பிரீமியம் ஸ்டோரி
##~##

 ன்றைய தினம், சென்னை, வள்ளுவர் கோட்டம் பக்கமாக பயணித்தபோது... திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள் கூட்டம்! என்னவென்று எட்டிப் பார்த்தால்... பலவித கைவினைப் பொருட்களின் கண்காட்சி ஒருபக்கம்; பலவித தொழில் பயிற்சிகள் மறுபக்கம்... என்று ஏகபரபரப்பாக இருந்தது வள்ளுவர் கோட்டம்! இது, 'தென்னிந்திய பெண் தொழில் முனைவோர் சங்கம்', 20 ஆண்டுகளைக் கடந்து வந்திருப்பதன் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு!

25-க்கும் மேற்பட்ட சுயதொழில் பயிற்சிகள், கடனுதவி, தொழில் தொடங்க வழிகாட்டல், ஏற்றுமதி/இறக்குமதி ஆலோசனை, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது... என்று பலதரப்பட்ட உதவிகளையும் செய்துவரும் இந்த அமைப்பின் தலைவி சந்திரகாந்தா, ''சுயதொழிலில் ஆர்வமுள்ள பெண்கள் பலருக்கும்... தேவையான பயிற்சி, ஆலோசனை சரிவரக் கிடைப்பதில்லை. அந்தக் குறையை போக்கும் வகையில் 92-ம் ஆண்டு தென் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பெண்களால் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. இதில், இப்போது 17,973 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 37,900 பயனாளிகள் உருவாகிஇருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தவிர... மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்'' என்றவர்,

லட்சம் லட்சமா வாங்க..!

''எங்களுடைய ஒரே நோக்கம், எங்களின் இந்த சேவையை, தேவையுள்ள பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான். அதற்காக எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்'' என்று சொன்னார்.

லட்சம் லட்சமா வாங்க..!

சங்கத்தின் இணைச் செயலாளர் சுதா, ''8 வருஷத்துக்கு முன்ன தோழி மூலமா இங்க உறுப்பினரா சேர்ந்தேன். என் ஆர்வத்துக்கு ஏற்றபடி சரியான பயிற்சி, ஆலோசனைகளைத் தந்தாங்க. பிறகு, வீட்டில் இருந்தபடியே ஆரத்தி தட்டுகள் உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து சம்பாதிக்கத் தொடங்கினேன். பிறகு, ஒரு பயிற்சியாளராகவும் உருவாகி, இப்ப பலருக்கும் பயிற்சி கொடுத்துட்டிருக்கேன்!'' என்றார் மகிழ்வோடு.

முதன் முதலாக இந்தச் சங்கத்தைத் தொடங்கிய 12 பெண்களில் ஒருவரான சிவகாமி பாட்டி, இப்போதும் இதன் உறுப்பினர். ''இன்னிக்கு பிரமாண்டமா சங்கம் வளர்ந்திருக்குறத பார்க்கறப்ப... ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் பல லட்சம் பெண்கள் பயன்பெறணும்'' என்று அக்கறையோடு அழைப்பு வைத்தார்!

- சா.வடிவரசு, படங்கள்: அபிநயா சங்கர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு