##~##

ல்ல உள்ளம் படைத்தவர்களை, மனதளவில்கூட யாராவது துன்பப்படுத்திவிட்டால்... அவர்கள் துயரப்பட காரணமாக எது இருந்ததோ, அது விளங்காமலே போய்விடும். ஆனாலும், செய்த தவறுக்கு வருந்தி அவர்களை மீண்டும் அணுகினால், பட்ட துயரத்தை மனதில் வைத்துக் கொள்ளாமல் நல்லதே நடக்க உதவுவார்கள்... நல்ல உள்ளம் கொண்ட அந்த ஆத்மாக்கள். அப்படி தங்கள் எண்ணத்தால், செய்கையால் உயர்ந்த நிலை கொண்டவர்களை இந்த உலகமும் உயர்ந்த நிலையில் வைத்து வணங்கத் தவறுவதில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக நிற்கிறாள்... மதுரை மாவட்டம், மேலூர் அருகில் இருக்கிற வெள்ளலூர் கிராமத்தில் அருளாட்சி செய்து வரும் ஏழை காத்த அம்மன்! ஒரு காலத்தில் இல்லத்தரசியாக இருந்த இவள், இன்று ஊர், உலகத்தால் சாமியாக பூஜிக்கப்படுவதற்கான காரணம்... இவளுடைய பெயரிலேயே இருக்கிறது.

சோழர்களின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டு நிர்வாகத்துக்காக ஆங்காங்கே படைகளை நிறுத்தும் வழக்கம் இருந்தது. அப்படி இலங்கை கடற்கொள்ளையர்களை சமாளிப்பதற்காகவும் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் சிவகங்கை அருகே உள்ள வளமான இந்தப் பூமியில் நிறுத்தப்பட்ட வீரர்களில், 'அம்பலக்காரர்கள்' என்பவர்களும் அடக்கம். 'வெள்ளலூர் நாடு' என்று அழைக்கப்பட்ட அந்தப் பகுதியில், அவர்களின் நிர்வாகம்தான், நாடு சுதந்திரம் அடைந்த காலம் வரை. அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவள்தான் ஏழை காத்த அம்மன். அம்பலக்காரர்களில் 'கரைகாரர்கள்' என்று அழைக்கப்படும் பதினோரு நபர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது கோயில். இங்கே குடிகொண்டிருக்கும் தங்கள் வீட்டுப் பெண்ணின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தார்... அவர்களில் ஒருவரான பெரியாம்பிள்ளை அம்பலக்காரர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதோ எந்தன் தெய்வம்! - 8

''சுமார் 850 ஆண்டுகளுக்கு முன் இந்த வெள்ளலூரில் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் இரண்டு சகோதரிகள் பிறந்தார்கள். ஆளானதும் தங்கையை ஒரு சாதாரண குடும்பத்திலும், அக்காவை வசதியான குடும்பத்திலும் கட்டிக் கொடுத்தார்கள். ஏழையான தங்கைக்கு ஆண்டுக்கொரு குழந்தையாக பிறந்து கொண்டே இருந்தது. குழந்தைகள் இல்லாத அக்கா... அடிக்கடி தங்கையின் வீட்டுக்கு வந்து, அவளுடைய குழந்தைகளை ஆசைதீர கொஞ்சுவாள். அடுத்தடுத்து ஏழு குழந்தைகளுக்கு தாயானாள் தங்கை. ஆனால், அக்காவுக்கு குழந்தை பிறக்கவே இல்லை. இதற்காக வருத்தப்படாத அக்கா, தங்கையின் குழந்தைகளையே தன் சொந்த பிள்ளைகள் போலவே கருதி, அவர்களுக்கு எல்லாமும் செய்து ஆசையுடன் வளர்த்தாள்.

இந்நிலையில், தங்கையின் மனதில் நஞ்சை விதைக்க ஆரம்பித்தனர் ஊர்க்காரர்கள் சிலர். 'இப்படியே தொடர்ந்தால், அந்தக் குழந்தைகள் உன் அக்காவைத்தான் அம்மா என்று கொண்டாடுவார்கள்... உன்னை மதிக்க மாட்டார்கள். உன் மேல் அவர்களுக்கு பாசமே இருக்காது’ என்றெல்லாம் பேச... தங்கையின் மனம் மாறத் தொடங்கியது. அக்கா தன் வீட்டுக்கு வருவதையோ... குழந்தைகளிடம் பழகுவதையோ வெறுக்க ஆரம்பித்தாள். அக்காவிடமும் வெறுப்பைக் காட்டினாள். ஆனால், அதைஎல்லாம் பொருட்படுத்தாமல் குழந்தைகளைத் தேடி அக்கா வந்து கொண்டுதான் இருந்தாள்.

நாளாக ஆக, வீட்டுக்கு அக்கா வரும் நேரம், குழந்தைகளை எங்காவது பதுக்கி வைத்துவிட்டு, 'குழந்தைகள் வீட்டில் இல்லை’ என்று பொய் சொல்லி திருப்பி அனுப்பத் தொடங்கினாள். அப்படி ஒருமுறை குழந்தைகளைத் தேடி வீட்டுக்கு வரும்போது, கோழி அடைக்கும் பஞ்சாரத்தில் குழந்தைகளைப் போட்டு அடைத்து வைத்துவிட்டு, 'குழந்தைகள் இல்லை' என்று சொன்னாள் தங்கை. ஆனால், குழந்தைகள் பஞ்சாரத்தில் இருப்பதைக் கண்டுவிட்ட அக்கா... மனம் நொந்தவளாக, 'குழந்தைகள் இங்கு இல்லை என்றால், இல்லாமலே போகட்டும்!’ என்று சாபமாகச் சொல்லிவிட்டு வீடு திரும்பிவிட்டாள்.

இதோ எந்தன் தெய்வம்! - 8

அதன் பிறகு, ஓடிப்போய் பஞ்சாரத்தை திறந்தாள்... ஏழு குழந்தைளும் கல்லாகி கிடந்தார்கள். தங்கை போட்ட அலறலில் ஊரே திரண்டது. நடந்த விஷயத்தை அவள் சொல்ல... 'நல்ல மனசுக்காரி மனம் நோக நடந்தது உன் தப்புத்தானே?’ என்று கடிந்த ஊர்க்காரர்கள், 'அந்த உத்தமியிடம் போய் மன்னிப்புக் கேட்டு, உன் குழந்தைகளை உயிர்ப்பித்து தரச்சொல்’ என்று உத்தரவிட, அவளும் அக்காவைத் தேடி ஓடி காலில் விழுந்து அவ்வாறே செய்தாள். வாரி அணைத்துக்கொண்ட அக்கா, அருகிலிருந்த தீர்த்தத்தை எடுத்து தெளித்து ஏழு குழந்தைகளையும் சிலிர்த்தெழச் செய்தாள். அதற்கு பிறகு பலகாலம் தங்கை குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து மறைந்தாள் அக்கா. அவளின் மாண்பு கண்டு அவளை தெய்வமாக வணங்க ஆரம்பித்தார்கள் எங்கள் வம்சத்தார்... அதை நாங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சொன்னார் பெரியாம்பிள்ளை அம்பலம்.

இதோ எந்தன் தெய்வம்! - 8

அக்கா வாழ்ந்த இடத்தில் சிறிய கல்லாக வழிபட ஆரம்பித்து, இன்று மிகப்பெரிய கோயில் எழும்பியிருக்கிறது. ஆளுயர கல் சிற்பமாக இருக்கிறாள் ஏழையும் காத்தவள். இங்கே புரட்டாசியில் நடக்கும் மது எடுப்பு திருவிழா, தென் மாவட்டத்தில் மிகப்பிரசித்தம்.

''ஆவணி கடைசி செவ்வாய் அல்லது புரட்டாசி முதல் செவ்வாயில் நாள் குறித்து, காப்பு கட்டி தொடங்கும் திருவிழா, பதினைந்து நாட்கள் நடக்கும். எங்கள் வீட்டு சிறு பெண் பிள்ளைகள் ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, காப்புகட்டி, பதினைந்து நாட்களுக்கு கோயிலிலேயே தங்குவார்கள். அந்தச் சமயத்தில் எங்களாலும் மற்ற மக்களாலும் அவர்கள் அம்மனாகவே வணங்கப்படுவார்கள். பதினைந்தாம் நாள் அந்தக் குழந்தைகளின் தலைமையில் லட்சக்கணக்கானோர் திரண்டு மது (பால் கரகம்) எடுத்து வந்து ஏழை காத்த அம்மனின் அருளைப் பெறுவார்கள்!'' என்கிறார் இன்னொரு கரைகாரரான முத்தையா அம்பலம்.

''குழந்தைகள் சம்பந்தமாக இங்கு வந்து எது வேண்டினாலும் அது உடனே நடக்கும். பெண்கள் தங்கள் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் தயங்காமல் வேண்டிக் கொள்ளலாம். அத்தனையும் நிச்சயமாக நடக்கும். வெள்ளி, செவ்வாய் தினங்களில் வழிபடுவது சிறப்பு!'' என்கிறார் ஆலயத்தின் அர்ச்சகரான சர்வசாதகம் கணேச குருக்கள்.

ஆம்... அனுபவித்தவளுக்கு மற்றவர்களின் வலியும் புரியும், அவற்றை விரட்டவும் தெரியும்தானே?!  

- தெய்வங்கள் பேசும்...

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.காளிமுத்து

வழிகாட்டி

மேலூரிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் பத்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது கோட்டநத்தம்பட்டி. இங்கிருந்து வடக்கே இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது வெள்ளலூர். மேலூரிலிருந்து நகரப்பேருந்து வசதியும், கோட்டநத்தம்பட்டி, நாயக்காரன்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஆட்டோ வசதியும் இருக்கிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரை கோயில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் கட்டாயமாக திறந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அர்ச்சனை பொருட்கள் மேலூரில் வாங்கிக்கொள்வது நல்லது. கோயிலில் தொலைபேசி வசதி இல்லை. ஒருநாள் பயணமாக வந்தால்... சிவகங்கை அருகே உள்ள வெட்டுடையார்காளி கோயிலுக்கும் செல்ல முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism