Published:Updated:

சுதந்திரம்... வீட்டிலா.... ஆபீஸிலா?

சுதந்திர தின ஸ்பெஷல்

சுதந்திரம்... வீட்டிலா.... ஆபீஸிலா?

சுதந்திர தின ஸ்பெஷல்

Published:Updated:
##~##

வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, குனிந்த தலை நிமிரக் கூடாது, ஆண்களிடம் பேசவே கூடாது... இப்படியெல்லாம் ஒரு காலத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த  ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், இன்று கரையேறிக் கொண்டிருக்கின்றன. வீட்டில் இருக்கும் பெண்களோ... வேலைக்குப் போகும் பெண்களோ... எல்லோருமே அடிப்படை சுதந்திரத்தோடுதான் இன்றைக்கு நடமாடுகிறார்கள். ஆனால், அந்த சுதந்திரத்தை அவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்?

இப்படியொரு கேள்வியை முன் வைத்து, சென்னை வாசகிகள் சிலரை அழைத்து வந்து, 'இல்லத்தரசிகள் -  வேலைக்குப் போகும் பெண்கள்' என இரண்டு தரப்பாக பிரிந்து நின்று விவாதிக்கச் சொன்னோம். சூடு, பரபரப்பு, சென்டிமென்ட் என்று பலவிதமாக விரிந்த அந்த விவாதத்திலிருந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வேலைக்கு போயிட்டு இருக்கிற அனுபவத்துல சொல்றேன்... வீட்ல இருக்கிற குடும்ப தலைவிகள்தான் சுதந்திரமானவங்க, கொடுத்து வெச்சவங்க. அவங்களுக்கு வீட்டு வேலையும் கம்மி. நிறைய நேரம் சும்மா இருக்க முடியும்'' என்று ஷன்மதி தொடங்கி வைக்க,

'என்ன இது... எடுத்ததுமே சேம் சைடு கோல் போடறாங்க' என்று நாம் நினைத்த மணித்துளியில்... சூடு பிடிக்க ஆரம்பித்தது விவாதம்.

''நீங்க சொல்றதை ஒப்புக்க முடியலீங்க. யார் சொன்னா இல்லத்தரசிகளுக்கு வீட்டுல வேலை கம்மினு? முதல்ல சும்மாங்கிற வார்த்தையே தப்புங்க. வீட்டுல இருக்கிற இருபத்தி நாலு மணி நேரமும் ஏதாவது ஒரு வேலை வந்துட்டேதான் இருக்குது. நீங்கதான் சுதந்திரமானவங்க. ஆபீஸ் வேலையை மட்டும் பார்த்தா போதும்'' என்று ஆதங்கம் பொங்கினார் குயின்.

சுதந்திரம்... வீட்டிலா.... ஆபீஸிலா?

''ஆபீஸ்ல இருக்கிறப்ப ஆபீஸ் வேலையை மட்டும் செய்றோம். வீட்ல இருக்கிறப்ப... வீட்டு வேலை முழுசையும் நாங்கதான் செய்றோம். மொத்தத்துல ஒரே உடம்புக்குள்ள ரெண்டு ஆள். ஆனா, உங்க உலகம் ஒரு வீட்டுக்குள்ள சுருங்கிடுது. அதனால நன்மைகள்தான் ஏராளம். கஷ்டங்கள், பிரச்னைகள் ரொம்ப குறைவு'' என்று அருணா சொல்ல...

'நோ... நோ' என்று இல்லத்தரசிகள் தரப்பிலிருந்து ஏக எதிர்ப்பு.

''ஹோம்மேக்கரா இருக்கறவங்களுக்கு கஷ்டம், பிரச்னைகள் இல்லைனு நீங்க சொல்றதை பார்த்தா... நீங்க வேற உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கீங்களோனு நினைக்கத் தோணுது. காலையில பசங்கள, கணவரை கிளப்பிவிடறதுல ஆரம்பிக்கிற பரபரபரப்புல... ஒருவாய் சாப்பாட்டை நிம்மதியா சாப்பிட முடியாது. கடமைக்காக சாப்பிட்டு அக்கடானு நிமிர்ந்தா... சாம்பார் பொடி ரெடி பண்றதுல ஆரம்பிச்சு வீட்டு க்ளீனிங் வரைக்கும் அடுக்கடுக்கா வேலை வந்துகிட்டே இருக்கும். இதெல்லாம் உங்களுக்கு கிடையாதுதானே... மனச தொட்டு சொல்லுங்க'' என்று சென்டிமென்ட் அட்டாக் கொடுத்தார் கௌஷி.

''ஒப்புக்கிறேன். ஆனா, காலையில நீங்க அனுபவிக்கிற அத்தனை கஷ்டம், பரபரப்பையும் நாங்க ஒரே மணி நேரத்துல அனுபவிக்க வேண்டியிருக்கு. சமையல் தொடங்கி அத்தனையையும் முடிச்சாத்தானே வேலைக்கே போக முடியும்? மொட்டைமாடி துணி மாதிரியான வீட்டு டென்ஷன்கள்.... எங்களை நிம்மதியா வேலை செய்ய விடாது. சாயந்திரம் ஆய்ஞ்சு ஓய்ஞ்சு வீட்டுக்கு வந்தா... மலை மாதிரி நிக்கற வேலைகள், ராத்திரி வரை முடக்கிடும். டி.வி-யில பிடிச்ச ஷோ... சீரியல் எதையும் பார்க்க முடியாது. நீங்க இதைஎல்லாம் பார்த்துகிட்டே வேலை களை நிம்மதியா செய்றீங்கதானே!'' என்று சென்டிமென்ட்டுக்கே ஸ்கொயர் போட்டார் பிரதீபா.

''சீரியல் ஒண்ணுதாங்க எங்களுக்கு இருக்கற ரிலாக்சேஷனே..! அதுலயுமா கை வைப்பீங்க. இதை என் கணவர் படிச்சா என்னாகறது?'' என்று சொல்லி அனைவரையும் 'குபீர்' என்று சிரிக்க வைத்த ஆரோக்கியமேரி,

''அதென்னமோ... வீட்டுல இருக்கற அத்தனை பேருமே சீரியல் பார்க்கறதா, எல்லாருமே பேசிட்டிருக்கீங்க. நிஜத்துல ஒரு வீட்டுல ரகசிய கேமரா வெச்சு கண்காணிச்சு பாருங்க... உண்மை தெரியும். டி.வி. என்னமோ ஓடிட்டிருக்கும்... ஆனா, அதுக்கு முன்னால நாங்க இருக்கறது இல்லங்கறதுதான் உண்மை. முழுசா ஒரு சீரியலை பார்க்கறதுங்கறது ரொம்ப அபூர்வம்'' என்று சீரியல் பேச்சுக்கு 'தடா' போட்டார்.

''இல்லத்தரசிகள்ங்கறதுனாலே வேலை செய்ற சொந்தங்கள் லீவு நாட்கள்ல அப்படியே வீட்டுக்கு வந்து டேரா போடுறதுனால ஏற்படுற சுமை இருக்கே.... அப்பப்பா! ஏற்கெனவே சரவணபவன் இட்லி மெஷின் மாதிரி ஓயாம கிச்சன்ல வெந்துகிட்டு இருக்கிற நாங்க, சொந்தக்காரங்களுக்கும் சேர்த்து வேகணும். அப்பவெல்லாம் 'நாமளும் ஒரு வேலைக்கு போயிருக்கலாமோ’னு மனசு ஏங்கும் பாருங்க. அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாதுங்க. சரி, கிச்சன் விஷயத்தை விடுங்க. கணவர் கொடுக்கிற சம்பளத்துல ஆசையா நமக்கு பிடிச்சதா ஏதாவது வாங்க முடியுமா? அதுக்கு ஆயிரம் விளக்கம் சொல்லணும். நீங்க சம்பாதிக்கிறீங்க. தாராளமா, ஆசையா செலவு பண்ணலாம். அந்த சுதந்திரம் உங்களுக்கு இல்லைனு மட்டும் சொல்லுங்க'' நச்சென்று பாயின்ட்டை பிடித்து கிடுக்கிப்பிடி போட்டார் குயின்.

''நீங்க நினைக்கிற மாதிரி சம்பாதிக் கறதை எல்லாம் ஹோட்டல், மால்னு போய் செலவு பண்றது எல்லாம் படத்துலேயும், நாடகத்துலயும்தான் நடக்கும். நிஜ வாழ்க்கை கணிக்க முடியாததுங்க. யெஸ், நாம நினைச்சதை சாப்பிடலாம்தான். ஆனா... 50, 100 ரூபாய் அளவுல தான் இருக்கும். அதுக்கு மீறி  மனசு ஆசைப்பட்டாலும், வீட்டோட குட்டி குட்டி கமிட்மென்ட் மனசாட்சியை கன்ட்ரோல் பண்ணிடும்'' என்ற அருணா,  பேசிக் கொண்டிருக்கும்போதே...

''நீங்கள்லாம்கூடத்தான் வீக் எண்ட் கலாச்சாரத்துக்கு இப்ப பழகிட்டீங்களே..! 'டெய்லி சமைக்கிறேனே, ஞாயித்துக்கிழமை கண்டிப்பா ஹோட்டல் போனாதான் மனசுக்கு நிம்மதி’ங்கிற எண்ணம் உங்களை தாக்கி ரொம்ப நாளாச்சே'' என்று சிக்ஸருக்கு விரட்டினார் ஷன்மதி.

விவாதம் பெரிதாக நீள... ஒரு கட்டத்தில் இருதரப்புமே ஒரு முடிவுக்கு வந்து...

''மொத்தத்துல இக்கரைக்கு அக்கரை பச்சைதான். இதுவரை நாம பகிர்ந்துகிட்ட விஷயங்கள் எல்லாமே நம்மளோட கடமை. அதேசமயம், நமக்கான சுதந்திரமும் இருக்கத்தானே செய்யுது. ஒவ்வொண்ணையும் பிரிச்சு பார்க்கற விதம்தான் நம்மள வேறுபடுத்துது''

- சாலமன் பாப்பையா போலவே, சேதாரம் இல்லாத தீர்ப்பை தாங்களாகவே சொல்லிக் கொண்டு, இரண்டு தரப்பும் கை குலுக்கினர்!

- கட்டுரை, படம்: இந்துலேகா.சி