Published:Updated:

உங்கள் தட்டில் உணவா... விஷமா? - 17

ஆரோக்கியம் பேசும் அலர்ட் தொடர்டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்ஃபுட்ஸ்

உங்கள் தட்டில் உணவா... விஷமா? - 17

ஆரோக்கியம் பேசும் அலர்ட் தொடர்டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்ஃபுட்ஸ்

Published:Updated:

அதீத கோபம்... அபரிமித சுறுசுறுப்பு...

இது, கோலா கொடுமையாக இருக்கலாம்!

##~##

 கோலா பானங்களில் சீனிக்குப் பதிலாகச் சேர்க்கப்படும் சோளச் சர்க்கரை பற்றி சென்ற அத்தியாயத்தில் விவாதித்தோம். இதன் பாதிப்பை தற்போது உலகளவில் உணர ஆரம்பித்துவிட்டார்கள். நம் நாட்டில் சர்க்கரை நோய் அதிகமாவதற்கு வெள்ளை அரிசி முக்கியக் காரணம் என்றால், அமெரிக்காவில் தற்போது அதிகரித்து வரும் சர்க்கரை நோய்க்கு கோலாவின் சோளச் சர்க்கரையே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். சர்க்கரை நோய் தவிர, உடல் பருமன், பல் சொத்தை, கவுட் (Gout) என்கிற மூட்டுவலி நோய், சிறுநீரக பிரச்னைகள், குடல்புற்றுநோய் போன்ற வியாதிகளும் இதனால் ஏற்படலாம் என்ற கருத்தும் உள்ளது.

அடுத்து, கோலா பானங்களில் இடம்பெறும் இன்னொரு பொருள்... ஃபாஸ்போரிக் அமிலம். குளிர்பானங்களின் 'சுரீர்’ சுவைக்காக இது சேர்க்கப்படுகிறது. ஏற்கெனவே கார்பன் டை ஆக்ஸைடு கலப்பதால் அமிலமாக உள்ள கோலாவில், ஃபாஸ்போரிக் அமிலமும் சற்று சிட்ரிக் அமிலமும் சேர்ந்து கொள்வதால், அமிலத்தன்மை மிகவும் அதிகரிக்கிறது. இந்த கூடுதல் அமிலத் தன்மைதான் பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது. பல் சொத்தை, குடல் புண் தவிர, எலும்புகளில் உள்ள கால்சியம் என்ற சுண்ணாம்புக் கலவையை சிறிது சிறிதாகக் கரைக்கிறது. இதனால் எலும்புகள் பலவீனமாகி (Osteoporosis) எளிதில் உடைந்துவிடுகின்றன.

தற்போது உலகளவில் பெருகிவரும் இந்த எலும்புச் சிதைவு நோய், வயதானவர்களையும் பெண்களையும் தவிர, இளம் வயதினரையும் பாதிக்க ஆரம்பித்திருப்பது கவலைப்பட வேண்டிய விஷயம். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இப்போது எல்லா ஊர்களிலும் அதிகரித்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்தானே!

உங்கள் தட்டில் உணவா... விஷமா? - 17

குளிர்பானங்களில் சுவைக்காகச் சேர்க்கப்படும் ஃபாஸ்போரிக் அமிலம்போல, வேறு சில பொருட்கள் அதன் 'டிரேட்மார்க்’ நிறத்துக்கும், சில பொருட்கள் குளிர்பானம் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கும் (preservative) சேர்க்கப்படுகின்றன. முதலில் 'கேராமல்’ பற்றிப் பார்ப்போம். ஐஸ்கிரீம் போன்ற பண்டங்களில் கேராமல் இருப்பது உங்களுக்குத் தெரியும். ஒரிஜினல் கேராமல், சீனிப்பாகினை சுண்டக் காய்ச்சிய பின் கிடைக்கும் பிரவுன் நிறப் பொருள். இது அப்படியன்றும் கெடுதல் இல்லை. ஆனால், நாம்தான் எந்தப் பொருளையும் இயற்கையாக இருக்கவிடுவதில்லையே? சும்மா கிடந்த சீனிப்பாகில்... அமோனியா, சல்ஃபைட் என வேதிப்பொருட்களைக் கலந்து, அதிக வெப்பத்திலும் அதிக அழுத்தத்திலும் காய்ச்சி, அதன் முடிவில் கிடைக்கும் அழகான பிரவுன் பாகுதான், இப்போது கிடைக்கும் கேராமல். இதில்தான் இருக்கிறது பிரச்னை.

இப்படி காய்ச்சும்போது, எம்.ஐ. என்றழைக்கப்படும் இரண்டு புதிய வேதிப்பொருட்கள் உருவாகின்றன. 2 - மீதைல்இமிடஸால் (2 - Methylimidazole) மற்றும் 4 - மீதைல்இமிடஸால் (4 - Methylimidazole) ஆகிய பொருட்கள்தான் அவை. இவற்றில், கோலா பானங்களில் சேரும் பொருள் 4 எம்.ஐ. இந்த 4 எம்.ஐ, உடற்செல் கருவில் உள்ள டி.என்.ஏ-வை பாதிப்பதாக பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இதனால் நுரையீரல், ஈரல், தைராய்டு போன்ற உறுப்புகளில் புற்றுநோயைத் தூண்டுவதாகவும், ரத்தப் புற்றுநோய் (Leukemia)  வருவதற்கு வாய்ப்பு உண்டு என்றும், மலட்டுத் தன்மையும், ஆண்மைக் குறைவும் ஏற்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

உணவுப் பண்டங்களில் 4 எம்.ஐ என்பதன் அளவானது, 29 மைக்ரோ கிராம் என்கிற எடைக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பது சட்டம். ஆனால், கோலா பானங்களில் 140 மைக்ரோ கிராம் 4 எம்.ஐ இருப்பதால், கலிஃபோர்னியாவில் அதை தடை செய்துவிட்டார்கள். கோலா நிறுவனங்கள் கொஞ்சம் இறங்கி வந்து, பிரவுன் கலர் கெட்டுப்போகாமல் - அதேநேரம் புற்றுத்தன்மையில்லாத கேராமல் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன.

கவர்ச்சியான கலர் வேண்டும் என் பதற்காக இன்றைய உணவுப் பண்டங்களில் தவறாமல் சேர்க்கப்படும் 9 வகையான 'அனுமதிக்கப்பட்ட’ நிறங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். இவற்றில் 3 நிறங்கள்தான் பெரும்பாலும் உபயோகத்தில் உள்ளன. சிவப்பு - 40(Red Dye 40), மஞ்சள் - 5 (Yellow 5) மற்றும் மஞ்சள் - 6 (Yellow 6). இவை சேராத உணவுப் பண்டங்கள் இன்று மார்க்கெட்டில் இல்லை. பலவகையான குளிர்பானங்களிலும், ஐஸ்கிரீம், சாக்லேட், மிட்டாய்கள், சாஸ், ஜாம், ரொட்டி முதலிய பேக்கரி பதார்த்தங்கள் அனைத்திலும் இவை உண்டு. சிவப்பாகவோ அல்லது மஞ்சளாகவோ இருக்க வேண்டுமென்பதில்லை - இரண்டும் கலந்த தங்க நிறத்திலோ, பிரவுன் நிறத்திலோ இருக்கலாம். சரி, இவற்றால் என்ன கெடுதல்?

இன்றைய குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் புதிய நோய் ஏ.டி.ஹெச்.டி (ADHD - Attention Deficit Hyperactivity Disorder). அதாவது, 'கவனக் குறைவு - அதீத உடல் இயக்க நோய்’. பள்ளிக்குச் செல்லும் சுமார் 5 முதல் 10 சதவிகிதம் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தக் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள். புத்தகத்தை எதிரில் வைத்துக்கொண்டு கனவுலகில் மிதப்பார்கள். ஆனால், மக்கு அல்ல - பல விஷயங்களில் அதிபுத்திசாலியாக இருப்பார்கள். உடல் அளவில் அளவுக்கு மீறிய சுறுசுறுப்பும் ஓட்டமுமாக (Hyperkinetic)  இருப்பார்கள். திடீர் திடீரென கோபதாபங்களுக்கு உட்பட்டு, முரட்டுத்தனமான காரியங்களைச் செய்வார்கள். பள்ளியில் ஆசிரியைதான் இதை முதலில் கண்டுபிடித்து பெற்றோருக்குத் தெரிவிப்பார். பெற்றோர்கள் இதை ஒரு வியாதி என்றே நம்ப மறுப்பார்கள். மேற்கொண்டு, 'என் புள்ள ஒரு ஹைபர்’ என்று சொல்வதை இப்போது சில பெற்றோர் பெருமையாகவும் நினைக்கின்றனர். ஆனால், குழந்தைகளைப் பாதிக்கும் மனநல நோய்களில் இதுதான் முக்கியமானது.

உங்கள் தட்டில் உணவா... விஷமா? - 17

பெருகி வரும் இந்தப் புதிய நோயின் மூலக்காரணம் என்ன என்று ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியான உண்மை கிடைத்தது. குழந்தைகள் இப்போதெல்லாம் பாலை உட்கொள்ளுவதற்குப் பதிலாக, கோலா போன்ற குளிர்பானங்களையே அதிகம் விரும்பிப் பருகுகிறார்கள். அதனால் உணவில் கிடைக்க வேண்டிய கால்சியம் ஊட்டச்சத்து குறைந்து, சோளச்சர்க்கரை, கேராமல், ரெட் டை - 4 போன்ற வேதிப்பொருட்களின் தூண்டுதலால் இந்த நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதே அந்தச் செய்தி. இதோடு கலர் கலரான மிட்டாய்களும் சேர்ந்துகொள்ளும்போது கேட்கவே வேண்டாம். இந்த வியாதிக்கு 'ரிட்டாலின்’ என்கிற மருந்து இருந்தாலும், குளிர்பானங்களையும் இனிப்புப் பண்டங்களையும் விலக்கினாலே, அதிவிரைவில் அற்புத நிவாரணம் கிடைப்பதாகப் பெற்றோர்கள் பலரும் கூறுவதை இப்போது காண முடிகிறது.

அடுத்து - சோடியம் பென்ஸோயேட். கோலா பானம் கெட்டுப் போகாமலும், பூஞ்சைக்காளான் படியாமலும் பாதுகாப்பதற்காகச் சேர்க்கப்படும் சோடியம் பென்ஸோயேட், நாளாக ஆக, காலாவதி தேதிக்கு முன்னதாகவே பென்ஸாயிக் அமிலமாக மாறிவிடுகிறது. இதில் உள்ள பென்ஸீன் மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. ஆப்பிள், பெர்ரீஸ், பிளம்ஸ் போன்ற பழங்களில் சிறிதளவு பென்ஸீன் இயற்கையாகவே உண்டு. நாம் குடிக்கும் தண்ணீரில்கூட சிறிதளவு இருக்கும். குடிதண்ணீரில் பென்ஸீன் அளவு 5 ppb என்கிற அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், கோலா பானங்களில் 539 ppb என்று அமெரிக்க பரிசோதனைக் கூடங்கள் தெரிவிக்கின்றன.

பென்ஸீன் மனித உடலில் ஈரலைத் தாக்கி 'சிர்ரோசிஸ்’ என்ற வியாதியையும், மூளையைத் தாக்கி 'பார்க்கின்ஸன்’ என்ற வியாதியையும், வேறு சில புற்றுநோய்களையும் உண்டாக்க முடியும். வழக்கம்போல் இந்தக் கருத்துக்களை மறுத்த குளிர்பான நிறுவனங்கள், தற்போது மாற்று பாதுகாப்புப் பொருளை உற்பத்தி செய்வதாக உறுதியளித்திருக்கின்றன.

புரோமின் கலந்த தாவர எண்ணெய், குளிர்பானங்களில் ஸ்திரத் தன்மை கெடாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்படுகிறது. இதில் உள்ள 'புரோமின்’ மூளையைத் தாக்கி, ஸ்கிட்ஸோஃப்ரேனியா போன்ற மனநல வியாதிகளையும், தூக்கக் கோளாறுகளையும் உண்டாக்க முடியும் என்று உலகெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பல நாடுகள் இதற்குத் தடையும் விதித்தன. ஆனாலும் பல குளிர்பானங்களில் இது இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

மலைப்பாக இருக்கிறதா? கொஞ்சம் பொறுங்கள்... கோகோ இலைகளைப் பற்றியும், கோலா கொட்டைகளைப் பற்றியும் அடுத்த இதழில் பேசிய பிறகு, உங்கள் வீட்டின் ஃப்ரிட்ஜில் நிரந்தரமாக குடி வைக்கும் குளிர்பானங்கள் பற்றி நல்லதொரு முடிவுக்கு வரலாம்!

- நலம் வரும்...