Published:Updated:

சிறப்பான வாழ்க்கைக்கு கைகொடுக்குமா செல்போன் ரீ-சார்ஜ்?!

பிஸினஸ் கேள்வி பதில் ஹெல்ப்லைன்

சிறப்பான வாழ்க்கைக்கு கைகொடுக்குமா செல்போன் ரீ-சார்ஜ்?!

பிஸினஸ் கேள்வி பதில் ஹெல்ப்லைன்

Published:Updated:
##~##

வாருங்கள்...வழிகாட்டுகிறோம்!

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில்முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி.ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்.

''ஏதாவது தொழில் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பெண் நான். செல்போன் ரீ-சார்ஜ் டீலர்ஷிப் எடுக்க முனைகிறேன். அதற்கு யாரை அணுக வேண்டும், மூலதனம் எவ்வளவு தேவைப்படும், தொழில் நடைமுறைகள் என்னென்ன என்றெல்லாம் வழிகாட்ட முடியுமா..?''

- லாவண்யா, மதுரை

சிறப்பான வாழ்க்கைக்கு கைகொடுக்குமா செல்போன் ரீ-சார்ஜ்?!

''பல்வேறு செல்போன் நிறுவனங்களும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுமாக இன்று செல்போன் தொழிலின் களம் விரிவடைந்தபடியே உள்ளது. எனவே, செல்போன் ரீ-சார்ஜ் டீலர்ஷிப் என்பது நிச்சயம் தேவையுள்ள தொழிலே. ஆனால், அதில் எந்த நிலையில், எவ்வளவு மூலதனத்தில் நாம் களம் இறங்க வேண்டும் என்பது முக்கியம்.

ஒவ்வொரு அலைபேசி நிறுவனமும் தங்களின் ரீ-சார்ஜ் டீலர்ஷிப்பை, பகுதி வாரியாக வழங்குகின்றன. இதில், 'சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்' என்கிற நிலையில் ஒருவர் இருப்பார். அவர் தன் வரையறைக்குள் வரும் பகுதியில் உள்ள ஊர்களுக்கு 'சப் டீலர்' என்கிற அடிப்படையில் சிலரை நியமனம் செய்வார். இத்தகைய சப் டீலர்களிடம் இருந்து கூப்பன்களை வாங்கி விற்பனை செய்யும் ரீ-டெயில் கடைகள்தான்... நாம் பொதுவாகச் செல்லும் செல்போன் ரீ-சார்ஜ் கடைகள்.

இப்போது இந்த மூன்று நிலைகளிலும் தேவைப்படும் முதலீடு பற்றிப் பார்ப்போம்.

'சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்' என்ற நிலையில் வருபவர், ஒரு பெரிய பகுதி முழுமைக்கும் குறிப்பிட்ட நிறுவனத்தின் செல்போன் ரீ-சார்ஜ் டீலர்ஷிப் எடுக்க, கோடிக்கணக்கில் முதலீடு தேவைப்படும். அதற்கு அடுத்த நிலையான சப் டீலர்ஷிப்புக்கு குறைந்தது 10 லட்சம் முதலீடு தேவைப்படும். செல்போன் ரீ-சார்ஜ் செய்யும் கடை வைக்கும் பட்சத்தில், சப் டீலர்களிடம் இருந்து கூப்பன்களை வாங்கி விற்க, சில ஆயிரங்களை முதலீடாக போட்டாலே போதும். நீங்கள் முதலீட்டிலும், அனுபவத்திலும் முதல் நிலையில் இருப்பதால், இங்கு குறிப்பிட்டுள்ளதில் மூன்றாவது வகையான செல்போன் ரீ-சார்ஜ் கடையுடன் தொழிலை ஆரம்பிப்பதே பரிந்துரைக்கத்தக்கது. அதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.

கல்லூரிகள், அலுவலக வளாகங்கள், விடுதிகள்... என மக்கள் உங்கள் கடையைத் தேடி வந்து ரீ-சார்ஜ் செய்யும் வாய்ப்புள்ள பகுதியாக முதலில் தேர்ந்தெடுங்கள். இந்தக் கடையில் நீங்கள் பல அலைபேசி நிறுவனங்களின் கூப்பன்களையும் வாங்கி விற்பனை செய்யலாம். பொதுவாக 3,000 ரூபாய் கட்டினால், உடனடியாக 3,100 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் கூப்பன் கொடுப்பார்கள். எனவே, ஆரம்பகட்ட முதலீடாக 10 அல்லது 15 ஆயிரம் ரூபாய் இருந்தால், தொழில் அதிக சிரமமின்றி ஆரம்பித்து லாபத்தில் பயணிக்கும். உங்களின் வியாபாரத்தில் சப் டீலருக்கு திருப்தி ஏற்படும்பட்சத்தில், முன்னதாகவே ரீ-சார்ஜ் கூப்பன்கள் வழங்கி, இரண்டு, மூன்று நாட்கள் கழித்துக்கூட பணம் பெற்றுக்கொள்ளும் சலுகையை வழங்குவார்கள். வருமானம் ஏறுமுகமாக இருந்து, இந்தத் தொழிலில் போதிய அனுபவமும், தொழிலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான மூலதனமும் கிடைக்கப்பெற்ற பிறகு, சப் டீலர், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் என முன்னேற்றம் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கலாம்.''

தஞ்சாவூர் பெயின்ட்டிங்... கற்றுக்கொள்வது எப்படி?  

''பாரம்பரியமிக்க தஞ்சாவூர் பெயின்ட்டிங்கை ஒரு தொழிலாக எடுத்துச் செய்யும் இலக்குடன் இருக்கும் எனக்கு, அதைக் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி மற்றும் கட்டண விவரங்கள் தேவை. அதன் விற்பனை வாய்ப்புகள் பற்றியும் கூறவும்...''

- சாரதா, காஞ்சிபுரம்

சிறப்பான வாழ்க்கைக்கு கைகொடுக்குமா செல்போன் ரீ-சார்ஜ்?!

''இந்தியாவில் உள்ள ஓவியக்கலைகளில்   தஞ்சாவூர் ஓவியக்கலைக்கு சிறப்பான இடம் உண்டு. நாயக்க மன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது, இக்கலைக்கு சிறப்பான இடம் தந்து போற்றி வளர்த்தனர். தஞ்சாவூர் பெயின்ட்டிங் அதன் ஆடம்பர தோற்றத்துக் காக இப்போதும் பெரிதும் விரும்பப்படுகிறது. மேலும் 22 கேரட் தங்கத் தகடுகள் மற்றும் ஆபரண ரத்தினங்கள் (ஜெய்ப்பூர் கற்கள்) என்று பயன்படுத்தி செய்யப்படுவதால், இந்த ஓவியங்களுக்கு அதிக நாட்கள் நீடித்து நிற்கும் தன்மை கிடைக் கிறது.

சரி, இதற்கான பயிற்சி பற்றிப் பார்ப்போம். சென்னை, கோவை, கும்பகோணம், தஞ்சாவூர் என பல இடங்களிலும் தஞ்சாவூர் பெயின்ட்டிங் கலைக்கூடங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக, திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் 100 பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியப் பயிற்சி அளிக்கும் திட்டம் அண்மையில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஒரு மாதப் பயிற்சி, 2000 ரூபாய் உதவித் தொகை மற்றும் பயிற்சி பொருட்கள் இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தாங்கள் இத்திட்டத்தில் பயன்பெற, துறை சார்ந்த அரசு அலுவலகத்தை அணுகலாம்.

அடுத்ததாக, இதன் வருமான வாய்ப்பைச் சொல்கிறேன். ஓவியம் தயாரிப்பதற்கான பொருட்கள் ஆயிரத்துக்குள் அடங்கிவிடும். ஓவியத்துக்கு நீங்கள் பயன்படுத்தும் தரமான பொருட்களும் அதன் அழகும் இதனை உடனே வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தை மக்களின் மனதில் ஏற்படுத்தும்படி இருக்க வேண்டியது அவசியம். ஓவியத்துக்கு பொதுவான விலை நிர்ணயம் என்பது இல்லை. ஓவியத்தில் உங்களால் உருவாக்கப்படும் உயிரோட்டத்துக்கு ஏற்ப அதன் விற்பனை விலையை நீங்கள் தைரியமாக நிர்ணயிக்கலாம். பொதுவாக, தஞ்சா வூர் ஓவியங்களின் ஆரம்ப விலை 3 ஆயிரம் ரூபாய். சுவாமி படங்கள் 6 ஆயிரம் ரூபாய் தொடங்கி, 60 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும்.

கலைக்கூடங்கள் மற்றும் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் மாநில அரசின் 'பூம்புகார்’ மையம் மற்றும் கண்காட்சிகள் மூலமாகவும் உங்கள் ஓவியங்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்யலாம். கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய, தாங்கள் தயாரிக்கும் கைவினைப் பொருளை போட்டோ எடுத்து அதை கடிதம் மூலம் இணைத்து கைவினைப் பொருட்களை விற்பனை மற்றும் தொழில் உருவாக்கும் மையத்துக்கு (தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்) அனுப்பி வைக்கலாம். அதன் முகவரி - 759, அண்ணாசாலை, சென்னை 600 002. தொலைபேசி எண்கள்: 044 - 2852 1271, 2852 1325. அவர்கள் உங்கள் கைவினை உற்பத்தி பொருளின் போட்டோவைப் பெற்று உறுதி செய்த பின் உங்களுக்கு ஓர் அடையாள அட்டை வழங்குவார்கள்.

சிறப்பான வாழ்க்கைக்கு கைகொடுக்குமா செல்போன் ரீ-சார்ஜ்?!

இந்த அடையாள அட்டையை பெறும் நபர் சில சலுகைகளைப் பெறலாம். அரசாங்கத்தின் கைவினைப் பொருட்கள் அமைச்சகம் பல மாநிலங்களில் பொருட்காட்சி நடத்துவார்கள். அந்தப் பொருட்காட்சியில் இந்த அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக இடம் வழங்குவார்கள். மேலும் 500 கிலோ மீட்டருக்கு அதிக தொலைவு செல்லும்போது பயணச் செலவிலும் சலுகையும் கிடைக்கும். வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு மற்றும் நல்ல விலை கிடைக்கும். இதற்கெனவே இருக்கும் கலைக்கூடங்கள் மூலம் ஏற்றுமதி செய்யலாம். உங்களுக்கென ஓர் இணைய பக்கத்தை உருவாக்கி, ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

தஞ்சாவூர் ஓவிய திறமையாளர்களுக்கு ஓரு நற்செய்தி. 65 வயதைக் கடந்த சிறந்த கைவினை கலைஞர்களுக்கு, அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் தங்கப் பதக்கமும் அளிக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார் தமிழக முதலமைச்சர். இத்திட்டத்தில் பயன்பெற, துறை சார்ந்த அரசு அலுவலகங்களை நாடவும்.''

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...
'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’, கேள்வி - பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002