Published:Updated:

கருத்தடைக்கு பின்னும் கர்ப்பம்..?

ஒரு கேள்வி... பல பதில்கள்! மெடிக்கல்

கருத்தடைக்கு பின்னும் கர்ப்பம்..?

ஒரு கேள்வி... பல பதில்கள்! மெடிக்கல்

Published:Updated:
##~##

'கருத்தடை அறுவை சிகிச்சைக்கு நூறு சதவிகிதம் உத்தரவாதம் இல்லை' என்றால், அதைச் செய்துகொள்வதால் என்ன பலன்?

பெருங்களத்தூர் அபர்ணாவின் கதையைக் கேட்டால்... அனைவருக்குமே இந்தக் கேள்விதான் எட்டிப் பார்க்கும்!

கடந்த 2003-ம் ஆண்டு, சென்னை, இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார் அபர்ணா. அவருக்கு 2009-ம் ஆண்டு கரு உருவாக, தனியார் மருத்துவமனைக்குச் சென்று கருவை கலைத்தவர், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 'நஷ்டஈடு வழங்க வேண்டும்' என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ... மேல்முறையீடு செய்தது. அப்போது, 'கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட அனைவருமே எதிர்காலத்தில் கர்ப்பம் தரிக்க மாட்டார்கள் என்று நூறு சதவிகிதம் உத்தரவாதம் தர முடியாது’ என்று மருத்துவமனை தரப்பு எடுத்து வைத்த வாதத்தை வழிமொழிந்த மாநில நுகர்வோர் நீதிமன்றம், 'நஷ்டஈடு தரத் தேவையில்லை' என்று கூறிவிட்டது!

மனதில் எழுந்த சந்தேகங்கள் பலவற்றுடன், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணனிடம் பேசினோம்.

''மருத்துவத்தில் எப்போதுமே 100 சதவிகித உத்தரவாதம் என்பது கிடையாது. அது கருத்தடை அறுவை சிகிச்சைக்கும் பொருந்தும். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் லட்சம் பெண்களில், நாலு பேருக்கு ஃபெயிலியர் ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு அரசாங்கம் இலவசமாக மறுமுறை கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்ய முன்வருகிறது. ஆனால், இந்த நாலு ஃபெயிலியருக்காக, 99,996 பேர் கருத்தடை செய்ய யோசித்தால்... அது முட்டாள்தனம் இல்லையா..?'' என்று கேள்வி எழுப்பிய டாக்டர், முதலில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும் முறையை விளக்கினார்.

கருத்தடைக்கு பின்னும் கர்ப்பம்..?

சினைக்குழாய்களை வெட்டினால்... ஆபத்து!

''சினைப்பையில் இருந்து வெளியே வருகிற கருமுட்டை, சினைக்குழாய் மூலமாக கர்ப்பப்பைக்குள் வருகிறது. வலது, இடது பக்கங்களில் உள்ள இந்த சினைக்குழாய் பாதையை அடைப்பதுதான் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை. சினைக்குழாய் என்பது 10 செ.மீ. நீளம் இருக்கும். குழாயின் கடைசியில் இருந்து 3 செ.மீ விட்டுவிட்டு, அதற்கு மேல் உள்ள சினைக்குழாயை 2 செ.மீ அளவு வெட்டி, தைத்துவிடுவார்கள். இதுவே, லேப்ராஸ்கோபி சிகிச்சையில் 2 செ.மீ சினைக்குழாயை வெட்டுவதற்குப் பதிலாக, சினைக்குழாயின் நடுவில் 'ரிங் அப்ளிகேஷன்’ என்கிற முறையில் வளையத்தைப் பொருத்துவார்கள். இதனால், கர்ப்பப்பைக்குள் சினைமுட்டை வராது... விந்துவையும் சந்திக்க முடியாது... கருவும் உருவாகாது.

கருத்தடைக்கு பின்னும் கர்ப்பம்..?

ஒருவேளை இரண்டு சினைக்குழாய்களையும் முழுவதுமாக வெட்டிவிட்டால், 100 சதவிகிதம் கருத்தடைக்கு உத்தரவாதம் தரலாம்.  ஆனால், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் அதிகம். கர்ப்பப்பைக்கும், சினைப்பைக்கும் போகிற  ரத்த ஓட்டம் மாறுபடும். அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படலாம் அல்லது மாதவிடாயின்போது தாங்க முடியாத வலி ஏற்படலாம். சிலருக்கு மாதவிடாய் சட்டென்று நின்று மெனோபாஸ் நிலைக்கு போய்விடும்... சிலருக்கு மாதவிடாய் விட்டுவிட்டு வரும். இதற்கெல்லாம் 50 சதவிகித வாய்ப்புகள் உண்டு என்பதால்தான், சினைக்குழாயை முழுதாக வெட்டி எடுப்பதில்லை'' என்று புரிய வைத்த டாக்டர், கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வியுறுவதற்கான காரணங்களைப் பேசினார்.

தையல் சரியில்லை என்றால்... சிக்கல்தான்!

''கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பெண்களில், 80% பேருக்கு அந்த இடத்தில் ஏதும் பிரச்னை இல்லாமல்தான் இருக்கும். விந்துவின் அளவு என்பது 5 மைக்ரான்கள். முட்டையின் அளவு 100 மைக்ரான்கள். இயற்கையின் விளையாட்டுகள் இங்கேயும் நடக்கிறது. சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சின்ன துளை அல்லது ஜவ்வு உருவாகிவிடும். ஒரு மில்லி மீட்டரில் பத்தில் ஒரு பங்கு அளவுள்ள ஓட்டையை அது உருவாக்கிவிடும். இதன் வழியாக முட்டை சென்றால், கர்ப்பம் ஏற்பட்டுவிடும். இந்த வகையில் கர்ப்பத்தடை ஆபரேஷன் ஃபெயிலியர் ஆகலாம்.

அறுவை சிகிச்சை செய்த இடத்தில் முழுமையாக தையல் போடாமல் எங்கேயாவது ஒரு சின்ன இடைவெளி விட்டிருப்பார்கள். அது விந்து உள்ளே நுழைந்து, மீண்டும் கருத்தரிக்க காரணமாகிவிடும். இதற்கு டாக்டர்களே பொறுப்பு. இந்த வகையிலும் ஃபெயிலியர் ஆவதுண்டு. லேப்ராஸ்கோபி முறையில் கருத்தடை செய்யும்போது சினைக்குழாயில் வளையத்தை பொருத்துவதற்குப் பதிலாக, பக்கத்தில் உள்ள 'உருண்டை சதை' என்கிற இடத்தில் தவறுதலாக வளையத்தை பொருத்திவிடுவார்கள். இதுபோல, மருத்துவர்களின் தவறினால் மீண்டும் கர்ப்பமுற்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற காரணங்கள் என்றால், மருத்துவர்களைப் பொறுப்பாக்க முடியாது'' என்று நம் சந்தேகங்கள் அனைத்துக்கும் அழகாக விளக்கங்கள் தந்து அனுப்பி வைத்தார் ஜெயம் கண்ணன்!

- ம.பிரியதர்ஷினி

'எனக்கும் உண்டு ஓர் அனுபவம்!’

ஆபரேஷன் செய்த பிறகு, மீண்டும் கருத்தரித்து, அதன் விளைவாக ஏற்பட்ட பிரச்னையைச் சந்தித்த அனுபவம் டாக்டர் ஜெயம் கண்ணனுக்கும் உண்டு. அதைப் பற்றி சொன்னவர், ''1983-ம் ஆண்டில் ஒரு கருத்தடை ஆபரேஷன் செய்தேன். அந்தப் பெண் மும்பையைச் சேர்ந்தவர். 86-ல் மறுபடியும் கருத்தரித்துவிட்டார். ஏழாவது மாதம் என்னிடம் வந்து, என்னிடம் கடுமையாகச் சண்டை போட்டார். 50 லட்சம் நஷ்டஈடும் கேட்டார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே சிசேரியன் மூலம் ஒரு குழந்தை இருந்த நிலையில், 'என் மருத்துவமனையிலேயே இந்த குழந்தையையும் சிசேரியன் மூலம் பெற்றுக்கொள். அப்போது, ஏற்கெனவே நான் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த சினைக்குழாயை எடுத்து, கையில் தருகிறேன் (இப்படி கேட்பவர்களுக்கு சினைக்குழாயை முழுதாக வெட்டி லேபுக்கு மட்டுமே நேரடியாக அனுப்ப முடியும். அப்போதுதான் எந்த இடத்தில் தவறு நேர்ந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும்). இந்தியாவில் உள்ள எந்த லேபில் வேண்டுமானாலும் செக் செய்யுங்கள். நான் தவறு செய்திருப்பதாக முடிவு வந்தால்... நீங்கள் சொல்வதற்கு கட்டுப்படுகிறேன் என்றேன். கூடவே, சினைக்குழாய்களை முழுவதுமாக வெட்டிவிட்டால், பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்றும் எடுத்து சொன்னேன்.

என்றபோதும், அந்தப் பெண் முழுவதுமாக வெட்டி எடுக்க சொன்னதால், வேறு டாக்டர் முன்னிலையில் சினைக்குழாயை வெட்டி, அவர்களின் விருப்படி, வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பினோம். ஏற்கெனவே நான் லேப்ராஸ்கோபி செய்த இடத்துக்கு பக்கத்திலேயே வேறு ஒரு சினைக்குழாய் புதிதாக வளர்ந்து, அதன் வழியாக... முட்டையும் விந்துவும் சேர்ந்திருக்கிறது என்பதை அங்கே கண்டுபிடித்து சொன்னார்கள்'' என்றார் டாக்டர்.

ருத்தடை முறையை இந்தியாவில் மிகதீவிரமாக செயல்படுத்த ஆரம்பித்தது 1970-களில்தான். அப்போதெல்லாம் ஆண்கள்தான் கருத்தடையை அதிகம் செய்து கொண்டார்கள் என்றால் நம்புவீர்களா! இப்படி வரும் ஆண்களுக்கு காலை, மதியம், இரவு உணவு வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்டவரை அழைத்து வருபவருக்கு 100 ரூபாய் கொடுக்கப்பட்டது. டாக்டர்களே ஆண்களை 'வாசக்டமி' ஆபரேஷனுக்கு அழைத்து வரவேண்டும். இதற்காக, டாக்டருக்கும் 100 ரூபாய் கொடுத்தது ஒரு காலம்!

லேப்ராஸ்கோபி கருத்தடை அறுவை சிகிச்சை வந்த பிறகு, வாசக்டமி செய்வதை குறைத்துக் கொண்டுவிட்டனர் ஆண்கள். லேப்ரோஸ்கோபி முறை... வலியில்லாதது, காலையில் செய்து கொண்டால், மாலையில் வீடு திரும்பி மற்ற வேலைகளைப் பார்க்கலாம் என்பதுதான் காரணம்.

கருத்தடை சாதனங்கள்... ஒரு பார்வை!

தற்காலிக கர்ப்பத்தடைக்கு ஆண்கள் காண்டம் பயன்படுத்தலாம். பெண்கள் காப்பர் டி, கருத்தடை மாத்திரை, கருத்தடை ஊசிகளைப் பயன்படுத்தலாம். காப்பர் டி-யை 3 வருடம், 5 வருடம், 10 வருடம் என்ற காலகட்டத்துக்கு பொருத்திக் கொள்ளலாம். கருத்தடை ஊசிகளைப் பொறுத்தவரை மூன்று மாதத்துக்கு ஒன்று என்று, வருடத்துக்கு நான்கு முறை போட்டுக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் அதிகளவில் நாடப்படும் இந்த ஊசிகளால், பக்க விளைவுகள் ஏற்பட 2 சதவிகித வாய்ப்புண்டு. அதன் காரணமாகவே நம் நாட்டில் இது பரவவில்லை.

காப்பர் டி சாதனத்தில் காப்பருக்கு பதிலாக, ஹார்மோன் மாத்திரையை வைத்து வருகிற கருத்தடை சாதனமும் இருக்கிறது. இதனை கர்ப்பப்பைக்குள் வைத்துவிட்டால், ஒரு வருடம் வரை கர்ப்பம் தரிக்காது. மாத்திரை தினமும் கரைந்து கொண்டே இருக்கும். ஆனால், இந்த சாதனமும்... இந்தியாவில் அவ்வளவாக பரவவில்லை. இதன் விலை 10 ஆயிரம் ரூபாய். அரசு மருத்துவமனைகளில் இது வழங்கப்படுவதில்லை.