Published:Updated:

உரமாகுது காய்கறி கழிவு... மிச்சமாகுது தினசரி செலவு!

உரமாகுது காய்கறி கழிவு... மிச்சமாகுது தினசரி செலவு!

உரமாகுது காய்கறி கழிவு... மிச்சமாகுது தினசரி செலவு!

உரமாகுது காய்கறி கழிவு... மிச்சமாகுது தினசரி செலவு!

Published:Updated:
##~##

'வீட்டுத் தோட்டம் போட வேண்டும்' என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், 'அதெல்லாம் லேசுப்பட்ட விஷயமில்ல...', 'அதையெல்லாம் நம்மளால பராமரிக்க முடியுமா?' இதுபோன்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான விடை தேடாமலே... விஷயத்தை முடித்துவிடுவார்கள்.

ஆனால், 'நகரத்தில் இருந்தால் என்ன..? நாமும் அமைக்கலாம் ஒரு குட்டித் தோட்டம். தேவை ஆர்வமும் முயற்சியும் மட்டுமே!’ என்று நம்பிக்கையூட்டுகிறார், சுற்றுச்சூழல் நிபுணர் சுல்தான் அகமது இஸ்மாயில். சென்னைப் புதுக்கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர், மண்புழு விஞ்ஞானி என்கிற பெருமைகளைப் பெற்றிருக்கும் இஸ்மாயில்... மண்புழு, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி உரையாற்ற, பயற்சி அளிக்க உலக அளவில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர். இங்கே வீட்டில் தோட்டம் அமைப்பது முதல், பராமரிப்பது வரை மணிமணியான தகவல்களைப் பகிர்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பெரிய பெரிய கட்டடங்களில், துளிகூட மண் இல்லாத நிலையிலும், கிடைக்கும் சின்னச் சின்ன வெடிப்புகளில் அரச மரம் வளர்வதைப் பார்த்திருப்போம். அப்படியிருக்கும்போது காய்கறி மற்றும் பூஞ்செடிகள் வளர்க்க அதிகபட்சமாக எவ்வளவு மண் தேவைப்படப் போகிறது? பிடியளவு மண்ணில்கூட கொத்துக் கொத்தாக காய்கள் பறிக்கலாம். நாம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் டப்பாக்கள், வாட்டர் பாட்டில்கள், பெயின்ட் வாளிகள் இவற்றில் எல்லாம் கொஞ்சம் மண்ணும் இயற்கை உரமும் போட்டால் போதும்... அதிலிருந்து உருவாகும் அழகான தோட்டம்!

உரமாகுது காய்கறி கழிவு... மிச்சமாகுது தினசரி செலவு!

முதல் தேவை... எரு!

தோட்டம் போடுவதற்கு முன், முதலில் எரு தயாரிக்க வேண்டும். முதல் வேலையாக ஏழு தொட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தொட்டியிலும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என எழுதுங்கள். சமையலுக்கு நறுக்கும் காய்கறிக் கழிவுகளை அன்றைய தினத்துக்குரிய தொட்டியில் போடுங்கள்.

அதை மக்க வைப்பதற்கு, சிறிதளவு மண்ணைத் தூவுங்கள் அல்லது புளித்த தயிரை, தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். இதேபோல அந்தந்த நாளுக்குரிய தொட்டிகளில் கழிவுகளைப் போட்டு வாருங்கள். நான்கு முதல் ஏழு மாதத்துக்குள் இந்தக் கழிவு சேகரிப்பு... எருவாக மாறிவிடும்.

இப்போது நமக்கு ஏழு தொட்டிகளில் உரம் ரெடி (ஒரு தொட்டிக்கான கழிவுகளை ஒரே நாளில் உங்களால் போட முடிந்தால்... நான்கு முதல் ஆறு வாரங்களில் உரம் தயாராகிவிடும்)!

அப்புறம் என்ன... கொஞ்சம் மண்ணைத் தூவி வீட்டிலிருக்கும் அழுகியத் தக்காளியைப் பிழிந்தால்... தக்காளிச் செடி முளைக்கும், வெந்தயத்தைப் போட்டால் வெந்தயக்கீரை முளைக்கும். சந்தையில் விற்பனையாகும் விதவிதமான காய்கறி விதைகளைத் தூவியும் பயிர் செய்யலாம். கூடவே இன்னொரு ஏழு தொட்டிகள் வாங்கி மீண்டும் உரம் தயாரிக்க ஆரம்பித்துவிடுங்கள்.

தண்ணீரை சேமிக்கும் தேங்காய் நார்!

வீட்டுக் கழிவை உரமாக்கிவிட்டோம். அடுத்தது, தண்ணீர். பெருகி வரும் தண்ணீர் பஞ்சத்தில் குடிக்கவே தண்ணீர் இல்லை, இதில் செடிக்கு ஏது நீர் என்கிறீர்களா..? வழி செய்வோம். தேங்காய் நார் ஒரு மிகச் சிறந்த தண்ணீர் தேக்கி. நாம் ஊற்றும் தண்ணீரை இரண்டு, மூன்று நாட்கள் வரையிலும்கூட தேக்கி வைத்துக்கொள்ளும்.

அதனால் தொட்டியில் மண்ணுடன் தேங்காய் நாரையும் சேர்த்தால் செடிக்கு விடும் தண்ணீர் மிகக்குறைந்த அளவே தேவைப்படும். தொட்டிக்கு அடியில் துளை போட்டு வைப்பது, அதிகப்படியான நீரை வெளியேற்றி செடி அழுகாமல் காக்கும்.

உரமாகுது காய்கறி கழிவு... மிச்சமாகுது தினசரி செலவு!

நீங்களே தயாரிக்கலாம் பூச்சிவிரட்டி!

'அட என்னங்க நீங்க? உரம், தண்ணீர் இதைவிட பெரிய பிரச்னை... பூச்சிதாங்க. அதனால, குழந்தைங்க இருக்குற வீட்டுல தோட்டம் வைக்கவே பயமா இருக்கு?' என்று தயங்குபவரா நீங்கள்? கவலையே வேண்டாம். பூச்சிகளையும் ஓடஓட விரட்டி விடலாம். அதற்காக நிறைய பணம் கொடுத்து அபாயம் நிறைந்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை வாங்கவே கூடாது. இயற்கை முறை பூச்சிவிரட்டிகளை நாமே தயாரிக்கலாம்.

100 கிராம் இஞ்சி, 100 கிராம் பூண்டு, 10 கிராம் பெருங்காயம்... இவை மூன்றையும் அரைத்து 10 லிட்டர் தண்ணீரில் 15 நாட்கள் ஊற வையுங்கள். பசுவின் கோமியம் கிடைத்தால்... 1 லிட்டர் கோமியத்துடன் 9 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற வையுங்கள். இதுதான் பூச்சிவிரட்டி. இதை, 9 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்கிற விகிதத்தில் கலந்து தெளியுங்கள். அளவுக்கு அதிகமாக தெளிப்பதும் ஆபத்து. அது, செடியையே கருக வைத்துவிடும். தோட்டத்துக்கு நடுவில் சாமந்திப்பூ செடியை வைத்தாலும் பூச்சிகள் நெருங்காது.

பராமரிப்பு ரொம்ப முக்கியம்!

பூந்தொட்டிகளுக்கு அடியில் பிளாஸ்டிக் ட்ரே வைப்பதன் மூலம் உபரி நீர் சிந்தி தரை அழுக்காவதை தவிர்க்கலாம். மழைக் காலங்களில் வானம் பார்த்தவாறு பூந்தொட்டிகளை வைக்க வேண்டாம். கொல்லைப்புற தோட்டங்களில் சேரும் சருகுகள், தேவையற்ற தழைகளைத் திரட்டி, அவற்றையும் உரம் தயாரிக்கப் பயன்படுத்துங்கள். வீட்டின் பின்புறம் குழி எடுக்க வசதியுள்ளவர்கள் குழிக்குள் இவற்றை போட்டுக் கொண்டே வந்து உரமாக்கலாம். அப்படி வசதியில்லாதவர்கள் பெரிய டிரம்களில் கொட்டி ஒவ்வொரு தரமும் அதன் மீது மண்ணைப் போட்டு மூடிக்கொண்டே வருவதுடன் அடிக்கடி அதை குச்சியால் கிளறி மக்க வைத்தும் உரம் தயாரிக்கலாம்'' என்ற இஸ்மாயில்,

''வீட்டுத் தோட்டம் என்றாலே பூச்சிகள் உள்ளிட்டவை வரும் என்கிற பயம் தேவையில்லை. தோட்டத்தில் குப்பைகளை சேரவிடாமல் சுத்தமாக வைத்திருந்தாலே போதும்'' என்று வழிகாட்டினார்!

என்ன... இனி, உங்கள் வீட்டில் மல்லிகை மணக்கும்... ரோஜாப்பூ கண் சிமிட்டும்... வெண்டைக்காய், பரங்கிக்காய் பளீரிடும்... சரிதானே!

- பொன்.விமலா, படங்கள்: உ.கு.சங்கவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism