Published:Updated:

இதோ எந்தன் தெய்வம்! - 6

அற்புத அன்னை கிருஷ்ணவேணி! கரு.முத்துஆன்மிகம்

##~##

 வர்... அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவிகளை வகித்த தன் கணவரோடு இந்தியா முழுவதும் சென்று மகிழ்வான இல்லறம் நடத்திய ஒரு குடும்பத் தலைவி. கணவரின் திடீர் மரணம், அவரை நிலைகுலைய வைக்க... உலக சுக வாழ்வை வெறுத்தார்... ஊர் ஊராக அலைந்தார். இறுதியில் அவர் வந்து சேர்ந்த இடம் பொதிகை மலை. கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஆள் அரவமில்லாத அத்துவான காட்டில் தன்னந்தனியாக வசித்த அந்தப் பெண்மணி... இன்றைக்கு ஊரும் உலகமும் போற்றும் சாது கிருஷ்ணவேணி தெய்வம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் 'கிருஷ்ணவேணி' என்கிற பெயரில் கடைகள் இருக்கும், வாகனங்கள் ஓடும். அப்படி மக்களோடு கலந்துவிட்ட காவல்தெய்வம்தான் கிருஷ்ணவேணி. பாபநாசம் அகத்தியர் அருவியின் மேல்புறமாக மலைமீது ஏறிச்சென்றால்... அங்கே இருக்கிறது கிருஷ்ணவேணி வசித்த இடம். அதுதான், இப்போது அவருடைய கோயில்.  இந்த இடத்துக்குப் பெயர்... கல்யாண தீர்த்தம். அங்கே இருக்கும் கோடி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வெளியே அழகாக, கம்பீரமாக மனைவி லோகமித்ராவுடன் நிற்கிறார்... குறுமுனி அகத்தியர்.

சிவன் - பார்வதி திருமணத்தைக் காண அகிலமே கைலாயத்தில் திரண்டுவிட்டதால், அந்தப் பகுதி சுமை தாங்காமல் தாழ்ந்துவிட்டது. திருமணத்தைக் காண வந்திருந்த தன் பக்தன் அகத்தியனை, புவி, சமநிலை பெறுவதற்காக தென்திசை நோக்கி அனுப்பி வைத்தார் சிவன். அதை நிறைவேற்றுவதற்காக அகத்தியர் வந்து நின்ற இடம்தான் பொதிகை மலை. புவியானது சமநிலை பெற்ற பிறகு, திருமணக் கோலத்துடனே பொதிகை மலையில் அகத்தியருக்குக் காட்சி கொடுத்தார் சிவபெருமான். அதை நினைவுகூரும் விதமாகத்தான் இங்குள்ள தீர்த்தம் 'கல்யாண தீர்த்தம்'!

இப்படி புராணத் தொடர்புள்ள இந்த இடத்தை, 1930-களில் வந்தடைந்தார் கிருஷ்ணவேணி. கடலூர் முதுநகர் லட்சுமியம்மாள் - அரங்கசாமியின் ஏழாவது மகளாக பிறந்த கிருஷ்ணவேணியை, நல்ல வேலையில் இருந்த சொந்தக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்தனர். பாட்னா, அகமதாபாத், மும்பை என்று பணி நிமித்தமாக கணவர் சென்ற இடமெல்லாம் சென்று மகிழ்ச்சியாக குடும்ப வாழ்வை நடத்தினார். கூடவே, ஆதிசங்கரர் தவம் செய்த இடம், ரிஷிகேஷ், ஹரித்துவார் என்று எல்லா புனித இடங்களுக்கும் சென்று இறைதேடலிலும் ஈடுபட்டார். திடீரென கணவர் இறந்துவிட, வாழ்வின் நிலையாமையை உணர்ந்த கிருஷ்ணவேணி, குடும்ப வாழ்வைத் துறந்து தனியாகக் கிளம்பி, ஒரு கட்டத்தில் வந்து நின்றது... பொதிகை மலை!

இதோ எந்தன் தெய்வம்! - 6

''அம்மா இங்கு வந்த காலத்தில் மனித நடமாட்டமே கிடையாது. பகல் நேரத்தில் கீழே அருவிக்கு யாராவது வந்தால்தான் உண்டு. மற்ற இடங்களில் கரடி, குரங்கு, யானை, சிறுத்தை என்று மிருகங்களும், பாம்பு, பூரான், தேள் என்று விஷ ஜந்துக்களும்தான் நடமாடும். பாதையில்லாத நிலையிலும் மலைமீது ஏறி இந்த குகையில் வந்து தங்கிவிட்டார் அம்மா. மலையில் கிடைத்த பழங்களைத் தின்று, குரங்குகளோடு பழகி ஒருவழியாக தன் இடத்தை தேர்ந்தெடுத்து அமைத்துக் கொண் டார்.

வெகுகாலம் இப்படி போயிருக்கிறது. மலை மீது இப்படி ஒரு பெண்மணி இருக்கிறார் என்பது போகப்போக வெளியே தெரியவர, பலரும் அவரைப் பார்த்துச் செல்வதை சாகசமாக செய்யத் தொடங்கினர். அவர்கள் கொண்டுபோய் கொடுத்த பழங்கள், உணவுப் பொருட்களை அவர்களுக்கே அன்னை திருப்பி கொடுக்க, அதனைப் பெற்றவர்களுக்கு வாழ்வில் மிக அற்புதமான திருப்பங்கள் ஏற்பட்டன. அதனால் பலரும் மலைமீது படையெடுக்க ஆரம்பித்தனர். எல்லோருக்கும் அருள்செய்து ஆசி வழங்கினார் அம்மா. அதனால் பக்தர்கள் பெருக, வந்தவர்கள் மூலமாக மலைப்பாதைக்கு படிகள் ஏற்படுத்திக் கொடுத்தார். அதன் பிறகு கோடிலிங்கம் இருந்த இடத்தில் கோயில் கட்டினார்'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் 'சாது கிருஷ்ணவேணி அம்மாள் ஆசிரம' தலைமைப் பூசாரி ஆறுமுகம்.

ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணவேணியின் பக்தர்கள். எப்போதெல்லாம் அம்மா இருக்கும் இடத்துக்கு உதவிகள் தேவைப்படுகிறதோ... அப்போதெல்லாம் முன்வந்து இவர்கள் எல்லாம் உதவிகள் செய்திருக்கிறார்கள்.... செய்கிறார்கள்!

வெள்ளம் வந்து அருவி பொங்கி பிரவாகம் எடுக்கும்போதெல்லாம் பலநாட்களுக்கு மலை அருகேகூட யாரும் போக முடியாது. 'கிருஷ்ணவேணி என்ன ஆனாரோ?' என்று எல்லோரும் பரிதவித்திருப்பார்கள். வெள்ளம் குறைந்த பிறகு போய் பார்த்தால்... சிரித்தபடி காட்சி தருவார். விலங்குகளும், விஷ ஜந்துக்களும் அவருக்கு துணை நின்றதாகச் சொல்கிறார்கள் அவருடைய பக்தர்கள். அவரைப் பார்க்க சென்றபோது பலநேரங்களில் குகைக்கு வெளியே கரடியும், அவரது தலைமாட்டில் பாம்பும் காவல் இருப்பதை கண்டிருக்கிறார்களாம். மழை இல்லாத காலங்களில் பக்தர்கள் வேண்டிக்கொண்டால் வருணஜெபம் செய்து மழையை வரவழைத்து விடுவாராம்.

இதோ எந்தன் தெய்வம்! - 6

இப்படி உலக நன்மைக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, மாயம்மா, பூண்டிசித்தர், தலையாட்டிசாமிகள், சுருளிசாமிகள் என்று சக மகான்களாலும் மதித்து வணங்கப்பட்ட கிருஷ்ணவேணி, தன்னுடைய 120 வயதில், கடந்த 2011-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி தினத்தில் இறையோடு ஐக்கியமானார். அன்று அந்த மலையே கொள்ளாத அளவுக்கு கூடிய பக்தர்கள் மத்தியில், தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பில் தகனம் செய்யப்பட்டது அவரது பொன்னுடல். அந்த அஸ்தி சேகரிக்கப்பட்டு கலசத்தில் பாதுகாக்கப்பட்டு அவர் வசித்த குகையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் பூஜித்த லிங்கம், அதன் மீது  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிரே அதை வணங்கும் விதமாக உள்ள அன்னை கிருஷ்ணவேணியின் உருவம் மற்றும் அவர் உபயோகித்த பொருட்கள் அனைத்தையும் அப்படியே வைத்துள்ளனர்.

''மூன்று வேளைகள் முறைப்படி பூஜைகள் செய்யப்படுகிறது. பக்தர்கள் உதவியோடு அன்னதானம் செய்யப்படுகிறது. வருகிறவர்கள் பூஜை பொருட்கள், ரொட்டி, பழங்கள் வாங்கி வருகிறார்கள். பழங்களும் ரொட்டிகளும் குரங்குகளுக்கும் வழங்கப்படுகின்றன. இந்த இடத்துக்கு வந்தாலே உடலில் உடனடியான மாற்றங்களை உணர முடியும். அன்னையை வழிபட்டுத் திரும்பினால் வாழ்வில் அற்புதமான ஏற்றங்கள் ஏற்படும்!'' என்று பரவசத்தோடு சொல்கிறார் எப்போதும் அங்கே தங்கி அன்னையின் பணிவிடைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் செல்லப்பன்.

அது உண்மைதான் என்பதை, பொதிகை மலை மீதிருக்கும் இந்த குகையைத் தேடி, நாள்தோறும் இந்தியா முழுக்கவிருந்து வரும் பக்தர்கள் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்!

- தெய்வங்கள் பேசும்...

படங்கள்: எல்.ராஜேந்திரன்

வழிகாட்டி

திருநெல்வேலியில் இருந்து பாபநாசத்துக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து கிளம்புகிறது. சென்னையில் இருந்தும் நேரடி பேருந்துகள் உள்ளன. பாபநாசத்தில் இறங்கி அகத்தியர் அருவிக்கு ஷேர் ஆட்டோக்கள் செல்கின்றன. அங்கிருந்து படிகளில் ஏறி மலைக்குச் சென்றால்... கிருஷ்ணவேணி ஆசிரமம், கோடிலிங்கேஸ்வரர் ஆலயம், கல்யாண தீர்த்தம் ஆகியவற்றை தரிசிக்கலாம். காட்டுப்பகுதி என்பதால், காலை ஆறு மணி முதல், மாலை ஆறு மணி வரை மட்டுமே இங்கே நடமாட அனுமதிக்கிறது வனத்துறை. கையோடு குடிநீர் எடுத்துச் செல்வது நல்லது. கோயிலில் தொலைபேசி இல்லை.

அகத்தியர் அருவியில் குளியல், அகஸ்தியர் தரிசனம், கல்யாண தீர்த்த புனிதநீர், கோடிலிங்கேஸ்வரர் காட்சி, அன்னையின் ஞான அருள் என்று பல்வேறு புனிதப் பலன்களை வழங்கும் இந்த ஆன்மிக பயணம்.