Published:Updated:

முத்துக்கள் பத்து!

முத்துக்கள் பத்து!

முத்துக்கள் பத்து!

முத்துக்கள் பத்து!

Published:Updated:
##~##

குடும்ப அட்டை தொடங்கி, கல்விச் சான்றிதழ்கள் வரையிலான பல்வேறு ஆவணங்களையும்... கிடைத்த ஏதாவதொரு இடத்தில் வைத்துவிட்டு, தேவைப்படும் சமயத்தில்... ' எங்க வெச்சேனு தெரியலையே’ என்று புலம்புவது... பலருக்குமான உலகமகா அனுபவம்.  இதன்காரணமாக, முக்கியமான பல விஷயங்கள் கைகூடாமல் போவதும் உண்டு. இதுபோன்ற சிக்கல்களை எப்படியெல்லாம் தவிர்க்கலாம்... ஆவணங்களை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றிய சில ஆலோசனைகள், 'முத்துக்கள் பத்து’ என்ற தலைப்பில் இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. 

 தொகுப்பு: சா.வடிவரசு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முத்துக்கள் பத்து!

இன்ஷூரன்ஸ் பத்திரங்கள்!

இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் நமக்கு, சம்பந்தபட்ட அலுவலகத்திலிருந்து முதல் பிரிமியத்துக்கான ரசீது மற்றும் பத்திரம் எல்லாம் கொடுப்பார்கள். ஆனால், பத்து ஆண்டுகள், இருபது ஆண்டுகள் கழித்துதான் அது முதிர்வடைந்து பணம் கிடைக்கும். அந்த சந்தர்ப்பத்தில் பார்த்தால்... பத்திரமும் கிடைக்காது, அந்த ரசீதும் கிடைக்காது. இவையில்லாமல், நம்முடைய பணமும் எளிதாகக் கிடைக்காது. எனவே, இன்ஷூரன்ஸ் தொடர்பான அனைத்துப் பத்திரங்கள் மற்றும் முதல் பிரிமியம் ரசீதுகளை.. பணம் போல் பாதுகாக்கத் தவறாதீர்கள்.

முத்துக்கள் பத்து!

போட்டோஸ்!

படிப்பு, வேலை, பத்திரப்பதிவு, பாஸ்போர்ட் என்று பலவற்றுக்கும் புகைப்படங்கள் முக்கியம். இதற்காக பாஸ்போர்ட் சைஸ் மற்றும் ஸ்டாம்ப் சைஸ் போட்டோக்களை நிறையவே எடுத்து வைத்திருப்போம். ஆனால், தேவைப்படும் சமயத்தில் அவை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கவே பல மணி நேரங்களைச் செலவிடும் அளவுக்கு அசிரத்தையாகத்தான் பலரும் இருக்கிறார்கள். ஸ்கேன், பென்டிரைவ், சி.டி. மற்றும் இ-மெயில் என்கிற வகைகளில் போட்டோக்களை சேமித்து வைப்பது பெரிதாகக் கைகொடுக்கும். தேவைப்படும்போது சட்டென்று பிரின்ட் போட்டுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது... மெயிலில் இருக்கும் படத்தை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்.

முத்துக்கள் பத்து!

டிரைவிங் லைசன்ஸ்!

டிரைவிங் லைசன்ஸ்... வாகன ஓட்டிகளுக்கு எப்போதுமே கைவசம் இருக்க வேண்டிய ஒன்று. இதன் காரணமாகவே இது அடிக்கடி தொலைவது பலருக்கும் வாடிக்கையே! இதையடுத்து புதிதாக லைசன்ஸ் வாங்குவதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு அலையும் கொடுமை இருக்கிறதே... அப்பப்பா! எனவே, டிரைவிங் லைசன்ஸை பொறுத்தவரை, கலர் ஜெராக்ஸ் போட்டு வைத்துக்கொள்வது நல்லது. ஏதாவது பிரச்னை எழும்போது மட்டும் ஒரிஜினல் லைசன்ஸை சமர்ப்பித்தால் போதுமானது. ஸ்கேன் செய்து சி.டி, பென் டிரைவ், கம்ப்யூட்டர் மற்றும் இ-மெயிலில் சேமிப்பதும் நல்லது.

முத்துக்கள் பத்து!

குடும்ப அட்டை!

ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு வாங்குவதற்கு மட்டுமல்லாது... அரசின் சலுகைகள், குடிமகன் என்பதற்கான அங்கீகாரம், முகவரிக்கான அடையாளம் என்று அனைத்துக்குமே ஆதாரம் குடும்ப அட்டைதான். அதைத் தொலைத்தால் மீண்டும் வாங்குவது... சாமானியப்பட்ட விஷயமல்ல. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அந்த அட்டை, பலருடைய வீட்லும் கந்தலாகிக் கிடப்பதுதான் கொடுமை. தனியாக ஒரு கவர் வாங்கி அதில் அந்த அட்டையைப் பாதுகாப்பதோடு... குழந்தைகள் கையில் கிடைக்காத இடத்தில் வைப்பதும் முக்கியம். அந்த அட்டையை நகல் (ஜெராக்ஸ்) எடுத்து தனியாக வைத்துக் கொள்வதும் நல்லது. அதன் எண்களைக் குறித்து வைப்பதும் சமயத்தில் உதவியாக இருக்கும். தற்போது, ஸ்கேன் வசதி வந்திருப்பதால், 'ஸ்கேன்' செய்து சி.டி., பென் டிரைவ், கம்ப்யூட்டர் மற்றும் இ-மெயில் ஆகியவற்றில் சேமித்து வைப்பதும் சமயத்தில் கைகொடுக்கும்.

முத்துக்கள் பத்து!

சான்றிதழ்கள்!

நம்முடைய கல்வி சம்பந்தமான சான்றிதழ்கள், குழந்தைகளின் சான்றிதழ்கள் போன்றவை... மிகமிக முக்கியமானவை. அவை அனைத்தையும் ஃபைல்களில் வைத்து பராமரிப்பதுதான் நல்லது. அப்போதுதான் தேவைப்படும்போது, சட்டென்று குறிப்பிட்ட சான்றிதழை தனியாக எடுக்க முடியும். இதற்காக ஃபைல் வாங்கும்போது தரமான ஃபைல்களை வாங்குவது நல்லது. தரமற்ற ஃபைல் எனில், சான்றிதழ்கள் ஒட்டிக்கொண்டு கிழிவதோ அல்லது பெயர் உள்ளிட்ட விவரங்கள் அழிவதோ நடக்கும். வேண்டிய அளவுக்கு நகல் எடுத்து வைப்பது... ஸ்கேன் செய்து சி.டி, பென் டிரைவ், கம்ப்யூட்டர் மற்றும் இ-மெயிலில் சேமிப்பது நல்லது.

முத்துக்கள் பத்து!

வாக்காளர் அடையாள அட்டை!

பதினெட்டு வயது பூர்த்தியான ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. அதற்கான தகுதியைச் சொல்வதுதான் வாக்காளர் அடையாள அட்டை. இது, பாஸ்போர்ட், பயண டிக்கெட்டுகள் உள்ளிட்ட பலவற்றுக்கும் அடையாள அட்டையாகவும் பயன்படுவதால் பலரும் பர்ஸிலேயே வைத்துக் கொள்கின்றனர். தொலைந்து போனால், எளிதில் இன்னொரு வாக்காளர் அடையாள அட்டையை வாங்குவது, அத்தனை எளிதல்ல. எனவே, இதை பாதுகாப்பதில் அதிக கவனம் வைப்பது நல்லது. இதற்குப் பதிலாக அலுவலக அடையாள அட்டை, பான் கார்டு, கல்லூரி மாணவருக்கான அடையாள அட்டை, அரசாங்க அலுவலகங்கள் தரும் அட்டை போன்றவற்றை எப்போதும் கைவசம் வைத்திருக்கலாம்.

முத்துக்கள் பத்து!

ரசீதுகள்!

 நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும், கட்டாயம் அதற்கான பில்லை கேட்டு வாங்குவது முக்கியம். அதோடு, தேவையான காலத்துக்கு அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் முக்கியம். வாரண்டி, சர்வீஸ் போன்றவற்றுக்கு பில் மிகமிக முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஓட்டல்களில் சாப்பிடும் பில்களையும் வாங்குங்கள். அங்கே வழங்கப்பட்ட உணவு காரணமாக உங்களுக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறு வந்தால்... அந்த நேரத்திலும் இந்த பில்லை பயன்படுத்தி சட்டப்படி நடவடிக்கை, இழப்பீடு பெற முடியும். கடைகளில் வாங்கிய மருந்துகள் காரணமாக ஏதேனும் பிரச்னை என்றாலும், பில் இருந்தால்தான் அடுத்த கட்டத்துக்கே நகர முடியும்!

இப்போது பல இடங்களிலும் வழங்கப்படும் பில்கள், பெரும்பாலும் கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட் என்கிற வகையில் இருப்பதால், அவற்றில் உள்ள எழுத்துக்கள் சீக்கிரமே அழிந்து விடுகின்றன. எனவே, பில்களை ஜெராக்ஸ் எடுத்து பத்திரப்படுத்துவதும் நல்லது.

முத்துக்கள் பத்து!

வீட்டுப் பத்திரம்!

 வீடு, நிலம், கடை என்று உங்களின் அசையா சொத்து எதுவாக இருந்தாலும்... அதற்கு சாட்சியாக இருப்பவை, பத்திரங்கள் மற்றும் பட்டாக்கள். இவற்றை வாங்குவதற்காக நாம் அலையும் அலைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. கிட்டத்தட்ட நம் உயிர் நாடியாகவே இருக்கும் இத்தகைய பத்திரங்கள் மற்றும் பட்டாக்களை பத்திரப்படுத்துவதில் அந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறோமா? ஏதாவது புத்தகத்தின் நடுவில், ஜவுளிக்கடை பாலிதீன் கவரில் என்றுதான் பெரும்பாலும் சேமிக்கிறோம். பாதுகாப்பான ஃபைல் கவர் அல்லது ஃபைலில் சேமிப்பது முக்கியம். குழந்தைகளின் கையில் கிடைக்காத இடத்தில் வைக்க வேண்டியது அவசியம். போதுமான அளவுக்கு நகல்கள் எடுப்பது, ஸ்கேன் செய்து மெயில், பென் டிரைவ், சி.டி மற்றும் கணினியில் சேமித்து வைப்பது மிகவும் பலன் தருவதாக இருக்கும்.

முத்துக்கள் பத்து!

வேலை வாய்ப்பு அட்டை!

வேலைவாய்ப்பு பதிவு அட்டையை சரிவர பாதுகாப்பது என்பது பலருக்கும் கைவராத கலை. முதலில், அதை எங்கே வைத்திருக்கிறோம் என்பதே பலருக்கும் மறந்துவிடும். புதுப்பிக்கும் தேதி வரும்போது தேடித் தேடிக் களைத்துப் போவது பெரும்பாலும் நடக்கும். அப்படியே கைக்கு எட்டும் இடத்தில் வைத்திருந்தாலும்... மடித்து, சுக்கலாக கிழிந்து என பரிதாபமாக இருப்பதும் உண்டுதானே! வேலை உடனே கிடைக்கிறதோ, இல்லையோ... ஒரு நம்பிக்கையில்தான் கல்வித் தகுதியைப் பதிவு செய்து, அரசு வேலைக்காகக் காத்திருக்கிறோம். அப்படியிருக்க, அதற்கான அத்தாட்சியாக அமையும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை தரமான ஃபைலில், சான்றிதழ்களுடன் பத்திரமாக பாதுகாப்பதுதானே முறை. பதிவு எண்ணைக் குறித்து வைப்பது, வேண்டிய அளவுக்கு நகல் மற்றும் ஸ்கேன் எடுத்துக்கொள்வது, இ-மெயிலில் சேமிப்பது என்பவையும் பயன்தருவதாக இருக்கும். தொலைந்தாலோ... கிழிந்தாலோ புதிதாக பதிவு அட்டையைப் பெறுவதற்கு இது உதவியாக இருக்கும்!

முத்துக்கள் பத்து!

கேஸ் அட்டை

'பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு ஆவணங்களைக்கூட எளிதில் பெற்றுவிடலாம். ஆனால், இந்த கேஸ் இணைப்பு இருக்கிறதே... அதைப் பெறுவதற்குள், தாவு தீர்ந்துவிடும்’ என்கிற புலம்பல் இன்றைக்கும்கூட நீடிக்கிறது. அப்படிப்பட்ட கேஸ் இணைப்பு சம்பந்தமான புக் மற்றும் சிலிண்டர் டெபாசிட் ரசீது ஆகியவற்றை கண் போலத்தான் பாதுகாக்க வேண்டும். ஒருவேளை அவை கிழிந்தாலோ... தொலைந்தாலோ... உங்களுடைய இணைப்பை வேறு முகவரிக்கு மாற்றும்போது பிரச்னையாகிவிடும். உங்களுடைய இணைப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு உரிய அலுவலர்களிடம் சான்றிதழ் பெற வேண்டியிருக்கும். அதை வாங்குவதற்காக தேடி அலைந்தே ஓய்ந்துவிடுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism