Published:Updated:

களிமண்ணை நீங்களும் காசாக்கலாம்!

கிராஃப்ட்

களிமண்ணை நீங்களும் காசாக்கலாம்!

கிராஃப்ட்

Published:Updated:
களிமண்ணை நீங்களும் காசாக்கலாம்!
##~##

 ங்க நகை, வைர நகை, சணல் நகை, பிளாஸ்டிக் நகை, பேப்பர் நகை... இப்படிப்பட்ட நகைகளின் வரிசையில், தானும் டாலடிக்கிறது... 'பாலிமர் க்ளே ஜுவல்ஸ்'!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அதென்ன பாலிமர் க்ளே ஜுவல்ஸ்... அதைத் தயாரிப்பது எப்படி... இதையே ஒரு தொழிலாக செய்து பணம் சம்பாதிக்க முடியுமா?' எனக் கேள்விகள், அணி வகுக்கின்றனதானே!

இதற்கெல்லாம் சுடச்சுட பதில் தருகிறார் ரம்யா... அமெரிக்காவிலிருந்தபடி!

''14 ஆண்டுகளாக, அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் சென்னைப் பெண் நான். பயோ கெமிஸ்ட்ரி படித்து, ஃபார்மா கம்பெனியில் புராஜெக்ட் மேனேஜர் பதவியில் இருந்தாலும், கைவினைப் பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். அதுதான் 'மணி மேட்' (Mani Made) என்கிற பெயரில், 'பாலிமர் க்ளே' நகைகள் செய்யும் தொழிலில் என்னை வெற்றிபெற வைத்துள்ளது!'' என்று முன்னுரை கொடுக்கும் ரம்யா, இத்தொழிலில் ஆர்வம் வந்த கதையைத் தொடர்கிறார்.

''கடந்த நவராத்திரி கொலு விழாவின்போது, வீட்டுக்கு வருபவர்களுக்கு வித்தியாசமான பரிசுப் பொருள் கொடுக்கலாம் என்று யோசித்தேன். அப்போது, 'ப்ளே டொவ்', 'பாலிமர் க்ளே' என்றெல்லாம் அழைக்கப்படும் 'சைனா களிமண்' வைத்து, என் 5 வயது மகன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அதை வைத்தே சின்ன பென்டென்ட் செய்து, கொலு பார்க்க வந்த 20 தோழிகளுக்குக் கொடுத்தேன்.

களிமண்ணை நீங்களும் காசாக்கலாம்!

தோழிகள் மற்றும் கணவர் கொடுத்த பாராட்டுகள், ஊக்கத்தில்... 'மணி மேட்’ என்கிற பெயரில் இதை ஒரு தொழிலாகவே ஆரம்பித்தேன். முகநூல் பக்கத்தில் ( www.facebook.com/manimade1 ) நகைகளின் படங்களை அப்லோட் செய்தேன். ஆர்டர்கள் குவிய ஆரம்பித்துவிட்டன. ஆம், தயாரிக்கும் 90% நகைகளை, முகநூல் மூலமே விற்பனை செய்கிறேன். நண்பர்களின் 'லைக்’, 'ஷேர்’ எல்லாம் சேர்ந்து, விற்பனை வட்டத்தை பெரிதாக்கின. கட்டணம் இல்லாத முகநூலின் ஷாப்பிங் பக்கங்களையும் பயன்படுத்துகிறேன். பாலிமர் க்ளே நகைகள் செய்வது பற்றி 'ஸ்கைப்’ மூலமாக வகுப்பும் எடுக்கிறேன்.

என் கற்பனையின் திசையில் புதுப்புது டிசைன் களில் நகைகளை உருவாக்கினேன். வாசல் கோலத்தில் இருக்கும் பூக்களின் வடிவங்கள் முதல், மகனின் கிறுக்கல்கள் வரை டிசைன்களைத் தேடுவேன். இந்திய பாரம்பரிய நகைகள், இந்தோனேஷிய, மலேஷிய நாட்டு தங்க நகைகள் மற்றும் ஜிப்ஸி மக்களின் வெள்ளி நகைகள் என்று எதையும் விட்டு வைக்கவில்லை'' என்று சிரித்தபடியே சொல்லும் ரம்யா,

''முதலில் பேப்பரில் வரைந்து கொண்டு, எந்த நிறம், எந்த இடத்தில், எவ்வளவு இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால்... பாதி வேலை முடிந்த மாதிரி. பிறகு, நகைகள் செய்ய வேண்டியதுதான்'' என்றபடி, 'பென்டன்ட்' (டாலர்) செய்வதற்கான செய்முறை விளக்கமும் தந்தார்.

தேவையான பொருட்கள்: பாலிமர் க்ளே (அடர் மற்றும் வெளிர் நிறங்களில் ஒவ்வொன்று), கோல்ட் அல்லது சில்வர் பெயின்ட், ஐ ஹூக், நைலான் ஒயர்-20 இன்ச், நெக்லஸை பின்புறம் சேர்க்கக் கூடிய கிளாஸ்ப் (Clasp) - 1 செட், கூரான ஊசி (நீளமானது) - 1, பேப்பர், பேனா, பால் பாயின்ட் பேனா ரீஃபில்.

செய்முறை: பேப்பரை மடித்து, தேவையான டிசைனை இரண்டு பக்கமும் ஒரே அளவாக வரையவும். இரண்டு நிற க்ளேவையும் சப்பாத்தி மாவு இடுவதுபோல், தட்டையாக பரப்பிக் கொள்ளவும். அடர்நிற க்ளே மீது, டிசைன் பேப்பரை வைத்து ட்ரேஸ் செய்யவும். இதற்கு பால் பாயின்ட் பேனா ரீஃபில் அல்லது குண்டூசி போல் கூரான பொருளை உபயோகிக்கலாம். வெளிர் நிற க்ளேயில் உங்களுக்கு விருப்பான டிசைனை ஊசி அல்லது கூரான கத்தி கொண்டு வெட்டிக் கொள்ளவும். வெட்டிய இரண்டு க்ளேவையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து லேசாக அழுத்தவும். பேனா ரீஃபில் வைத்து மேலே மெல்லிய கோடுகள் வரையவும்.

ஐ ஹூக் என்ற கம்பியை, பென்டன்டுக்கு 90 டிகிரி சுழன்று இருக்குமாறு செருகவும். ஐ ஹூக் நேராக இருக்க வேண்டும். மணிகளுக்கு சின்ன உருண்டைகளாக சீராக உருட்டவும். இவற்றில் மறக்காமல் ஓட்டை போடவும். செய்த க்ளே வடிவங்களை, மைக்ரோவேவ் அவன் (275 டிகிரி வெப்பம்) உள்ளே 15 நிமிடம் வைக்கவும். அல்லது, பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் போட்டு, 10 நிமிடம் அப்படியே கொதிக்கவிடவும். க்ளே, கல் போல் ஆகிவிடும். சற்று ஆறியதும், பெயின்ட் செய்யலாம்.

முதலில் நீல நிறம் தடவி, ஈரமான துணி அல்லது பேப்பரால் கொஞ்சம் துடைத்து விட்டு, மேலே சில்வர் நிறம் தடவி, மீண்டும் கொஞ்சம் துடைக்க வேண்டும். ஆங்காங்கே க்ளே மற்றும் பெயின்ட் ஆகியவை மாறி மாறி தெரிந்து, ஆன்ட்டிக் லுக் கிடைக்கும்.

நிறைவாக... மணிகளையும் பென்டன்டையும் கோத்து, நெக்லஸ் ஆக்கி ஜொலிக்க விடுங்கள்.

- பொன்.விமலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism