Published:Updated:

இது பெண்களின் ராஜ்யம்... சாதிக்கும் நாட்டார்மங்கலம்!

சக்சஸ்

இது பெண்களின் ராஜ்யம்... சாதிக்கும் நாட்டார்மங்கலம்!

சக்சஸ்

Published:Updated:
##~##

 'மண்ணின் மாதரசியே வருக’, 'பெண்ணினத்தின் பெருமையே வருக’, 'ஊராட்சியின் உத்தமியே வருக’ என்று அந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள் முழுக்க வரவேற்பு தட்டிகள். இதெல்லாம்... 'அம்மா' ஜெயலலிதாவுக்கு வைக்கப்பட்ட பதாகைகள் அல்ல, அந்த சின்னஞ்சிறு கிராமத்தின் ஊராட்சி தலைவிக்குத்தான்!

''அட, ஊராட்சி தலைவர்களை விடுங்க, வார்டு கவுன்சிலர்கள்கூடத்தான் இப்படியெல்லாம் பேனர்கள் வெச்சுக்கறாங்க... இதுல என்ன அதிசயம்?'' என்கிறீர்களா?

அந்தக் கிராமத்தில் வைக்கப்பட்டி ருக்கும் இந்த பதாகைகள் அனைத்துமே... பேருக்காக வைக்கப்பட்டவை அல்ல... நூற்றுக்கு நூறு உண்மையாக வைக்கப்பட்டிருப்பதுதான் அதிசயம்!

கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது... கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள நாட்டார்மங்கலம் ஊராட்சியில், தலைவர் மற்றும் ஒன்பது உறுப்பினர்களையும் பெண்களாகவே, அதுவும் போட்டியின்றி தேர்ந்தெடுத்தார்கள் கிராமத்தினர். அதைப்பற்றி, 25.10.11 தேதியிட்ட 'அவள் விகடன்’ இதழில், 'நூறு சதவிகிதம் பெண்களுக்கே... ஓர் அதிசய ஊராட்சி’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். முழுக்க பெண்களே நிர்வகிக்கும் அந்த நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவி சுதா மணிரத்தினத்துக்குத்தான் இத்தனை பாராட்டுக்கள் இப்போது. கிராம நிர்வாகம் மற்றும் சிறப்பான செயல்பாடுகளுக்காக 'பஞ்சாயத் சஷாக்திகரன் புரஸ்கார்’ எனும் விருதை, பிரதமர் மன்மோகன் சிங் கையால் பெற்றுத் திரும்பிய சுதா, சென்ற வாரம் சிறந்த ஊராட்சிக்கான விருதை தமிழக முதல்வர் கரங்களினால் பெற்றிருக்கிறார்.

இது பெண்களின் ராஜ்யம்... சாதிக்கும் நாட்டார்மங்கலம்!

''எங்க ஊருக்கு இவங்களும், இவங்க வீட்டுக்காரரும் செய்த தொண்டுகள் நிறைய. அதனாலதான் இவங்கதான் எங்க ஊர் தலைவரா வரணும்னு முடிவு செஞ்சோம். பட்டதாரி ஆசிரியரா வேலை பார்த்திட்டிருந்தவங்கள வற்புறுத்தி ராஜினாமா செய்ய வெச்சு தலைவரா ஆக்கினோம். மற்ற உறுப்பினர்களையும் பெண்களாவே தேர்ந்தெடுத்தோம். அது எவ்வளவு பெருமைக்குரியதுனு நிரூபிச்சுட்டாங்க!'' என்று புளகாங்கிதப்படுகிறார் 65 வயதைக் கடந்த மலர்க்கொடி.

டெல்லியில் செயல்படும் 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்' நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் 'சிறந்த பெண் ஊராட்சித் தலைவர்’ விருதும், மாநில அளவில் வழங்கப்படும் 'கிராமிய ரத்னா’ விருதும் பெற்றிருக்கிறார் சுதா மணிரத்தினம்.

''முன்னயெல்லாம் எங்க ஊரு, ஒரு ஊராவே இருக்காதுங்க. இப்ப, 'டீச்சர்கிட்ட (சுதாவை அப்படித்தான் அழைக்கிறார்கள்) சொல்லிடுவேன்'னு சொன்னா போதும், எல்லாம் பெட்டிப்பாம்பா அடங்கிடுவாங்க. ஒரு குப்பை கிடையாது, குடிதண்ணிக்கு பிரச்னை இல்லை, வெட்டிக் கூட்டம் போடற விடலைங்க இல்லை. இப்படி எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா இருக்கறதுக்கு இந்த மகராசிதான் காரணம். இனி, காலாகாலாத்துக்கும் டீச்சர்தான் எங்க பிரசிடென்ட்!'' என்கிறார் வழியில் எதிர்பட்ட தமிழரசி.

இது பெண்களின் ராஜ்யம்... சாதிக்கும் நாட்டார்மங்கலம்!

''சுத்தம், சுகாதாரம் முக்கியம் என்பதை பள்ளி மாணவர்கள் மூலமாக விழிப்பு உணர்வை ஏற்படுத்தியதுதான் முக்கியமான விஷயம். அதன் விளைவாக, மக்கும் குப்பை, மக்காத குப்பையை மக்களே பிரித்து வைக்கிறார்கள். அதனை எடுத்து வர 10 பேர் கொண்ட தன்னார்வக் குழுவினர் இருக்கிறார்கள். எல்லா வீட்டிலும் தனிநபர் கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. அதற்கு அரசு கொடுத்த தொகையோடு, நான் 3,000 ரூபாய் சேர்த்து நன்றாகவே கட்டிக்கொடுத்திருக்கிறேன்.

மழைக்காலங்களில் குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் அகதிகளாக தங்க வைக்கப்படுவது ஆண்டுதோறும் வாடிக்கை. இப்போது எல்லா குடிசைகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றிவிட்டோம். 'இந்திரா நினைவுக் குடியிருப்பு’ திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அரசு ஒதுக்கிய ஒரு லட்சம் ரூபாயோடு, நான் என் சொந்தப் பணத்தில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் சேர்த்து, சற்று பெரிய வீடாக 84 பேருக்கு கட்டிக் கொடுத்தாயிற்று. 'தானே நிவாரண திட்டத்’தின் கீழும் 212 வீடுகள் வந்துவிட்டன. ஆகமொத்தத்தில் இங்கே குடிசைகளே இல்லை!'' என்று பெருமை பொங்கச் சொல்கிறார் சுதா.

திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை வந்தால், தொழிலதிபரான கணவர் மணிரத்தினத்திடம் வாங்கி முழுமை பெற வைத்துவிடும் சுதா, பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாக தடை செய்திருக்கிறார். பார்சல் டீ வாங்க பிளாஸ்டிக் கவரைத்தான் பயன்படுத்தி வந்தனர் ஏழைகள் பலரும். அவர்களுக்கு வீட்டுக்கு ஒரு எவர்சில்வர் தூக்குவாளி வாங்கிக் கொடுத்து, அதில்தான் டீ வாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் இதுவரை 2,500 மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. ஊரில் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு.. கழிவறை கட்ட தேவையான பொருட்கள் தயாரிப்பு, ரப்பர் ஸ்டாம்ப் தயாரிப்பு, ஹாலோபிளாக் தயாரிப்பு என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குழு பொறுப்பேற்று வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கிறது. பொம்மைகள், எம்ப்ராய்டரி என பலவித பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.

பேருக்கு பெண்களை உள்ளாட்சிப் பொறுப்பில் அமர்த்திவிட்டு, 'அவர்களுக்கு எதுவும் தெரியாது' என்று தாங்களாகவே 'தலைவர்' என தம்பட்டம் அடித்துக்கொண்டு திரியும் அகம்பாவ ஆண்களின் தலையில் குட்டுகிறது... சுதாவின் நாட்டார்மங்கலம்!

- கரு.முத்து  படங்கள்: ஆர்.அருண்பாண்டியன்