Published:Updated:

காளான் வளர்க்கலாம்... காசு பாரக்கலாம்!

ஸ்டெப்ஸ்

காளான் வளர்க்கலாம்... காசு பாரக்கலாம்!

ஸ்டெப்ஸ்

Published:Updated:
##~##

 ''ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம்னு இல்லாம, நாலு பேருக்கு நம்மளால முடிஞ்ச நல்லதைச் செய்யும்போதுதான், எடுத்த ஜென்மம் அர்த்தப்படுதுங்க...'' என எனர்ஜியுடன் ஆரம்பிக்கும் சென்னைக்கு அருகிலுள்ள மாத்தூரைச் சேர்ந்த சரளா, காளான் வளர்ப்புத் தொழிலில் பலருக்கும் வழிகாட்டுவதோடு, அந்தத் தொழிலில் உதாரண வெற்றியாளராகவும் மின்னுகிறார்!

17 வயதிலேயே திருமணமாகிவிட்டவர் சரளா. இவருடைய குழந்தை, பத்து வயதில் நரம்பியல் பாதிப்பு காரணமாக இறந்தபோதுதான்... இவருக்கு வாழ்க்கை மீதான பார்வை மாறியது. தற்போது, ஒரு குழந்தையையும் தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது, இவரின் மற்றுமொரு சிறப்பு!

வீட்டுக்குப் பின்புறம் வெறும் 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சரளா ஆரம்பித்த காளான் வளர்ப்புத் தொழில், இன்று சென்னையின் ஸ்டார் ஓட்டல்கள் மற்றும் பெரிய பெரிய கடைகளில் விநியோகம் செய்யும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

''காளான் வளர்ப்பு பத்தி பேப்பர்லதான் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். காளானோட தேவை நமக்கு வருடம் முழுக்க இருக்கு. காளான்கள்ல உயர்தர புரோட்டீன் இருக்கறதோட... நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கு. கணவர் கொடுத்த ஊக்கத்துல குட்டியா ஒரு காளான் பண்ணை ஆரம்பிச்சேன். காளான் வளர்த்து லாபம் அடையறது மட்டும் நோக்கமில்ல. இதன் மூலமா பலருக் கும் வழிகாட்டவும் செய்யணும்தான் நெனச்சேன்.

காளான் வளர்க்கலாம்... காசு பாரக்கலாம்!

சிறையில் இருந்து விடுதலையாகி வர்றவங்களுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்ற எண்ணத்தோட, புழல் சிறைச்சாலையில் இருந்த சுமார் 125 கைதிகளுக்கு காளான் வளர்ப்புப் பயிற்சி கொடுத்தேன். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், வேலையில்லாதவர்கள்னு தேர்ந்தெடுத்து அவங்களும் சமூக அந்தஸ்துப் பெறணுங் கிற நோக்கத்தில் பயிற்சி கொடுத்தேன்'' என்று சொல்லும் சரளா... சிப்பிக் காளான், பால் காளான் என்ற இருவகை காளான்களை உற்பத்தி செய்வதற்கான வழிகாட்டல்களையும் வழங்கினார்.

''சுகாதாரமான, மாசு இல்லாத இடத்தைத் தேர்வு செய்யணும். வீட்டு மாடியிலயேகூட மினி பண்ணையை உருவாக்கலாம். குறைந்தபட்சம் 10-க்கு 10 சதுர அடி இடம் தேவைப்படும். விதைகளை விலை கொடுத்து வாங்குறதைவிட, நாமே உருவாக்கறது மூலமா தரமான வித்துக்களை பெற முடியும். இதுல கவனிக்க வேண்டிய மிகமுக்கியமான விஷயம், இடத்தை சுத்தமா வெச்சுக்கறதுதான்.

750 கிராம் வைக்கோலை ராத்திரி முழுக்க ஊறப் போடணும். அதை சுத்தமா அலசி, கம்பி வலையில் வடிகட்டணும். 100 டிகிரி அளவுக்கு கொதிக்கற தண்ணியில போட்டு, 10 நிமிஷத்துக்கும் கூடுதலா கொதிக்க வெச்சு, வேறொரு கொதிகலனுக்கு மாத்தணும். இப்படி கொதிச்ச வைக்கோலை டெட்டால் ஊத்தி சுத்திகரிக்கப்பட்ட இடத்தில் பரப்பிவிடணும். பிறகு, டிரையரில் போட்டுப் ஈரப்பதம் இல்லாம பிழியணும். 12-க்கு 12 சுற்றளவு உள்ள பாலிதீன் பைகள்ல வைக்கோலையும் காளான் விதைகளையும் மாத்தி மாத்தி போட்டு நிரப்பணும். அந்தப் பைகளை முடிச்சு போட்டு, சுத்தமான மரக்குச்சியால் ஆங்காங்கே துளை போட்டு, 25 டிகிரி தட்பவெப்ப நிலையுள்ள இருட்டான குடில்ல தொங்கவிடணும். குடில்ல கோணிப்பைகள அங்கங்க கட்டித் தொங்கவிடணும். இதுக்கு கீழ இருக்கற தளத்தை, மணல் கொண்டு நிரப்பி, கோணிகளை ஈரப்படுத்தணும். இதுல இருக்கற ஈரமே காளான்களுக்கு போதும். சில தினங்கள்லயே கண்ணைப் பறிக்கும் காளான் மொட்டுக்கள் எட்டிப் பார்க்கும்.

காளான் வளர்ப்பில் இன்றைக்குப் போடும் பணம்... நாளை இரட்டிப்பாக முளைக்கும்!''

- வார்த்தைகளில் நம்பிக்கை கோத்துச் சொன்னார் சரளா!

இவருடைய முயற்சியை அங்கீகரிக்கும் விதமாக, இங்கிலாந்து நாட்டிலிருந்து வழங்கப்படும் 'சிறந்த பெண் தொழில்முனைவோர் விருது’ 2009-ம் ஆண்டில் இவருக்குக் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது!

- பொன்.விமலா படங்கள்: பா.கார்த்திக்