Published:Updated:

கடலில் தத்தளித்த உயிர்... காப்பாற்றிய இளம் தளிர்!

இரு தாய்களின் உணர்ச்சி போராட்டம்ஃபீலிங்ஸ்

கடலில் தத்தளித்த உயிர்... காப்பாற்றிய இளம் தளிர்!

இரு தாய்களின் உணர்ச்சி போராட்டம்ஃபீலிங்ஸ்

Published:Updated:
##~##

பெற்று, வளர்த்து, படிக்க வைக்கும் பெற்றோர்... நாளைக்கு இன்ஜினீயர், டாக்டர், வக்கீல்... என்கிற கனவுகளோடு மகனை எதிர்பார்த்திருக்க... திடீர் என ஒரு நாள் அவனுடைய மரணச் செய்தியைக் கேட்கும்போது... எப்படியிருக்கும்?

சூர்யா மட்டும் இல்லையென்றால்... இப்படியொரு செய்திதான் தேனியைச் சேர்ந்த பிரபாவுக்கும் சென்று சேர்ந்திருக்கும்... ஜூலை 7 ஞாயிற்றுக் கிழமையன்று. சூர்யா தன் உயிரை பணயம் வைக்க... பிரபாவின் மகன் வசந்த், மறுபிறவி எடுத்திருக்கிறார் இப்போது!

சென்னையின் அழகிய மெரினா கடற்கரை... எப்போதுமே தன்னுள் ஆபத்தை ஒளித்து வைத்தபடிதான் தன் அலைகளை கரைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், இதையறியாமல் அலைகளின் அழகில் மயங்கி, கடலுக்குள் இறங்கி ஆண்டுதோறும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக இறந்து போவது தொடர்கதையாகவே இருக்கிறது. இப்படி இறந்து போகிறவர்களில் பெரும்பாலானவர்கள்... கல்லூரி மாணவர்கள்தான்.

கடலில் தத்தளித்த உயிர்... காப்பாற்றிய இளம் தளிர்!

அன்றைய தினம் வழக்கம்போல வெள்ளமென மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது... மெரினா கடற்கரை. பலரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேரின் குதூகல கூச்சல், கொஞ்சம் அதிகமாகவே கேட்டுக் கொண்டிருந்தது. திடீரென, 'காப்பாத்துங்க... காப்பாத்துங்க...’ என்று அபாயக் குரலாக அது மாறியது. ஆனால், 'உற்சாகக் கூச்சல்' என்றே கரையிலிருந்தவர்களால் உணரப்பட்டது. அதேசமயம், 'அது உயிர்க்கூச்சல்' என்பதை உணர்ந்தான், பீச்சில் சுக்கு காபி விற்றுக்கொண்டிருந்த சூர்யா. காபி கேனை கீழே வைத்துவிட்டு, சிங்கம்போல சீறிப் பாய்ந்தான்.

அவன் சென்ற வேகத்தைப் பார்த்தபோதுதான், ஏதோ விபரீதம்என்று புரிந்தது கரையிலிருந்த கூட்டத்துக்கு. அனைவரும் பதற்றமடைந்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம், 'அல்லாவே காப்பாத்து... ஏழுமலையானே... ஏசப்பாவே...' என அவரவர் தெய்வங்களின் பெயர்களைச் சத்தம் போட்டுச் சொல்லி வேண்டிக் கொண்டிருந்தனர்.

ஐந்து பேரில் இருவர் கரைக்கு வந்துவிட, மற்ற மூவரும் மயங்கிய நிலையில் அலையில் சிக்கினர். அதில் ஒருவரை சூர்யா போராடி கரைக்கு இழுத்து வர, மற்ற இருவரையும், அங்கிருந்த மீனவர்கள் படகில் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்தனர். சூர்யாவால் காப்பாற்றப்பட்டவர், சற்று நேரத்திலேயே சுயநினைவை பெற்றுவிட, மற்ற இருவரும் மூச்சுப் பேச்சற்ற நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிர் பிழைத்துக்கொள்ள... மற்றொருவர் பரிதாபமாக இறந்து போனார்.

''அந்தக் கொடுமையைப் பார்த்த பெண்கள்ல பலரும் கண்ணீர்விட்டு கதற ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு அம்மா அழுதுகிட்டிருக்கறப்ப... 'உங்க பையனா?' அப்படினு ஒருத்தங்க கேட்டாங்க. 'யார் பெத்த பிள்ளைகளா இருந்தா... என்ன? கண்ணு முன்னால மூணு உசுருங்க ஊசலாடுதே...'னு சொல்லிட்டு திரும்பவும் அழ ஆரம்பிச்சுட்டாங்க அந்த அம்மா. நீச்சல் தெரிஞ்சவங்ககூட நிலைமையோட விபரீதத்தை உணர்ந்து விக்கித்துப் போய்தான் நின்னாங்க. ஆனா, இந்தச் சின்னப் பையன், சட்டுனு கடல்ல இறங்கின வேகம்... இன்னும் எங்க கண்ணுக்குள்ளயே நிக்குது. அவன்தான் நிஜ ஹீரோ!'' என்று நெகிழ்ந்தார்... சம்பவத்தை நேரில் பார்த்த கோடம்பாக்கம், லட்சுமி.

கடலில் தத்தளித்த உயிர்... காப்பாற்றிய இளம் தளிர்!

'ரியல் சிங்கம்’ சூர்யாவைத் தேடி, லைட்ஹவுஸ் பகுதியில் உள்ள அவனுடைய வீட்டுக்குச் சென்றோம். ''என்னை தேடியா வந்தீங்க..?'' கண்கள் மின்னக் கேட்ட சூர்யாவின் கதை, வார்த்தைக்கு வார்த்தை வறுமை கொண்டு எழுதப்பட்ட கதை.

''எங்கப்பா, அம்மா பீச்ல சோளம், மாங்காய் விக்கிறவங்க. அண்ணன், ஆட்டோ மொபைல் கம்பெனியில வேலை செய்யறார். அம்மா, அப்பாவுக்கு உதவியா வீட்டுலயே இருக்காங்க எங்கக்கா.  யாரையும் படிக்க வைக்கல. எனக்கு படிப்பு மேல ஆசை அதிகம். இப்போ பத்தாவது படிக்கிறேன். தினமும் ஸ்கூல்ல இருந்து திரும்பினதும்... ஞாயிற்றுக்கிழமை முழு நேரமும்னு சுக்கு காபி, சுண்டல் விற்பேன். அந்தப் பணத்தை அப்படியே அம்மாகிட்ட கொடுத்துடுவேன்...'' என்ற சூர்யாவிடம் அன்றைய சம்பவத்தை நினைவுபடுத்தினோம்.

''விபரீதம்னு புரிஞ்சதும்... 'நம்மளால காப்பாத்த முடியுமா... நாமளும் கடல்ல மாட்டிக்குவோமா?'ங்கற கேள்விகள் எழறதுக்கு முன்ன, என் கால்கள் கடலை நோக்கி ஓடிருச்சு. ஆனா, என்னால ஒரு அண்ணனை மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சுது'' என்று படு எதார்த்தமாகப் பேசினான் சூர்யா.

''ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், இன்னொரு பக்கம் அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தா என்னாகுறதுனு மனசுக்குள்ள பகீர்னு இருந்துச்சு. அதை அவன்கிட்ட சொன்னா, 'கண்ணு முன்னாடி உயிருக்குப் போராடுறதை எப்படி பார்த்துட்டு இருக்குறது? நாம மத்தவங்களுக்கு உதவினாத்தான்... நமக்கு உதவ நாலு பேரை கடவுள் அனுப்புவார்’னு பெரிய மனுஷன் மாதிரி பேசுறான். சூர்யா ரொம்ப பொறுப்பான புள்ள. அவனுக்கு இன்ஜீனியருக்குப் படிக்கணும்னு ஆசை. அவன் சொல்ற கடவுள்தான் அதுக்கு வழிகாட்டணும்...'' என்றார் அந்த ஏழைத் தாய் விஜயா, கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி.

''அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் பீச்சுல காப்பி விக்கிறதுல சம்மதம் இல்லதான். 'நீ படிடா’னுதான் சொல்லுவாங்க. ஆனா, குடும்ப கஷ்டத்தை உணர்ந்து இதைச் செய்றேன். அதேசமயம், நல்லா படிச்சு இன்ஜினீயர் ஆகிடுவேன். அதுக்குப் பிறகு எங்க கஷ்டமெல்லாம் பறந்துடும்!'' எனும் சூர்யாவுக்கு, காலில் போட செருப்புகூட இல்லை என்பதுதான் நிகழ்காலம்.

நல்லவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதுதானே நம்பிக்கை?!

- சா.வடிவரசு,  படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

கடலில் தத்தளித்த உயிர்... காப்பாற்றிய இளம் தளிர்!

''படிப்பு செலவு, எங்களுடையது!''

இந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து உலகம் முழுக்க இருந்து பாராட்டுக் குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன சூர்யாவுக்கு. சமூக வலைதளங்களில் சமீபத்தில் உச்சத்தில் வைத்துக் கொண்டாடப்பட்ட பெயரும் சூர்யாதான்.

சூர்யா காப்பாற்றிய மாணவரின் பெயர் வசந்த். சொந்த ஊர் தேனி. சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். நடந்த சம்பவத்தைப் பற்றிக் கேட்டாலே, கைகள் நடுங்க, கண் கொள்ளாமல் நீர் வழிகிறது... வசந்த்தின் அம்மா பிரபாவுக்கு.

''கண் முன்னால நிக்கிற என் பையனுக்காக சந்தோஷப்படுறதா... இல்ல, இறந்து போன என்னோட இன்னொரு பையனுக்காக (வசந்தின் கல்லூரி நண்பன், கடலில் மூழ்கி இறந்தவர்) அழறதானு தெரியாம தவிச்சு நிக்கேன்ப்பா. எத்தனை தடவை என்னை வாய்நிறைய 'அம்மா'னு கூப்பிட்டிருப்பான். அவன் இப்ப இல்லைனு நினைக்கறப்ப...'' என்கிறவருக்கு பேச முடியாமல் தொண்டை அடைக்கிறது.

''கடவுள் கண்ணுக்கு தெரியமாட்டார்னு சொல்வாங்க. அது நெசமில்லைப்பா... என் பையன காப்பாத்துன சூர்யாதான் எனக்கு கடவுள். இப்ப எங்க குடும்பத்துல சூர்யாவும் ஒருத்தனாகி, என் வயித்துல பொறக்காத புள்ளையாகிட்டான். கஷ்டப்படுற சூர்யாவோட கனவு... நல்லா படிக்கிறதுனு கேள்விப்பட்டேன். அவனோட கல்வி செலவை நான் ஏத்துக்க போறேன். என் பையனை காப்பாத்தினதுக்கு நான் செலுத்துற நன்றிக்கடன் இதுதான். வாழ்நாள் முழுசும் செலுத்தினாலும் இந்தக் கடன் தீராதுப்பா'' என்றார் பிரபா, ஆனந்தக் கண்ணீருடன்.