Published:Updated:

“இது, வள்ளலாருக்குக் கிடைத்த வெற்றி!”

அரசாங்கத்தின் ‘கொல்’கையை மாற்றிய அசாதாரண பெண்மணி!ஃபீலிங்ஸ்

“இது, வள்ளலாருக்குக் கிடைத்த வெற்றி!”

அரசாங்கத்தின் ‘கொல்’கையை மாற்றிய அசாதாரண பெண்மணி!ஃபீலிங்ஸ்

Published:Updated:
##~##

னிதர்களுக்கே சரிவர நியாயம் கிடைக்காத இந்த உலகில், விலங்குகளுக்கு ஆதரவாக அரசாங்கத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மற்றும் கடிதப் போராட்டம் நடத்தி, முடிவில் வெற்றியும் கண்டிருக்கிறார்... மதுரை, டி.ஆர்.ஓ. காலனி, ராமலட்சுமி!

''அசைவம் சாப்பிடுபவளாகத்தான் நானும் இருந்தேன். கல்யாணத்துக்குப் பிறகு, கணவர் மூலமாக 'வள்ளலாரின் ஜீவகாருண்யமே இறை வீட்டின் திறவுகோல்’ என்பது புரிந்து, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். பிறகு, வள்ளலாரின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு 'கருணை சபை சாலை’ என்கிற அறக்கட்டளையை நடத்த ஆரம்பித்துவிட்டேன்.

எல்லா மதங்களுமே உயிர்களிடத்தில் அன்பு செலுத்துமாறு போதிக்கின்றவே தவிர, உயிர்களை கொல்லச் சொல்லவில்லை. இதை வலியுறுத்தி, 'இறைச்சி உணவு... இறைவனுக்கு சம்மதமா?’ எனும் நூலை 2011-ல் வெளியிட்டேன். தெரிந்தவர்களிடம் கொஞ்சம் கொஞ்ச மாக எடுத்துச் சொன்னேன். ஏற்றுக் கொண்டவர்களைவிட, சண்டைக்கு வந்தவர்கள்தான் அதிகம். அப்போதுதான் தனி மனிதர்களின் உணவுப் பழக்கத்தில் தலையிடும் உரிமை நமக்கு இல்லை என்பது புரிந்தது. அதனால், முதலில் அரசாங்கத்தின் கவனத்தை இந்த விஷயத்தில் ஈர்க்க முடிவெடுத்தேன்'' என்று சொல்லும் ராம லட்சுமியின் பார்வையில்... அரசாங்கத்தின் சார்பில் நடத்தப்படும் பல்வேறு விழாக்கள், கூட்டங்கள், கருத்தரங்குகள் நிழலாடியிருக்கின்றன!

 “இது, வள்ளலாருக்குக் கிடைத்த வெற்றி!”

''இதுபோன்ற நிகழ்வுகளில் அசைவ விருந்து கொடுப்பது வழக்கமாகவே இருக்கிறது. இதெல்லாம் மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுவது. எந்த அரசு விழாவாக இருந்தாலும், அரசியல் சட்டத்தை மதித்து நடத்தப்பட வேண்டும். இந்திய அரசமைப்பு சட்டம் உறுப்பு 51 (ஏ) (ஜி)-ல், 'உயிரினங்களில் பரிவு காட்டிடல் வேண்டும். இது இந்திய மக்களின் கடமையாகும்’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவரை மதித்து உயரமான சிலையெல்லாம் வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தமிழ்நாட்டில், அவருடைய கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகிய குறள்களின் அர்த்தங்களுக்கு மட்டும் அரசாங்கமே மரியாதை கொடுப்பதில்லை. 2010-ல் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில்கூட விருந்து என்கிற பெயரில் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டன.

இதையெல்லாம் யோசித்தபோது என் மனது வெகுவாக பாதிக்கப்பட்டது. எனக்குத் தெரிந்த வழக்கறிஞரிடம் ஆலோசித்தபோது, 'சட்டத்தைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. நீதிமன்றம் மூலம் அதை நிலைநிறுத்தலாம்' என்று தெம்பு தந்தார். உடனே, 'மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் ஓர் அரசு, தான் நடத்தும் நிகழ்ச்சிகளில் அசைவ உணவுகளை வழங்குவது தவறு. இனி, சைவ உணவுகள் மட்டுமே வழங்க உத்தரவிட வேண்டும்' என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு போட்டேன்.

என்னுடைய கோரிக்கையை நீதிபதி பாராட்டி னாலும், 'உணவு விஷயத்தில் அரசுக்கு எந்த உத்தரவும் போட முடியாது. மற்றவரின் உணவுப் பழக்க வழக்கத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை. வேண்டுமென்றால், அரசாங்கத்துக்கு கோரிக்கை வையுங்கள்' என்று சொல்லி, வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்'' என்று சொன்ன ராமலட்சுமி சோர்ந்துவிடவில்லை.

ஆம்... மனம் தளராமல், உச்ச நீதிமன்ற படியேறினார். அங்கேயும் மனு தள்ளுபடி செய்யப்பட, தனக்கு ஆதரவு தருவோரைத் திரட்டி, மதுரை காளவாசலில், கடந்த ஆண்டு அக்டோபர் ஏழு அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். கூடவே, கோரிக்கை மனுக்களை முதல்வரின் தனிப்பிரிவுக்கும் தொடர்ந்து அனுப்பினார். இந்நிலையில், தமிழ் வளர்ச்சித் துறையிலிருந்து, 'உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. அரசு விழாக்களில் சைவ உணவுகளே வழங்கப்பட்டு வருகின்றன’ என்று தற்போது ராமலட்சுமிக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது!

''இது, மனிதர்களை மட்டுமல்ல, விலங்கினங்களின் உயிர்களைக் காப்பாற்றுகிற பொறுப்பும் அரசுக்கு உள்ளது என்பதை பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான போராட்டமே. இது... வள்ளலார் மற்றும் திருவள்ளுவரின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி. ஒரு வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில்தான் சுற்றுச்சூழல் பாடத்தையே பள்ளிகளில் கொண்டு வந்தார்கள். அதுபோல உயிர்களிடத்தில் பரிவு காட்டல் என்கிற பாடத்தையும் கட்டாயமாக்க வேண்டும். இரக்க சிந்தனை, அடிப்படையிலிருந்தே வர வேண்டும்'' என ஆதங்கத்தோடு சொல்லும் ராமலட்சுமியின் முகத்தில், வெற்றிப் பெருமிதமும் கலந்தே இருந்தது!

அரசாங்கத்தின் 'கொல்'கைகளை மாற்றுவதென்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஆனாலும், தொடர் தோல்விகளைக் கண்டு துவளாமல் சாதித்துக் காட்டியுள்ள ராமலட்சுமிக்கு ஒரு ராயல் சல்யூட்!

- செ.சல்மான்  படம்: பா.காளிமுத்து

மாத சம்பளம் தரும் கணவன்!

நெல்லை மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த ராமலட்சுமி, எம்.ஏ. சோஷியாலஜி படித்துள்ளார். கணவர் இளங்கோ, அரசு ஊழியர். இவர்களுக்கு இரண்டு பெண் வாரிசுகள். ''வள்ளலாரின் சன்மார்க்கத்தில் நிறைந்த ஈடுபாடு. ஆன்மிக தத்துவங்களை ஆய்வு செய்து புத்தகங்கள், நோட்டீஸ்கள் அடித்து விநியோகம் செய்வது போன்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். இதற்காக யாரிடமும் எந்த உதவியையும் கேட்டதில்லை. எல்லாவற்றுக்கும் என் கணவரின் சம்பளத்திலிருந்துதான் செலவு செய்கிறோம்'' என்று சொல்லும் ராமலட்சுமி, அடுத்து சொன்ன விஷயம் 'அட' போட வைத்தது. அவர் சொன்னது -

''சட்டங்களைக் கடைபிடிக்க வேண்டுமென்பதில் என் கணவர் அதிக ஆர்வம் காட்டுவார். சமூக விஷயங்கள் அனைத்தையும் தினமும் நாங்கள் விவாதிப்போம். 'மனைவிக்கு, கணவன் மாத ஊதியம் வழங்க வேண்டும்' என்று சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவு போட்டது. இதை யார் பின்பற்றுகிறார்களோ தெரியாது. என் கணவர் மாதம்தோறும் எனக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளமாக தருகிறார்!''