ஸ்பெஷல் 1
Published:Updated:

காப்பாற்றுமா... கவரிங் நகைகள்!

வாருங்கள்... வழிகாட்டுகிறோம் பிஸினஸ் கேள்வி பதில்ஹெல்ப் லைன்

##~##

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி.ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்.

''நானும் என் கணவரும் கவரிங் நகை தொழிலில் இறங்க விரும்புகிறோம். அதற்கான வழிகாட்டல்கள் கிடைக்குமா?''

- பி.பத்மாவதி, திருநெல்வேலி

''கவரிங் நகை தொழிலைப் பொறுத்த வரை, நகைகள் தயாரிப்பு மற்றும் கவரிங் நகைகளை மொத்தமாக வாங்கி விற்பது என்ற இரண்டு வாய்ப்புகள் உள்ளன. அதன் விவரங்களைப் பார்ப்போம்.

காப்பாற்றுமா... கவரிங் நகைகள்!

கவரிங் நகைகள் 1980-களில்தான் பிரபலமடைய ஆரம்பித் தன. என்றாலும், எலெக்ட்ரோ பிளேட்டிங் முறையில் தங்கப்பூச்சு செய்யப்பட்டதால், அந்த நகைகள் தரமில்லாமல் இருந்தன... சீக்கிரமே கறுத்துப் போகவும் செய்தன. இதனால், அவற்றுக்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது. இந்நிலையில், தங்க விலை உச்சத்தை தொட்டபோது, கவரிங் நகைகள் முலாம் பூசுவதில் புதிய தொழில்நுட்பம் வந்தது. 'மைக்ரோ கோல்ட் பிளேட்டிங்' எனும் இந்த புதிய முறை, கவரிங் நகைகளைத் தங்க நகைகளுக்கு ஒப்பான நிறத்துடனும், விரைவில் நிறம் மாறாமல் இருக்கும் தன்மையுடனும் மாற்றியதால்... இந்த நகைகள் இப்போது ஏகபிரபலம்.

இத்தகைய கவரிங் நகைத் தயாரிப்பு முறையை அறிந்துகொள்வது, கவரிங் தொழில் தயாரிப்பு வாய்ப்பை உங்களுக்கு வசப்படுத்தும். பித்தளை நகைகளை சுத்தம் செய்து, அதன் மீது தாமிர (காப்பர்) பிளேட்டிங் செய்வார்கள். அப்படி காப்பர் பிளேட்டிங் செய்த நகைகளை, ரசாயன கலவையில் வைத்து ஃப்ளாஷ் (FLASH) பிளேட்டிங் செய்வார்கள். இப்படி பூசப்படும் தங்க முலாம், லேசான பூச்சாகத்தான் இருக்கும். அதனால், அந்த பூச்சு மீது 'லாக்கர் பூச்சு' என்பதையும் செய்வார்கள். இது பிளாஸ்டிக் கிளியர் பெயின்ட் வகையைச் சேர்ந்தது என்பதால், தங்கப் பூச்சு மீது படர்ந்து, அதன் மெருகு குறையாமல் காப்பாற்றும். இந்த வகை கேரன்ட்டி நகைகள் இப்போது குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் விற்பனைக்கு உள்ளன. இந்த மைக்ரோ பிளேட்டிங் முலாம் பூசும் கருவிகளை அமைப்பதற்கு 5 லட்ச ரூபாயை வரை முதலீடு தேவைப்படும்.

அடுத்ததாக, கவரிங் நகைகளை மொத்தமாக வாங்கி விற்கும் வாய்ப்புப் பற்றிப் பார்ப்போம். கவரிங் நகைகள் சிதம்பரம், கோவை, மசூலிப்பட்டினம் (ஆந்திரா), திருச்சூர் முதலிய இடங்களில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. சிதம்பரம் நகையில் செம்பு அதிகமாக இருக்கும். கோவை நகையில் பித்தளை அதிகமாக இருக்கும். நீங்கள் இந்த கவரிங் நகைகளை மொத்த விற்பனை விலையில் வாங்க சிதம்பரம் மற்றும் கோவை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டின் எல்லா முக்கிய ஊர்களிலும் சிதம்பரம் மற்றும் கோவையைச் சேர்ந்த மொத்த வியாபாரிகளின் கடைகள் உள்ளன. சிதம்பரத்தில் உள்ள அதே விலையில் உங்கள் ஊரிலும் நகைகள் கிடைக்கும். அந்தக் கடைகளை அணுகி மொத்த விற்பனை விலையில் வாங்கி விற்பனை செய்யலாம்.

தரமான கேரன்ட்டி நகைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. நல்ல விலை கொடுத்து பெண்கள் விரும்பி வாங்குவதால் நிச்சய லாபம் உண்டு. தங்க முலாம் பூசும் பயிற்சி பற்றி கேட்டிருந்தீர்கள். மைக்ரோ பிளேட்டிங் புதிய தொழில்நுட்பத்துடன் வந்துள்ளதால் அதை தொழிலாக செய்ய முன் வருபவர்களுக்கு, அதற்கான உபகரணங்கள் அளிப்பவர்களே பயிற்சியும் அளிப்பார்கள்.''

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி... 'வாருங்கள்...வழிகாட்டுகிறோம்’, கேள்வி - பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002