்த வலியுடன் இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் பரிசோதனையைத் தவிர்க்கலாம். ஒவ்வொரு மாதமும் சுயபரிசோதனையைத் தொடருங்கள். மார்பகங்கள் எப்போதும் போல இருந்தால் பயப்படத் தேவையில்லை. மார்பகத்தில் சில வித்தியாசங்கள் தோன்றினால், அலர்ட் ஆகுங்கள்'' என்ற டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா, மார்பகப் புற்றுக்கான சிகிச்சை என்ன? மார்பகப் புற்று வந்துவிட்டால் கண்டிப்பாக மார்பகங்களை அகற்றித்தான் ஆக வேண்டுமா? தாம்பத்யம் பாதிக்கப்படுமா? மார்பகங்களை அகற்றியபிறகு, செய்ய வேண்டியவை என்னென்ன என்பது பற்றியெல்லாம் பேசினார்.
அவையெல்லாம் அடுத்த இதழில்...
- ம.பிரியதர்ஷினி

நீங்களே செய்யலாம் மார்பகப் பரிசோதனை!

கண்ணாடியின் முன் நின்று, கைகளை உயர்த்தியும், இடுப்பின் மீது கை வைத்தும் என இரு நிலைகளில் மார்பகம் எவ்வாறு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

படத்தில் காண்பது போல, ஒரு கையை உயர்த்தி, மறு கையைக் கொண்டு மார்பகத்தை தொட்டு உணர்ந்து பழக வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சரிந்திருக்கும் மார்பகத்தை தூக்கிப் பார்ப்பதல்ல சுயபரிசோதனை. அகன்ற உள்ளங்கையால் மார்பகத்தை (மார்புக் காம்பில் வைத்து லேசாக) அழுத்திப் பார்ப்பதே மார்பகப் பரிசோதனை. அப்போது மார்பில் எங்காவது கட்டியிருந்தால், உள்ளுக்குள் நெருடுகிற மாதிரி இருந்தால் அது கைக்கு தென்படும். அப்படிஇருந்தால், மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.