Published:Updated:

உன் வீட்டுத் தோட்டத்தில்... காய் எல்லாம் போட்டுப் பார்!

ஹார்டிகல்ச்சர்

உன் வீட்டுத் தோட்டத்தில்... காய் எல்லாம் போட்டுப் பார்!

ஹார்டிகல்ச்சர்

Published:Updated:
##~##

 'காய்கறி விலை வி....ர்...!’, 'தக்காளி விலை தங்கத்தை எட்டுது’ என்பதுதான் கடந்த சில வாரங்களாக தலைப்புச் செய்தி. அந்த அளவுக்கு காய்கறி விலைகள் வரலாறு காணாத வகையில் வீறிட்டு எழுந்தன. இந்த விலை ஏற்றம் தாய்மார்களை விழிபிதுங்க வைத்தது. இத்தகைய சூழலில்... போத்தீஸ் நிறுவனத்துடன் இணைந்து... 'அவள் விகடன்' 'பசுமை விகடன்' இதழ்களின் சார்பில் 'வீட்டுத் தோட்டம் போடலாம் வாங்க!’ என்ற தலைப்பில், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஜூன் 23 அன்று நடத்தப்பட்ட ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு... காலத்தின் கட்டாயம்!

காலையிலேயே ஆர்வத்துடன் குழும ஆரம்பித்த பெண்கள்... அரங்கத்தின் முகப்பில் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் வைக்கப்பட்டிருந்த செடிகள், காய்கறி விதைகள், இயற்கை உணவுகள், விவசாயம் சார்ந்த பொருட்களை பார்வையிட்டு, அரங்கினுள் நுழைந்தனர்.

சுமார் ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த அரங்கு நிரம்பி வழிய... தொடக்க உரையாற்றினார் இயற்கை வேளாண் நிபுணரும், சென்னை புதுக்கல்லூரி முன்னாள் துணை முதல்வருமான முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில். வீட்டுத் தோட்டத்தில் மண், உரம், நீர் என்னும் தலைப்பில் பேசிய அவர், ''மண்ணுக்கு வாசனை கிடையாது. தண்ணீருக்கும் வாசனை கிடையாது. ஆனால், மண் தண்ணீரோடு சேரும்போது நுண்ணுயிர்கள் வெளிக்கிளம்ப, மண்வாசனை வருகிறது. மண்ணுக்கு உயிர்ச்சத்து, காற்று மிக அவசியம். அப்படியானால்தான் நுண்ணுயிர் வளரும். எனவே, இந்த மண் நலமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நிலங்களை செம்மைப்படுத்த மண்புழு உரத்தை பயன்படுத்துங்கள். மாட்டு சாணத்தில் மண் புழு வளரும். தேங்காய் மட்டையின் நார், கரும்புச்சக்கை போன்றவை அதிகப்படியான நீரை தேக்கி வைக்கக்கூடியது. எனவே, நீரை சேமிக்க, செடி வைக்கும்போது தேங்காய் நார், கரும்புச்சக்கை போன்றவற்றை பயன்படுத்தலாம்'' என்றெல்லாம் சொன்னவர், வீட்டுத்தோட்டத்துக்கான பல டிப்ஸ்களையும் வழங்கினார்!

உன் வீட்டுத் தோட்டத்தில்...   காய் எல்லாம் போட்டுப் பார்!

'விவசாயமும் வங்கிக்கடன் உதவியும்’ என்னும் தலைப்பில் பேசிய ஸ்டேட் பேங்க் துணை பொதுமேலாளர் ஆழ்வார் கண்ணன், ''விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது. அதேபோல் விவசாயத் தொழிலாளர்களும் மிகவும் குறைந்து வருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் இருப்பார்கள், டாக்டர்கள் இருப்பார்கள். ஆனால், 'உணவு இருக்குமா?’ என்பது கேள்விக்குறியாக நிற்கிறது'' என்று கவலையை வெளிப்படுத்தியதோடு...

''வீட்டுத் தோட்டம் அமைக்க எங்கள் வங்கியில் தனியாக கடன் தரப்படுவதில்லை. பணம் தேவைப்படுபவர்கள், வீட்டுக்கடன் வாங்கியிருந்தால், அதிலேயே மேற்கொண்டு வீட்டுப் பராமரிப்புக்காக கடன்பெற்று, வீட்டுத்தோட்டத்துக்கும் பயன்படுத்தலாம்'' என்று ஆலோசனை தந்தார்.

உன் வீட்டுத் தோட்டத்தில்...   காய் எல்லாம் போட்டுப் பார்!

'என் வீட்டுத் தோட்டத்தில்...’ எனும் தலைப்பில் பேசிய துப்பறியும் நிபுணர் மாலதி, ''குப்பையை எருவாக்கி பயன்படுத்தலாம். அரிசி, பருப்பு கழுவிய நீரை காலையில் ஊற்றி வைத்தால் மாலையில் புளித்திருக்கும். அதை செடிகளுக்கு ஊற்றலாம்'' என்பது போன்ற எளிய தோட்டப் பராமரிப்பு முறைகளை விளக்கியதோடு, தன் வீட்டு மொட்டை மாடியில், சுற்றுப்புறத்தில் வளர்த்துவரும் காய்கறிகள், பூச்செடிகள், வாழை - பப்பாளி பழ மரங்கள் பற்றியும், தேன் கூடு வைத்திருப்பது பற்றியும் படங்களாக காட்டி ஆர்வத்தை எழுப்பினார்.

முடிவில் பேசிய 'ஹோம் எக்ஸ்னோரா’ தலைவர் பம்மல் இந்திரகுமார்... ''உலகின் உயிர்மூச்சு இந்தியாவில்தான் இருக்கிறது. உலகத்தின் சொர்க்கம் இந்தியா என்றால் அதன் வாசல் தமிழ்நாடு. நம்ம ஊர் பள்ளிகளில் திருக்குறள் எழுதி வைத்திருப்பதைப்போல சீன பள்ளிகளில் ஒரு வாசகம் எழுதி வைத்திருக்கிறார்கள். அதாவது, 'நான் அடுத்த பிறவியில் இந்தியனாக பிறக்க வேண்டும்’ என்று. அந்த அளவுக்கு இந்தியா பற்றி அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்'' என்றார். ஏ.சி. இல்லாமலேயே மரங்கள், மொட்டை மாடியில் காய்கறிகள், செடிகள் மற்றும் பிரமிடு வடிவில் அதற்கென ஒரு அமைப்பை ஏற்படுத்தி குளுமையான சூழலை ஏற்படுத்தியிருக்கும் இவர், தன் வீட்டின் சுற்றுப்புறத்தில் தான் ஏற்படுத்தியிருக்கும் பசுமைச் சூழல் பற்றியும், எதிர்காலத்தில் சென்னை முழுவதும் இதுபோன்ற பசுமையான சூழலை ஏற்படுத்துவது குறித்தும் விரிவாக பேசினார்.

நிகழ்ச்சிக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆர்விட்டா ஆகிய நிறுவனங்கள் தங்களின் ஆதரவை வழங்கியிருந்தன. கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் எழில்சோலை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள், சென்னை கிரீன் கம்யூன் சார்பில் காய்கறி விதைகள், கெவின்கேர் நிறுவனம் சார்பில் அரை லிட்டர் பால் மற்றும் மில்க்ஷேக் வழங்கப்பட்டன!

பின்குறிப்பு: நிகழ்ச்சியின் புகைப்பட ஆல்பத்தை கண்டு ரசிக்க, இந்த முகவரியை க்ளிக் செய்யவும்!

- எம்.மரிய பெல்சின், க.பிரபாகரன்
படங்கள்: ஆ.முத்துக்குமார், பீரகா வெங்கடேஷ்

'கேசரி பவுடர், புற்றுநோய்க்கு வழிதிறக்கும்!’

சுல்தான் அகமது இஸ்மாயில் பேசும்போது, ''ரவாவில் உப்பு போட்டு உப்புமா செய்யும்போது கலர் பவுடரை பயன்படுத்துவதில்லை. ஆனால், சர்க்கரை போட்டு கேசரி செய்யும்போது மட்டும் எதற்காக கலர் பவுடரை பயன்படுத்துகிறீர்கள்? வெள்ளையாக இருக்கும் கேசரியை சாப்பிட முடியாதா? நிறத்துக்காக பயன்படுத்தப்படும் செயற்கை நிறமூட்டி பவுடர்களால்... புற்றுநோய் வரும். எனவே, கேசரி பவுடரை தவிருங்கள். தேவைப்பட்டால், சிறிது மஞ்சள்தூள்அல்லது குங்குமப்பூ தூவுங்கள்'' என்று ஆலோசனை தந்தார்!

பெண்களுக்கு வேலை வாய்ப்பு!

ஸ்டேட் பேங்க் துணை பொதுமேலாளர் ஆழ்வார் கண்ணன் பேசும்போது, ''நாட்டில் ஆறு லட்சத்துக்கும் மேலான கிராமங்கள் இருக்கின்றன.  அங்கெல்லாம் வங்கிகளை திறப்பது முடியாத காரியம். அதற்கு பதிலாகத்தான் தற்போது வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்படுகிறது. இது, பெண்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான ஒரு களமாக இருக்கிறது. இந்த சேவை மையத்தை நடத்துபவர்களுக்கு, அங்கே கையாளப்படும் தொகைக்கு ஏற்ப கமிஷன் கிடைக்கும். இன்னபிற சலுகைகளும் வங்கியிலிருந்து கிடைக்க வாய்ப்பு இருக்கிறது'' என்று சொன்னார்.

வாசகிகளின் பெருமகிழ்வில்...

மீனாட்சி, கல்லூரி மாணவி, வளசரவாக்கம்: நம்முடைய அறியாமையால இயற்கையை எப்படி அழிச்சுட்டு வர்றோம்... அதை எப்படி திரும்ப மீட்கறதுனு புள்ளிவிவரத்தோடு சொன்னதைக் கேட்டு, இயற்கை மீதான மதிப்பு பலமடங்கு கூடிடுச்சு. எல்லாருக்கும் ஒரு செடியை கொடுத்து...

உன் வீட்டுத் தோட்டத்தில்...   காய் எல்லாம் போட்டுப் பார்!

எங்க மனசுலயும் பசுமையை விதைச்சுட்டீங்க.''

ராஜலட்சுமி, தூத்துக்குடி: நீண்ட குழாயிலேயே மண்ணை நிரப்பி, அதில் பலவிதமான செடிகள், காய்கறிகளை விளைய வைக்க சொல்லிக் கொடுத்தாங்க. வீட்டுத் தோட்டம் பற்றி மட்டும் சொல்லாம, செம்பு குடத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும், காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை விட, இயற்கை விதைகளே தண்ணீரில் இருக்கக்கூடிய கிருமிகளைக் கொல்லும் என்பது போன்ற மருத்துவத் தகவல்களையும் பகிர்ந்தது சூப்பர்!