Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

ரீடர்ஸ், ஓவியங்கள்: ஹரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  150

'எல்.கே.ஜி வேண்டாம்... எம்.பி.பி.எஸ் வேணும்!’

டாக்டர் வீட்டுக்குச் சென்று திரும்பிய என் மாமியார், அங்கு அவரின் நேரம் முழுவதையும் விழுங்கி பொறுமையை அதிகம் சோதித்த டோக்கன் முறையைச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். உடனே என் ஐந்து வயது மகள் ஆலையா, ''பேசாம நான் டாக்டராயிடட்டுமா பாட்டி? நானே உங்களுக்கு ஊசி போடுவேன்'' என்று சொல்ல, ''ஆமாடி செல்லம். அஞ்சு வருஷம் எம்.பி.பி.எஸ் படிச்சா டாக்டர் ஆயிடலாம்!'' என்றார் மாமியாரும் அவளுடன் சுருதி சேர்ந்து. உடனே

குட்டீஸ் குறும்பு!

என்னிடம் ஓடி வந்த சுட்டி, ''அம்மா நாளையில இருந்து நான் எல்.கே.ஜி ஸ்கூலுக்குப் போகல. ஆட்டோ அங்கிள்கிட்ட சொல்லி எம்.பி.பி.எஸ் ஸ்கூல்ல விடச் சொல்லு. அஞ்சு வருஷத்துல டாக்டர் ஆகி, பாட்டிக்கு ஊசி போடணும்!'' என்று சொல்ல, எல்லோரும் வெடித்துச் சிரித்துவிட்டோம். பிறகு, அவளின் பாட்டி பாசத்தைப் பாராட்டி, பள்ளிப் படிப்பு இறுதிவரைப் படித்து, நல்ல தேர்ச்சி பெற்றால்தான் டாக்டர் படிப்பில் சேர முடியும் என்பதையும் விளக்கினோம்!

- ஆர்.சுஜாதா, கோயம்பேடு

குட்டீஸ் குறும்பு!

'ஹாய் பீம்... மஞ்ச லைட் எங்கே?!’

என் நான்கு வயது மகள் அபிபிரதாவுக்கு 'போகோ' சேனலில் ஒளிபரப்பாகும் 'சோட்டா பீம்’ தொடர் என்றால் அவ்வளவு இஷ்டம். அதில் ஹீரோ பீம், எப்போதும் லட்டு சாப்பிடுவதால், தனக்கும் லட்டு வேண்டும் என்று தன் அப்பாவிடம் கேட்டு வாங்கினாள். லட்டை எடுத்துக்கொண்டு கண்ணாடி முன் நின்று லட்டை ஒரு கடி கடித்தவளிடம், திடீரென குஷி வடிந்தது. ''என்னாச்சும்மா..?'' என்று நாங்கள் கேட்க, ''பீம் லட்டு சாப்பிட்டவொடன பின்னாடி ஒரு யெல்லோ கலர் லைட் எரியும். ஆனா, நான் சாப்பிட்டதும் ஏன் எரியல?'' என்று முகம் வாடிச் சொல்ல, நாங்கள் வாய்கொள்ளாமல் சிரித்தோம்!

- ஏ.பிருந்தா, திருக்கடையூர்

குட்டீஸ் குறும்பு!

'சுக்ராச்சாரியார் வர்றார்!’

என் கணவருக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தபோது, என்னுடன் என் மகன், மருமகள் மற்றும் பேரனும் ஆஸ்பத்திரியில் இருந்தார்கள். ஆபரேஷன் தியேட்டரிலிருந்து கணவரை வெளியே அழைத்து வந்தபோது, வலது கண்ணில் திரை கட்டப்பட்டு இருந்தது. அதைப் பார்த்த என் பேரன், ''சுக்ராச்சாரியார் வர்றார்... சுக்ராச்சாரியார் வர்றார்!'' என்று குரல் கொடுத்தான். அருகில் இருந்த ஒருவர், ''அப்படிச் சொல்லாதே குழந்தை... தாத்தாவைக் கிண்டல் பண்ணினா பாவமில்லையா?'' என்றார். உடனே என் பேரன், ''அசுர குரு சுக்ராச்சாரியாருக்கும் ஒரு கண், இப்போ எங்க தாத்தாவுக்கும் ஒரு கண். அதனாலதான் அப்படிச் சொன்னேன்!'' என்று சொல்ல, சுட்டியின் அறிவை சிலிர்த்துக் கொஞ்சி சிரித்தார் அவர்!

- வெ.ஷியாமளா ரமணி, செகந்திராபாத்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு