Published:Updated:

வாழ்க்கையை பளிச்சிட வைக்கும் உலர்சலவை!

பிஸினஸ் கேள்வி-பதில் ஹெல்ப்லைன்

வாழ்க்கையை பளிச்சிட வைக்கும் உலர்சலவை!

பிஸினஸ் கேள்வி-பதில் ஹெல்ப்லைன்

Published:Updated:
##~##

 வாருங்கள்... வழிகாட்டுகிறோம்!

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில்முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி.ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நவீன உலர் சலவையகம் தொடங்க நினைக்கிறேன். அதற்கான நேரடிப் பயிற்சி, இயந்திரங்கள் பற்றிய விவரங்கள் தேவை. நாற்பத்திஆறு வயதாகும் எனக்கு, சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்குமா என்றும் தெரியப்படுத்தவும்...''

- என்.ருக்மணி, உடுமலைப்பேட்டை

''உலர் சலவையின் அடிப்படையை முதலில் தெரிந்துகொள்வோம். மிருது மற்றும் உயர்ரக துணி வகைகளை வழக்கம்போல் தண்ணீரில் துவைத்தால், அதன் தரம் குறையும். இவற்றை மென்மையாகக் கையாளவும், இந்த ரக துணிகளில் படிந்துள்ள அழுக்குகளை துணிக்கு பாதக மில்லாமல் நீக்கவும், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக தண்ணீர் இல்லாமல் துணிகளை உலர் சலவை செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இம்முறையில், உடையை திரவ கரைப்பியில் (Solvent)  நனைத்து எடுப்பார்கள். உடையில் உள்ள அழுக்கு, எண்ணெய்ப் பசை, கிரீஸ் கறை போன்றவை அதில் கரைந்து, துணி சுத்தமாகும்.

வாழ்க்கையை பளிச்சிட வைக்கும் உலர்சலவை!

பெட்ரோ கெமிக்கல், கார்பன்டெட்ரா குளோரைடு, டிரை குளோரோ எத்திலின் என கரைப்பிகளில் சில வகைகள் உண்டு. ஒருமுறை துணிகளின் அழுக்கெடுக்க பயன்படுத்திய கரைப்பியை வடித்தெடுத்து சூடேற்றி, ஆவியாக்கி, டிஸ்டிலேஷன் முறையில் சுத்தமான கரைப்பியாக பிரித்தெடுத்து, மீண்டும் உபயோகிக்கலாம். இதற்கு தனி உபகரணம் தேவை.

உலர் சலவை இயந்திரம், முன்பக்கம் திறந்து மூடும் சலவை இயந்திரம் போல இருக்கும். ஒரு சலவை முடிந்த உடன் கரைப்பியை தனியாக வடித்து எடுக்கும் அமைப்பு இதில் உள்ளது. உலர் சலவை செய்பவர்கள், உடைகளைப் பெற்ற பின் அதை நன்கு பரிசோதித்து, அழுக்கு, அதிக கறை படிந்துள்ள இடங்களைக் கண்டறிந்து கரைப்பி தெளிப்பான் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, இயந்திரத்தில் சுத்தம் செய்ய வேண்டும். இயந்திரத்தில் முக்கால் பாகம் கரைப்பியை நிரப்பி, துணிகளை அதில் நனைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் இயந்திரத்தை சுழலவிட்ட பின், கரைப்பியை வடித்தெடுத்து, உடைகளை வெளியே எடுக்க வேண்டும். அழுக்குகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்தபின், அந்த உடையை நீராவி அயர்னிங் அல்லது பிரஷர் அயர்னிங் முறையில் அயர்ன் செய்து, பேக் செய்ய வேண்டும்.

நவீன உலர் சலவை இயந்திரங்கள் எல்லா ஊர்களிலும் கிடைக்கின்றன. குறிப்பாக... சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் அதிகமாக விற்பனையாகின்றன. உலர் சலவைக்கான பயிற்சி, உபயோகிக்கும் முறை, கரைப்பி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இயந்திர டீலர்களிடமே பெறலாம்.

இன்றைய நிலவரப்படி ஒரு பட்டுப்புடவை உலர் சலவை செய்ய ரூபாய் 200 அல்லது அதற்கு மேலும் வசூலிக்கப்படுகிறது. மேலும் இன்று பெரும்பாலான மக்கள் பட்டு, சில்க் காட்டன், டிசைனர் புடவைகள், கோட், சூட் என்று விலை அதிகமான, உயர்ரக துணிகளை பரவலாக வாங்குவதால், இந்தத் தொழிலுக்கான தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, நவீன உலர் சலவையகம் தொடங்க இருக்கும் உங்களின் தொழில் கணிப்பு வரவேற்கத்தக்கதே.

அடுத்ததாக, வங்கிக் கடன் பற்றிப் பார்ப்போம். தமிழக அரசின் 'யுஒய்இஜிபி' (UYEGP-Unemployed Youth Employment Generation Programme) மற்றும் 'நீட்ஸ்' (NEEDS) இந்த இரண்டு திட்டங்களும், 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே. எனவே, உங்களால் இவற்றின் மூலம் பயன்பெற முடியாது. ஆனால், பெண் தொழில் முனைவோர் என்கிற வகையில் வங்கிகளில் நேரடியாகக் கடன் பெற முடியும்.

'பாரத பிரதமரின் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' (PMEGP-Prime Minister’s Employment Generation Programme), மூலமும் பலன் பெறலாம். இத்திட்டம் 2013 மே மாதம் முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது என்பது அனைவருக்குமான நற்செய்தி. உற்பத்தி தொழில்களுக்கு ரூபாய் 25 லட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரையிலும் கடன் வசதி பெறலாம். இதில் உங்கள் பங்கு மூலதனம் வெறும் 5 சதவிகிதம்தான். 25 முதல் 35 சதவிகிதம் வரை மானியமும் கிடைக்கும்.

பாரத பிரதமரின் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் நோக்கம், ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 தொழிலதிபர்களை உருவாக்குவது. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம். படிப்பறிவு இல்லாதவர்கள்... இத்திட்டத்தில் உற்பத்தித் தொழிலுக்கு ரூபாய் 10 லட்சம் வரையிலும், சேவைத் தொழிலுக்கு 5 லட்ச ரூபாய் வரையிலும் கடன் பெறலாம். அதற்கு மேல் கடன் தொகை பெற, எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சொத்து பிணையம் இல்லாமல்கூட இத்திட்டத்தில் கடன் வசதி பெற முடியும்.

இத்திட்டங்களுக்கான விண்ணப்ப படிவங்களைப் பெற, மாவட்ட தொழில் மையங்கள், கதர் கிராமிய தொழில் மையம் (KVIC-Khadi and Village Industies centre), மாநில அரசு மற்றும் மத்திய அரசின் கதர் கிராமிய தொழில் வாரியம் (KVIB-Khadi and Village Industies Board) ஆகிய நிறுவனங்களை அணுகலாம். படிவங்களை திட்ட அறிக்கையுடன் சமர்ப்பிப்பது முக்கியம். உங்கள் திட்டங்களை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கூட்டப்படும் குழு பரிசீலித்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்வார்கள்.

''வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி... 'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’, கேள்வி - பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism