##~##

ண்ணகிக்கு நிகராக பத்தினிப் பெண்டிர் பல்லாயிரம் பேர், தமிழக வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வெளியுலகுக்குத் தெரியாமலே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். சிலரே அடையாளம் காணப்பட்டு, சுற்றத்தாராலும் உற்றாராலும் மதிக்கப் பெற்று, இன்றளவிலும் தெய்வமாக போற்றப்படுகிறார்கள். அப்படி ஒரு பெண் தெய்வம்... கொங்குச் சீமையில், காங்கேய நாட்டின் காடையூர் கிராமத்தில் இருக்கும் வெள்ளையம்மன். கொங்கு வேளாளர் குலத்திலிருக்கும் 68 கூட்டத்தினருள், 'பொருள்தந்த முழுக்காதர் குலம்' என்கிற கூட்டத்தினரின் குலதெய்வமாக போற்றப்பட்டு வணங்கப்படுகிறாள் இந்த வெள்ளையம்மன்.

ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு, பின்னர் ஊர் மக்களால் புதுப்பிக்கப்பட்டிருக்கும் அருள்மிகு காடையீஸ்வரர் கோயிலின் உள்ளே, அம்பாள் சந்நிதிக்கு எதிரே இருக்கிறது வெள்ளையம்மன் சந்நிதி. பிற குலத்தினரும், பிற மதத்தினரும் வந்து வணங்கிச் செல்லும் இந்த வெள்ளையம்மன்... நடிகர் சிவகுமார் குடும்பத்தினருக்கும் குலதெய்வம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதாரண வெள்ளையம்மாள்... எப்படி வெள்ளையம்மன் எனும் சாமியானாள்? காடையீஸ்வரர் கோயிலுக்குள்ளே அவளுக்கு எப்படி இடம் கிடைத்தது?

இதோ எந்தன் தெய்வம்! - 7

''பல நூறு வருடங்களுக்கு முன், காடையூரில் சேடகுலத்தின் பெருந்தனக்காரர் ஒருவருக்கு மகளாகப் பிறந்தாள் வெள்ளையம்மாள். அவள் மேனி முழுவதும் வெள்ளையாக இருந்ததால், உள்ளூரில் மாப்பிள்ளை கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் ஆதிகருமாபுரத்தில் இருந்து மாடுகளை மேய்க்க வந்து சேர்ந்தான் காங்கேயன். மாடு மேய்ப்பவனாக இருந்தாலும், அவனது அழகும் மாண்பும் கண்டு அவனையே மாப்பிள்ளையாக்கிக் கொள்ள விரும்பினார் பெருந்தனக்காரர். 'என் தாய், தந்தை சம்மதித்தால் வெள்ளையம்மாளை மணம்புரிந்து கொள்கிறேன்’ என்று சொன்னான் காங்கேயன்.

உடனே அவனுடைய தாய், தந்தையை பார்த்து திருமணம் பேசி முடித்தார் பெருந்தனக்காரர். தான் ஏழையாக இருப்பதால்... பிழைப்பதற்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு, பெருந்தனக்காரர் அதற்கு சம்மதித்த பிறகு, திருமணம் நடக்க... வீட்டோடு மாப்பிள்ளையானான் காங்கேயன்.

மகிழ்ச்சியான அவர்களுடைய இல்லறத்தின் விளைவாக மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தார்கள். இதற்கிடையே வெள்ளையம்மாளின் தாய், தந்தை அடுத்தடுத்து இறந்துபோக, சகோதரர்கள் மற்றும் மனைமார்கள் சேர்ந்துகொண்டு, அவளை வீட்டிலிருந்து வெளியேற்ற முயற்சித்தனர். தந்தை சொன்னது போல் நிலம் கொடுத்தால், வெளியேறிவிடுவதாக சொன்னாள். அதைக் கொடுக்க விரும்பாத அண்ணன்கள், காங்கேயனை காட்டுக்கு அழைத்துச் சென்று கொன்றுவிட்டு, 'அவனை காணோம்' என்று செய்தி பரப்பிவிட்டனர்.

அந்தத் துயரமான பொழுதில், வெள்ளையம்மாள் கர்ப்பம் தரித்திருந்தாள். அவளை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று சந்தர்ப்பம் பார்த்திருந்தவர்கள், 'கணவன் இல்லாமலே கர்ப்பம் ஆகியிருக்கிறாள். அத்தகையவளை இனி வீட்டில் வைத்திருக்க முடியாது’ என்று ஊருக்கு பொய்யுரைத்து, துரத்திவிட்டனர்.

பிள்ளைகளோடு தன்னந்தனியாக காட்டு வழியில் நடந்துகொண்டிருந்தபோது... குதிரைகள் வேகமாக செல்லும் சத்தம் கேட்க, பயந்துபோய் கள்ளிப்புதரில் ஒளிந்தாள். ஆனாலும், கடைசியாக சென்ற குதிரையிலிருந்தவர், பார்த்துவிட்டு அருகே அழைத்து விவரம் கேட்டார். அவர்... அகிலாண்டபுரத்தை ஆண்ட சர்தார். நடந்ததை விளக்கமாக சொல்லி வெள்ளையம்மாள் அழ, பரிதாபப்பட்ட சர்தார், இரண்டு வீரர்களை துணைக்கு அனுப்பி, 'நான் திரும்பும் வரையில் அகிலாண்டபுரம் மாளிகையில் இரு. திரும்பி வந்ததும் உன் அண்ணன்களை விசாரிக்கிறேன்' என்று சொன்னார்.

அதன்படியே திரும்பி வந்தவர், அண்ணன்களை அழைத்து விசாரிக்க... 'நிலம் தருவதாக எங்கள் தந்தை சொல்லவேயில்லை’ என்று மறுத்தவர்கள், 'கணவன் இல்லாதபோது கர்ப்பமான இவள் ஒரு விபசாரி. இவளை எப்படி வீட்டில் வைத்துக் கொள்வது?’ என்று கேட்டார்கள். என்றாலும், 'உரிய பங்கை கொடுத்துத்தான் ஆகவேண்டும்’ என்று சர்தார் உறுதியாக சொன்னார். அதற்கு, 'அப்படி கொடுக்க வேண்டுமென்றால், நாங்கள் சொல்லும் சத்தியத்தைக் கடைபிடித்து, இவள் பத்தினிதான் என்பதை நிரூபிக்க வேண்டும்’ என்றனர் அண்ணன்மார்கள். வெள்ளையம்மாளும் அதை ஏற்றுக்கொண்டாள்.

இதோ எந்தன் தெய்வம்! - 7

பிறகு, காடையீஸ்வரர் கோயிலில் சபை கூடியது. என்ன சத்தியத்தை வெள்ளையம்மாள் கடைபிடிக்க வேண்டும் என்று சர்தார் கேட்க, 'சுடாத மண் கலயத்தில் தண்ணீர் சுமந்து வந்து கோயிலில் இருக்கும் மண்குதிரை மீது தெளித்தால்... குதிரை சிலிர்க்க வேண்டும். இங்கே இருக்கும் கழுமரத்தின் மீது தண்ணீர் தெளித்தால், அது துளிர்க்க வேண்டும். இப்படி நடந்தால் இவள் பத்தினி. இல்லையென்றால், விபசாரி என்று பட்டம் கட்டி, அந்த கழுமரத்தில் ஏறி இவள் உயிர் துறக்க வேண்டும்’ என்று கொடூரமான திட்டத்தைச் சொன்னார்கள்.

'இவர்கள் உன்னைக் கொல்ல திட்டமிடுகிறார்கள். எனவே, இந்த சத்தியத்தை நீ மேற்கொள்ள வேண்டியது இல்லை’ என்று சொன்னார் சர்தார். ஆனால், 'விபசாரி என்ற பெயரோடு வாழ்வதைவிட, இந்த காடையீஸ்வரர் மீது பழிபோட்டு இந்த சத்தியத்தை மேற்கொண்டு உயிர் துறக்கிறேன்... என் குழந்தைகளை நீங்கள் காப்பாற்றுங்கள்’ என்று சொன்ன வெள்ளையம்மாள், எதிரே இருந்த குளத்தில் குளித்தெழுந்து... பச்சை மண் பாத்திரத்தில் தண்ணீர் முகர்ந்தாள். தெய்வ அருளால் பாத்திரம் உடையவில்லை. அதில் தண்ணீர் சுமந்து வந்து தெளித்ததும்... மண் குதிரை உயிர்பெற்று குலுங்கியது. பட்ட மரமான கழுமரம் துளிர்த்தது.

இதோ எந்தன் தெய்வம்! - 7

ஆரவாரம் செய்து ஆனந்தக் கூத்தாடிய மக்கள்... அண்ணன்மார்களை திட்டி, அவளுக்குரிய பங்கினையும் பெற்றுத் தந்தனர். அதற்கு பிறகு, நான்காவது பிள்ளையையும் பெற்றெடுத்து வெகுகாலம் வாழ்ந்த வெள்ளையம்மாள், பூரண வாழ்க்கை முடிந்து விண்ணுலகம் சென்றாள். அவளை எல்லோரும் தெய்வமாக ஏற்றுக் கொண்டார்கள். அந்த நான்கு பிள்ளைகளின் வம்சத்தினர்தான்... அவளை குலதெய்வமாக ஏற்று வணங்கி வருகின்றனர்!'' என்று முழுக்கதையையும் விவரமாக சொல்லி முடித்தார் பரம்பரை அறங்காவலரான கே.சி.ரகு.

மிக அழகாக புதுப்பிக்கப்பட்டிருக்கும் காடையீஸ்வரர் கோயிலின் மகாமண்டபம் முழுவதும் வெள்ளையம்மாளின் வாழ்க்கை வரலாறு சிற்பங்களாக செதுக்கப்பட்டு, அதன் கீழ் எழுத்தாலும் எழுதப்பட்டுள்ளது. சந்நிதிக்கு எதிரே கீழ் பகுதியில் சிறியதான மண்டபத்தில் அம்பாளை பார்த்த வண்ணம் நாயன்மார்கள் உருவம் போல் சிறியதாக இடம்பிடித்துள்ளது வெள்ளையம்மாளின் சிற்பம். அருகே இன்றும் இருக்கிறது... வெள்ளையம்மாள் தண்ணீர் சுமந்து தெளித்ததால் துளிர்த்த கழுமரமான விடத்தலைமரம்.

''பத்தினி தெய்வமான இந்த வெள்ளையம்மன், குடும்ப உறவுகள் மீது பாசம் கொண்டவள். அதனால் குடும்பத்தில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் இவளை வந்து வழிபட்டால் அத்தனையும் தீர்ந்துவிடும். இவளை குலதெய்வமாக கொண்டவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு இங்கு வந்து முழுக்காது சீர் (காதணி விழா) செய்துவிட்டுத்தான், மேற்கொண்டு எந்த நல்லது கெட்டதும் செய்வார்கள்'' என்கிறார் ஆலய குருக்களான ஸ்ரீதரன்.

'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்’ எனும் சிலப்பதிகார வரிகளுக்கு ஏற்ப... பல நூறு ஆண்டுகளுக்கு பின்னும் உயிர்ப்போடு இருக்கிறாள் வெள்ளையம்மாள்!

படங்கள்: க.ரமேஷ்

வழிகாட்டி

காங்கேயத்திலிருந்து கோவை செல்லும் சாலையில், ஆறாவது கிலோ மீட்டரில் இருக்கிறது காடையூர். அங்கே இறங்கினால் பத்து நிமிட நடையில் கோயில் வந்துவிடும். காங்கேயத்திலேயே அர்ச்சனை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். காலை 5.30 முதல் இரவு 7 மணி வரை கோயில் திறந்திருக்கும். மதியம் நடை சாத்தும் வழக்கமில்லை. அலுவலக தொலைபேசி: 04257-247267

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism