Published:Updated:

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்

பளீர் பற்கள் ஆரோக்கியத்தின் அடையாளம்!

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்

பளீர் பற்கள் ஆரோக்கியத்தின் அடையாளம்!

Published:Updated:
##~##

 ற்களின் ஆரோக்கியம் என்பது, பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே பராமரிக்கப்பட வேண்டிய விஷயம். உங்கள் வீட்டு குட்டீஸ்களின் 'பல் ஆரோக்கியம்’ மேம்படுவதற்கான விஷயங்களை இங்கே கற்றுத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தை நல நிபுணர் பாலசுப்ரமணியம்.

1. குழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்

2. குழந்தை தினமும் காலை எழுந்ததும் மெல்லிய மஸ்லின் துணியைத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை மெதுவாக சுத்தம் செய்துவிட வேண்டும். முடிந்தால் இரவு பால் குடித்ததும் இதேபோல செய்து, தூங்க வைக்கலாம். ஒரு வயது வரை இதைத் தொடர வேண்டும்.

3. பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் தருணங்களில் ஈறுகள் நமநமவென்று இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். இது சகஜம்தான். எனவே குழப்பம், அச்சமின்றி மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

4. பற்கள் வளர ஆரம்பிக்கும்போது கேரட், ஆப்பிள் போன்றவற்றை துண்டுகளாக்கி கடித்து சாப்பிட பழக்க, அது பற்களை வலுவாக்கும். சிறு வயதிலிருந்து கால்சியம் நிறைந்த பால், தயிர், பாலாடைக்கட்டி மற்றும் சீஸ் உள்ளிட்ட உணவுகளை அளியுங்கள்.

5. ஒரு வயதாகும்போது... ப்ளூரைட் குறைந்த பற்பசையை உபயோகிக்க ஆரம்பிக்கலாம். மென்மையான பிரஷ் அல்லது ஃபிங்கர் பிரஷ் (Finger Brush) கொண்டு தினமும் இருமுறை பல் துலக்கிவிட வேண்டும். வாய் கொப்பளிக்கவும் பழக்க வேண்டும். பிரஷ்ஷை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றத் தவறாதீர்கள். குழந்தைகளுக்கு விருப்பமான நிறத்தில், பிடித்தமான கார்ட்டூன் பொம்மைகளுடன் கூடிய டூத் பிரஷ் வாங்கும்போது, விரும்பி பல் துலக்க ஆரம்பிப்பார்கள்.

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்

6. மேல் பற்கள், கீழ்ப் பற்கள், முன் பற்கள், கடைவாய் பற்கள், பற்களின் உள், வெளி சுற்றுப்பகுதி என்று அனைத்துப் பகுதிகளையும் பிரஷ் கொண்டு சுத்தப்படுத்த குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள். குறைந்தது 10 வயது வரையிலும் தாயின் கண்காணிப்பில் பல் துலக்குவது நல்லது.

7. காலை, இரவு என்று இரண்டு முறை பல் துலக்குவதை பெரியவர்களும் கடைபிடித்து, குழந்தைக்கும் கற்றுக்கொடுங்கள். இரவில் பல் துலக்காமல் படுத்தால், பற்களில் படிந்திருக்கும் உணவுத் துணுக்குகள் பற்சொத்தையை ஏற்படுத்தும் என்பதை புரிய வையுங்கள்.

8. பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு வகைகள் மற்றும் கேஸ் நிறைந்த சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்குப் பழக்காமல் இருப்பதே நல்லது. இவை பற்களில் படியும்போது, வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் இனிப்புகளைச் சிதைக்க ஆரம்பிக்கும். அப்போது வெளிப்படும் ஆசிட், பற்களின் எனாமலை பாதித்து, பற்களின் ஆரோக்கியத்தை சுத்தமாகக் கெடுத்துவிடும்.

9. சாக்லேட், கூல் டிரிங்க்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகள் என்றால், அவற்றை சாப்பிட்டு முடித்ததும் உடனடியாக பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை கட்டாயமாக்குங்கள். நாக்கு சுத்தப்படுத்துவதும் மிக முக்கியமானது. சாப்பாட்டின் ருசியை நமக்கு உணர வைக்கிற மிக முக்கியமான காரணி, சுவை மொட்டுக்களே. எனவே, நாக்கை தினம் ஒரு முறை 'டங்க் க்ளீனர்' கொண்டு மென்மையாக சுத்தப்படுத்துங்கள்.

10. குழந்தையை வருடம் ஒரு முறை பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, பற்களின் ஆரோக்கியத்தை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். மருத்துவர் 'ஃப்ளோரைட் வார்னிஷ்’ எனப்படும் லிக்யூட் மூலம் சின்ன பிரஷ் கொண்டு குழந்தையின் பற்களைத் துடைத்து சுத்தம் செய்துவிடுவார். ஒருவேளை பற்சொத்தை இருந்தால், அதற்கான சிகிச்சையை அளிப்பார்.

11. விளையாடும்போது குழந்தைகள், பல்லை உடைத்துக் கொள்வது சகஜம்தான். அப்படியான சந்தர்ப்பங்களில் உடனே உடைந்த பல்லை எடுத்து பாலில் போட்டுவைத்து, தாமதிக்காமல் பல் மருத்துவரிடம் செல்லுங்கள். நிச்சயம் அந்த பல்லை உடைந்த பல்லோடு ஒட்ட வைத்துவிட முடியும். இது எல்லா வயதினருக்கும் பொருந்தும்.

12. பல்லில் கறுப்பாக ஏதாவது இருந்தால், அதுதான் பற்சொத்தைக்கான முதல் அறிகுறி. ஆரம்ப கட்டத்திலேயே சொத்தையை சுத்தம் செய்து, அந்தப் பகுதியை அடைத்துவிட வேண்டும். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். இல்லையென்றால் சொத்தை, பல்லில் ஆழச்சென்று வேரை பாதித்து பல்லையே எடுக்க வேண்டி வரும்.

- ம.பிரியதர்ஷினி

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, பீரகா வெங்கடேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism