Published:Updated:

கணவன் - மனைவி உறவு... கல்யாணம்தான் அத்தாட்சியா?

சவுக்கடி தீர்ப்பும்... சலசல சர்ச்சைகளும்நியூஸ்

கணவன் - மனைவி உறவு... கல்யாணம்தான் அத்தாட்சியா?

சவுக்கடி தீர்ப்பும்... சலசல சர்ச்சைகளும்நியூஸ்

Published:Updated:
##~##

நீதிமன்ற தீர்ப்புகள் அவ்வப்போது நாட்டில் காரசார விவாதமாக உருவெடுப்பதுண்டு! அப்படி ஒரு தீர்ப்பாகிப் போனது, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் அளித்த தீர்ப்பு! 'ஆண் - பெண் இருவருக்கும் இடையில் பாலியல் தொடர்பு நடைபெற்று இருந்தாலே, அவர்கள் கணவன் - மனைவி என்றுதான் கருதப்படுவார்கள், திருமணம் ஆகவில்லை என்றாலும்கூட!’

- இதுதான் அந்தத் தீர்ப்பின் சாரம்.

கோவையைச் சேர்ந்த ஃபாத்திமா - முகமது இருவருக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இரு குழந்தைகள் பிறந்த நிலையில், கருத்துவேறுபாட்டால் கணவர் பிரிந்து சென்றார். இதனால், ஜீவனாம்சம் கேட்டு குடும்பநல நீதிமன்ற படியேறினார் ஃபாத்திமா.

'குழந்தைகள், இருவருக்கும் பிறந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், ஃபாத்திமா திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லாததால்... அவருக்குப் பராமரிப்புத் தொகை வழங்க முடியாது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஃபாத்திமா. அதையடுத்துதான்... இந்த பரபர தீர்ப்பு!

''திருமணம் நடத்துவது சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக. ஆனால், சட்டத்துக்கு அந்தக் கட்டாயமில்லை. 18 வயது பூர்த்தியான ஒரு பெண்ணும், 21 நிரம்பிய ஆணும் (ஏற்கெனவே திருமணம் ஆகாமல் இருந்தால்) பாலியல் தொடர்பு கொண்டு, அந்தப் பெண் கர்ப்பம் தரித்தால், அவர்கள் இருவரும் கணவன் - மனைவியாகவே கருதப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் கருத்து. அந்தப் பெண் கர்ப்பம் தரிக்காமல் போனாலும் கூட, இருவருக்கும் பாலியல் தொடர்பு இருந்தாலே கணவன் - மனைவி உறவுக்கு உட்பட்டவர்கள்தான். கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தால், சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுதான் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முடியும்.

கணவன் - மனைவி உறவு... கல்யாணம்தான் அத்தாட்சியா?

ஃபாத்திமா விஷயத்தில் திருமணச் சடங்குகள் நடைபெறவில்லை என்றாலும், இருவருக்கும் இடையில் பாலியல் தொடர்பு இருந்திருக்கிறது. எனவே... இருவரும் கணவன் - மனைவிதான். பாத்திமாவுக்கு, அவருடைய கணவர் மாதம்தோறும் 500 ரூபாயை பராமரிப்புத் தொகையாக வழங்க வேண்டும்'' என்று தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி சி.எஸ்.கர்ணன்.

இந்தத் தீர்ப்பு, டீக்கடை தொடங்கி, சமூக வலைதளங்கள் வரை சூடான விவாதத்தைக் கிளப்பி வைத்திருக்கும் நிலையில், இதைப் பற்றி நம் பெண்கள் சிலரிடம் கேட்டோம். திருநெல்வேலியைச் சேர்ந்த சுபாஷினி, ''பாலியல் தொடர்பு கொண்டாலே சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் கணவன் - மனைவி என்று சொல்வது, 'லிவிங் டுகெதர்’ வாழ்க்கை முறையை ஆதரிப்பதுபோல உள்ளது. திருமணம் என்பது ஊரும், உறவும் சேர்ந்து நடத்தும் சடங்கு என்பதுதானே நம் கலாசாரம்?'' என்று கேட்டவர்,

''இந்த நேரத்தில், தாலி அவசியம், அவசியமில்லை என்கிற விவாதமும் எழுந்துள்ளது. அதைப் பற்றி இப்போது பேச்சே தேவையில்லை. அது, ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணத்தின்போது அடையாளமாக ஆணுக்கு போடும் மெட்டியை அவர்கள் கழட்டி வைப்பது சரி எனில், பெண்ணும் தன் தாலியை கழட்டி வைக்கலாம்தானே?'' என மற்றொரு கேள்வியையும் எழுப்பினார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த உமாராஜ், ''காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில், 'பாலியல் தொடர்பு நம்மை கணவன் - மனைவி ஆக்கிவிடும்' என்று, இளவயதினர் நினைக்க ஆரம்பித்தால் என்னவாகும்? இன்னொரு பக்கம், பாலியல் உறவு மட்டுமே திருமணத்துக்கான தகுதி என்பது போலவும் இது அர்த்தப்படுகிறதே..?!'' என்று கவலையை வெளிப்படுத்தினார்.

இப்படி தர்க்கங்களும், சர்ச்சைகளும் ஒருபுறமிருக்க, சட்டத்தின் பக்கம் நின்று இதற்கு விளக்கம் அளிக்கிறார், வழக்கறிஞர் அருள்மொழி. ''நீதிபதி தற்போது சொல்லியிருக்கும் இதே கருத்தை, கிட்டதட்ட 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் சொல்லி வருகிறது. சடங்குகள் இல்லாமல் ஒரு பெண்ணோடு வாழ்ந்துவிட்டு, திருமணமே நடக்கவில்லை என்று அவளை ஏமாற்றும் வேலையை கண்டிப்பதுதான் இத்தகைய தீர்ப்புகளின் நோக்கம். மற்றபடி, திருமண சடங்குகள் தேவையா, இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள், சம்பந்தப்பட்டவர்கள்தான்.

கணவன் - மனைவி உறவு... கல்யாணம்தான் அத்தாட்சியா?

இந்தத் தீர்ப்பு திருமண அமைப்பையே மாற்றிவிடுமோ என்கிற அச்சமும், இந்த தீர்ப்பு, குடும்ப அமைப்புக்கு எதிரானது என்கிற பிரசாரமும் திட்டமிட்டு சிலரால் பரப்பப்படுகிறது. தீர்ப்பின் நோக்கம் அதுவல்ல என்பதையும் நீதியரசர் தெளிவுப்படுத்தி இருக்கிறார். இயற்கை தேவை என்பது, இளம்வயதிலிருக்கும் இருபாலரும் ஒருவரை ஒருவர் நெருங்குவதற்கு உந்தித் தள்ளுகிறது. திருமண சடங்குகள் நடக்கவில்லை என்ற காரணத்தை சொல்லி யாரோ ஒரு பெண் பாதிக்கப்படுவது சரியல்ல என்பதுதான் தீர்ப்பின் பின்னால் இருக்கும் உண்மை. என் கருத்தும் அதுவே'' என்ற அருள்மொழி,

''பொதுவாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்த மாதிரி தீர்ப்புகள் வரும்போது, சம்பந்தப்பட்டவர் அந்தத் தீர்ப்பால் பயனடைவார் என்கிற திருப்தியைவிட, இந்தத் தீர்ப்பை பலர் தவறாக பயன்படுத்திக் கொண்டால் என்னாவது என்கிற சிந்தனைக் கோளாறுதான் பெரும்பான்மை மக்களின் ரியாக்ஷனாக இருக்கும். அதுதான் இப்போதும் நடக்கிறது'' என்று சூடாகச் சொன்னார்.

பேராசிரியர் மற்றும் சமூக சிந்தனையாளர் பர்வீன் சுல்தானா, ''முன்பு ஒரு நடிகை, 'திருமணத் துக்கு முன் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அதில் தவறில்லை' என்று கருத்து சொல்லிஇருந்தபோது தமிழ்நாடே கொதித்தது. ஆனால், களவும், கற்பும் சங்ககாலம் தொட்டு நம் சமூகத்தில் இருந்து வருவதுதான். இங்கே 'களவு' என்பது, சமூகம் அறியாமல் காதல் உறவுகொள்வது. 'கற்பு' என்பது, தங்களின் காதலை சமூகத்துக்கு அறிவித்து, திருமண பந்தத்தில் இணைவது.

இதைப்போல்தான், ஓர் ஆணும் பெண்ணும் மனம் ஒருமித்து உடல் அளவில் சேர்ந்துவிட்ட பின், அதுதான் திருமணம் என்கிறார் நீதிபதி. தமிழ் மரபின்படி அது பிழையில்லை. ஆனால், அதை அப்படியே விட்டுவிட்டால், அது களவு என்கிற நிலையிலேயே இருக்கும். அது நான்கு பேருக்கு அறிவிக்கப்பட்டு, 'கற்பு' என்கிற நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும். அதுதான் விதி. நானும் அதையே ஆதரிக்கிறேன்'' என்ற பர்வீன் சுல்தானா...

''இந்தத் தீர்ப்பை படித்துவிட்டு, பிள்ளைகள் வழி தவறிவிடுவார்களோ என்று நிறைய பெற்றோர் பதைபதைக்கின்றனர். ஆனால், உண்மையான காதலர்களை, பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ளும் காதலர்களை இந்தத் தீர்ப்பு திசை திருப்பாது. திருமணம் என்கிற ஆசை வார்த்தை காட்டி, பெண்களை ஏமாற்ற நினைக்கும் அயோக்கிய ஆண்களுக்கான சவுக்கடியே இந்தத் தீர்ப்பு!'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

சரிதானே!

- ம.பிரியதர்ஷினி

தீர்ப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள்!

தன்னுடைய தீர்ப்பை அடுத்து எழுந்த சர்ச்சைகளைக் கண்ட நீதிபதி கர்ணன், மறுநாள் நீளமான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தார். அதில், ''திருமணம் ஆகாத 21 வயதை கடந்த ஆண் மற்றும் 18 வயதை கடந்த பெண் ஆகியோர், திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொண்ட பிறகு, அந்தப் பெண்ணை ஆண் விட்டுவிட்டுச் சென்றுவிட்டான் என்றால், அவள், மனைவி என்கிற அந்தஸ்தை பெறுவதற்காகவும், நிவாரணம் பெறுவதற்காகவும் தகுந்த ஆதாரங்களுடன் சிவில் கோர்ட்டை அணுகலாம்.

பாதிக்கப்பட்ட அந்த இஸ்லாமிய பெண்ணுக்கு நிவாரணம் அளிப்பதற்கு மட்டுமல்ல, இந்திய கலாசார ஒருமைப்பாட்டை பராமரிக்க வேண்டுமென்ற நோக்கத்திலும்தான் தீர்ப்பளிக்கப்பட்டது. எந்தவொரு மதத்துக்கு எதிராகவும், எந்தவொரு இந்தியனின் மனதை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் தீர்ப்பளிக்கப்படவில்லை. தீர்ப்புகளை முற்றிலும் புரிந்துகொள்ளாமல் முரணான கருத்துகளை யாரும் கூறக்கூடாது'’ என்று கூறியிருக்கிறார் நீதிபதி.