Published:Updated:

கார்மென்ட் பிஸினஸ்... கைகொடுக்குமா?

வாருங்கள்... வழிகாட்டுகிறோம்! பிஸினஸ் கேள்வி - பதில்ஹெல்ப் லைன்

கார்மென்ட் பிஸினஸ்... கைகொடுக்குமா?

வாருங்கள்... வழிகாட்டுகிறோம்! பிஸினஸ் கேள்வி - பதில்ஹெல்ப் லைன்

Published:Updated:
##~##

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி.ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்...

''நான் ப்ளஸ் டூ படித்துள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளாக தையல் கடை வைத்து, பிளவுஸ், சுடிதார் தைத்துக் கொடுக்கிறேன். என் கணவர் ஜவுளிக் கடை ஒன்றில் ரெடிமேட் சட்டை தைத்துக் கொடுக்கிறார். எங்கள் ஊரில் பல பெண்கள் தையல் மெஷின் வைத்து இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்தி, கார்மென்ட்களில் ஆர்டர் எடுத்து ஆடைகள் தைத்துக் கொடுக்க, எனக்கு வழிகாட்டுங்களேன்...''

- எஸ்.மகேஸ்வரி, முக்கூடல், திருநெல்வேலி

''ரெடிமேட் ஆடைகள் முன்பு மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில்தான் அதிகமாக உற்பத்தியானது. பிறகு... ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர் போன்ற ஊர்களிலும் இந்தத் தொழிலில் பரவ... ஏற்றுமதி அளவுக்கு இங்கெல்லாம் உற்பத்தி பெருகியது. இப்போது இன்னும் சில கிராமங்களும் இந்தப் பட்டியலில் இணைந்து, ஜோராக ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

கார்மென்ட் பிஸினஸ்... கைகொடுக்குமா?

ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரம் கிராமத்தில் ஆரம்பத்தில் ஒரு சிலர் நைட்டி தைத்து விற்க ஆரம்பித்தனர். அதில் கிடைத்த லாபம், கிராமத்தின் பெரும்பாலான குடும்பங்களையும் தையல் தொழிலில் இறங்க வைக்க, இன்று அங்கு பல கார்மென்ட் தொழிற்சாலைகள் உருவாகும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. மிகப்பெரிய பிராண்டட் நைட்டிகள்கூட இங்கிருந்து தைத்து அனுப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, மணப்பாறை அருகில் உள்ள புத்தாநத்தம் கிராமத்தில், பல நூறு கார்மென்ட் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மேட்டுப்பாளையம் அருகில் கூட ஒரு கிராமம் ரெடிமேட் ஆடைகளைத் தயார் செய்து தருகிறது.

சுடிதார் டாப்ஸ், பெட்டிகோட், ஸ்கர்ட், குழந்தைகள் துணி என பலதரப்பட்ட ரெடிமேட் ஆடைகளை அதிக அளவில் உற்பத்தி செய்து, குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது, உங்கள் ஊருக்கு அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புதியம்புத்தூர். இது திருப்பூருக்கு இணையாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆடைகளைத் தயார் செய்து... அனைத்து சிறிய, பெரிய ஜவுளிக் கடைகளுக்கும் அளிக்கிறது. ஒரு தனிமனிதரால் 1967-ல் ஒரே ஒரு

கார்மென்ட் பிஸினஸ்... கைகொடுக்குமா?

தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கிராமத்தில், இன்று முந்நூறுக்கும் மேலான தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டுள்ளன. இவர்கள் தங்கள் மூலப்பொருட்களை வட மாநிலங்களில் இருந்து நேரடியாக பெற்று, லேட்டஸ்ட் ஸ்டைலில் தைத்துத் தருகின்றனர். இங்கு ஒருமுறை சென்று, சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து வருவது, நீங்கள் தொடங்கப் போகும் தொழிலுக்கான வழிகாட்டலாக இருக்கும். மேலும் அவர்களிடம், அவர்களின் எண்ணிக்கை திறனுக்கும் அதிகமான ஆர்டர்கள் வரும் சமயங்களில், அதை உங்களுக்கு மாற்றித் தருமாறு கோரிக்கை வைக்கலாம். அதற்கு முன், கார்மென்ட் தொழிலை முன்னெடுக்க நீங்கள் செய்ய வேண்டியவற்றைப் பார்ப்போம்.

உங்களிடம் உள்ள சாதாரண தையல் இயந்திரங்கள், கார்மென்ட் தொழிலுக்கு ஈடுகொடுக்காது. எனவே, அனைத்தும் லூப் ஸ்டிட்சிங் இயந்திரங்களாக இருக்க வேண்டியது அவசியம். அவ்வகை இயந்திரங்கள் ஒன்றின் விலை 12,000 முதல் 18,000 ரூபாய் வரை இருக்கும். மொத்தம் 10 தையல் இயந்திரங்கள் இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஓவர்லாக் இயந்திரமும் அவசியம். அதன் விலை 20,000 ரூபாய் வரை இருக்கும். கட்டிங் டேபிள், ஸ்டூல் போன்ற அனைத்து உபகரணங்களையும் வைத்திருக்க வேண்டும். இவற்றுடன் தரமான, வேகமான வேலையாட்களும் இருந்தால், தைரியமாக ஆர்டர் கேட்டுச் செல்லலாம்.

குறிப்பிட்ட கெடுவுக்குள், பிழையில்லாத நேர்த்தியான தையல்களுடன் ஆடைகளை டெலிவரி கொடுத்தால், அடுத்தடுத்த வாய்ப்புகள் விரியும். தரம் முக்கியம் என்பதால், ஆடையில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதற்கு பணம் பிடித்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்டர்கள் சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் மிகக் குறைவாகவும் கிடைக்கலாம் என்பதால், அதை சமாளிக்க தொழிற்சாலைகளை மட்டுமே நம்பியிருக்காமல், மக்களிடமும் நேரடியாக ஆடைகள் பெற்று தைத்துக் கொடுக்கலாம்.

நீங்கள் தொழில் தெரிந்தவராக உள்ளதால், தைரியமாக திருப்பூர் மற்றும் கரூரில் இருந்து குறைந்த விலையில் தரமான தையல் இயந்திரங்களை வாங்கி தொழிலை ஆரம்பியுங்கள். தையல் தொழிற்சாலை அமைக்க உங்களுக்கு மானியத்துடன் வங்கிக்கடன் கிடைக்கும். வேலையாட்களுக்கான பயிற்சியை சில நிறுவனங்களிடம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை அணுகவும்.''

படங்கள்: வீ.நாகமணி. வீ.சக்தி அருணகிரி

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி... 'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’, கேள்வி - பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002