Published:Updated:

கோவையில் கொண்டாட்டம்!

ஜாலி டே!

கோவையில் கொண்டாட்டம்!

ஜாலி டே!

Published:Updated:
##~##

 பெண்களுக்கான கொண்டாட்ட தினங்களின் முன்னோடி... 'அவள் விகடன் ஜாலி டே’! இதோ, புத்தம் புதுப்பொலிவுடன் மீண்டும் தொடங்கிவிட்டது அந்த இனிய நாள்! ஆம், 'அவள் விகடன் மற்றும் வசந்த் - கோ' இணைந்து வழங்கிய ஜாலி டே, ஜூன் 15 சனி மற்றும் 16 ஞாயிறு ஆகிய இருநாட்களும் கோவை மாநகரின் அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் களைகட்டியது!

வருடம் முழுக்க உழைக்கும் நம் வீட்டுப் பெண்களை, சந்தோஷப்படுத்திப் பார்க்கும் நிகழ்வுதான் ஜாலி டே. இதற்கான அறிவிப்பு வெளியானதுமே வாசகிகள் வெளிப்படுத்திய அதே உற்சாகத்துடன், முதல் நாளான சனிக்கிழமை காலை 8 மணி முதலே குவியத் தொடங்கிவிட்டனர் வாசகிகள்.

பாட்டுக்குப் பாட்டு, பாட்டி - பேத்தி ஃபேஷன் ஷோ, மௌன மொழி, மாமியார் - மருமகள், உல்டா புல்டா டான்ஸ், வாசகியர் வழக்காடு மன்றம், பாரதியார் பாடல், வினாடி வினா, சிரிசிரி சீரியல், ஆதி அந்தம் (வித்தியாசமான கதை போட்டி), ரங்கோலி, மெஹந்தி, சூப்பர் ஹேர் ஸ்டைல், வீணாக்காதே (தூக்கி எறியப்படும் பொருட்களில் கலைப்பொருள் செய்வது) என்று 14 விதமான போட்டிகளுக்கான தேர்வுகள் முதல் நாளில் நடைபெற்றன.

நமது தொகுப்பாளர் சுபாஷிணி ஒவ்வொரு அறையாகச் சென்று போட்டிகளை கலகலப்பாக்க, கோலங்களால் மிளிரும் தரைகள், சுவர்களில் மோதிய சிரிப்புச் சத்தங்கள், மெகந்தியால் சிவந்த கரங்கள், வியக்கவும் ரசிக்கவும் வைத்த கலைப்பொருட்கள் என நெகிழ வைத்தன ஜாலி டே போட்டித் தேர்வுகள். 'பாட்டி - பேத்தி ஃபேஷன் ஷோ’வில் மாடர்ன் டிரெஸ்ஸில் வந்து கலக்கிய ஜெயா பாட்டி... செம ஹைலைட்!

கோவையில் கொண்டாட்டம்!

போட்டிகளுக்கான நேரம் மதியம் இரண்டு மணி வரை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில போட்டிகளில் ஏகப்பட்ட வாசகிகள் முண்டியடிக்க... அவற்றுக்கான நேரம் நீட்டிக்கப்பட்டது. போட்டிகள் எல்லாம் முடிந்தபிறகு, 'நமக்குத்தான் ஃபர்ஸ்ட் பிரைஸ்', 'நாளைக்கு மேடையில ஃபைனல்ஸ்.... ஒரு கை பாத்துட வேண்டியதுதான்' என்றபடி கனவுகளுடனும் சவால்களுடனும் வீடு திரும்பினர் தோழிகள்.

இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை... கோவைக்கே உரிய சாரல் காலையிலிருந்தே சிலுசிலுவென ஜிலீரூட்ட... பி.எஸ்.ஜி. கல்லூரியின் கலையரங்கத்துக்கு காலை 7.30 மணியிலிருந்தே வரத்தொடங்கி விட்டனர் தோழிகள். எங்கு பார்த்தாலும் சிரித்த முகங்களும் சிவந்த கன்னங்களுமாக கல்யாண வீட்டு கலகலப்புதான்! குத்து விளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் மங்களகரமான மஞ்சள் நிற பட்டுச் சேலையில் நிகழ்ச்சியைத் தொடங்கினார்... தொகுப்பாளர் சுபாஷினி.

கோவையில் கொண்டாட்டம்!

எடுத்ததுமே வாசகிகளை அசரடித்தது... சின்னஞ்சிறு பூக்களின் அசத்தல் நடனம். 'இதுவரை உங்கள் முன்னே ஆடிய இந்தப் பூக்கள், திருப்பூரிலிருந்து வந்திருக்கும் காதுகேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள்...' என்று தொகுப்பாளர் அறிவித்தபோது... வாசகிகள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினர். அடுத்ததாகவும் வாசகிகளை உற்சாகப்படுத்தியது... நடன நிகழ்ச்சிதான். இதில் பங்கேற்று அசத்தியவர்கள்... கோவையைச் சேர்ந்த லலித் கலாஷேத்ரா நடனக்குழுவினர்.

ஏற்கெனவே திட்டமிடப்பட்ட போட்டிகளின் நடுவே... தலையில் அதிகமாக பூ வைத்திருப்பவர், நீளமான கூந்தல் உடையவர், உயரமான ஹை ஹீல்ஸ் அணிந்தவர் என திடீர் போட்டிகளும் இடம்பிடிக்க... சிரிப்பும் சந்தோஷமுமாக கலந்துகொண்டனர் வாசகிகள். இடையிடையே, 'யார் வேணும்னாலும் வந்து டான்ஸ் கட்டுங்க' என்று அழைக்கப்பட... இளசு முதல் பெரிசு வரை வயசு வித்தியாசம் இன்றி மேடையேறி ஆடியது... வாவ்!

கோவையில் கொண்டாட்டம்!

'சீனியர் பாட்டு போட்டி' என்று அறிவித்ததுமே வரிசையாக மேடையேறினார்கள் சீனியர்கள் பலரும். ஆனால், அங்கே, 'ஓமகசியா...', 'டிய்... டியோ டியோ டோலு', 'அட்றா அட்றா நாக்க முக்க' போன்ற பாடல்களை ஒலிபரப்பி, அப்படியே  திருப்பிப் பாடச் சொன்னதும்... பலரும் ரிவர்ஸ் கியர். ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து, கன்னத்தைக் கிள்ளி என்று தொகுப்பாளர் சமாதானப்படுத்த... கொஞ்சம் கொஞ்சமாக தெம்பு கூடிய சீனியர் வாசகிகள், எக்குத்தப்பாகப் பாடி வைக்க... அரங்கமே சிரித்தது ஜாலியாக. 'உல்டா புல்டா’ நடனப்போட்டியில் மாறி மாறி ஒலிபரப்பப்பட்ட பழைய மற்றும் புதிய பாடல்களுக்கு ஏற்ற மாதிரி தோழிகள் டான்ஸ் ஆடியது, 'அட!’ போட வைத்தது.

பொருளின் விலையைச் சரியாக மதிப்பிட்டுச் சொல்லி, அந்தப் பொருளையே பரிசாக பெறும் 'என்ன விலை?’ போட்டி, 'ப்ரீத்தி’ நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. வாசகிகளும் சாதுர்யமாக விலையைக் கணித்து, அயர்ன் பாக்ஸ், மிக்ஸி, இண்டக்ஷன் ஸ்டவ் என அள்ளிச் சென்றனர். அவள் விகடன் இதழ் பற்றிய கேள்விகளுக்கு சரியான பதில்களைச் சொல்லி பரிசுகளை வென்றனர் ஏழு வாசகிகள்.

கோவையில் கொண்டாட்டம்!

நிறைவாக பம்பர் பரிசு நேரம்... '9 இன்ச் டேப்லெட், மீடியா பிளேயர் மற்றும் மானிட்டர் என 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள்' என்று ஆனந்த அதிர்ச்சியாக அறிவிக்கப்பட, வாசகிகளிடையே ஏக பரபரப்பு! இதற்கான அதிர்ஷ்டசாலி, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணம்... திகுதிகு! விழாவின் நிறைவுத் துளிகளில் அந்தப் பரிசுக்குரிய பெயரை சுபாஷினி அறிவிக்க... கோவை, சாமிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த விளங்கேஸ்வரி துள்ளலும் சந்தோஷமுமாக வந்து பெற்றுக்கொண்டு, ''ஜாலி டே நிகழ்ச்சியில கலந்துக்கறதுக்காக எங்க ஊர்ல இருந்து 30 பேர் வந்திருக்கோம். எதிர்பார்க்கவே இல்ல இந்த பம்பர் பரிசை. இந்த டேப்லெட்டை, என் மகளுக்கு கொடுத்து சந்தோஷப்படுத்தப் போறேன்!'' என்றார் அன்புள்ள அம்மாவாக.

விழாவின் நிறைவாக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும், நடுவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. ஜாலி டே நிகழ்வில் பங்கேற்ற வாசகிகளில் சிலரை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க நாம் அழைக்க, அவர்களின் ஆசீர்வாதத்தையும் சேர்த்துப் பெற்றுக் கொண்டனர் வெற்றியாளர்கள்.

கோவையில் கொண்டாட்டம்!

முதல் நாள் காபி, ஸ்நாக்ஸ். இரண்டாம் நாள், இரண்டு வேளையும் காபி மற்றும் ஸ்நாக்ஸ், மதியம் சுவையான சாப்பாடு என்று வாசகிகளுக்கு வழங்கப்பட்டது. ஸ்நாக்ஸில், பிரிட்டானியா நிறுவனம் சார்பில் மேரிகோல்ட் பிஸ்கட்களையும் இணைத்திருந்தனர். இரண்டு நாட்களாக இப்படி வாசகிகளை சந்தோஷப்படுத்திப் பார்த்த 'ஜாலி டே’ குழுவினருக்கு நெஞ்சம் நிறைய நன்றிகள் சொல்லி, அடுத்த 'ஜாலி டே’ பற்றிய விசாரிப்புகளுடன் விடைபெற்றனர் ஆயிரத்துக்கும் மேல் குழுமியிருந்த அந்தத் தோழிகள்!

பின்குறிப்பு: நிகழ்ச்சி நேரடியாக (லைவ்) 'விகடன் டாட் காம்' மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் படங்களை பார்த்து ரசிக்க, இந்த முகவரிகளை க்ளிக் செய்யவும்!

- இரா.வசந்த், நவீன் முருகேசன்,
படங்கள். தி.விஜய், வி.ராஜேஷ்