Published:Updated:

பெண் சுதந்திரம்... தானாகக் கிடைக்காது... நீங்களாகத்தான் எடுக்க வேண்டும்!

சுதந்திர தின ஸ்பெஷல்

பெண் சுதந்திரம்... தானாகக் கிடைக்காது... நீங்களாகத்தான் எடுக்க வேண்டும்!

சுதந்திர தின ஸ்பெஷல்

Published:Updated:
##~##

'இந்தியாவில் நாளன்றுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள். நாட்டின் 21 உயர் நீதிமன்றங்களில் 23,792 பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன' என்கிறது ஒரு கணக்கெடுப்பு. குறிப்பாக, பேருந்து, ரயில் பயணங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள் நேர்வது... பயணத்தின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்ட அளவுக்கு, மலிந்து கிடக்கிறது வக்கிர கூட்டம்!

'இப்படி வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கான பாதுகாப்பு, இங்கே பாழாகிக் கிடக்கும்போது... சுதந்திரத்தைப் பற்றி என்ன பேச?’ என்கிற வருத்தம்தான் பலருக்கும் மேலிடுகிறது. அதேசமயம், பயணங்களில் பெண்களுக்கான பாதுகாப்புக்காக செயல்பட்டு, அவர்களின் வெளியுலக சுதந்திரத்தை மீட்டுக் கொடுக்கும் சில சட்டங்களும், காவல்துறையின் துரித நடவடிக்கையும் அவ்வப்போது மருந்து போடுவது... ஆறுதல்! அப்படியரு சம்பவமாகத்தான் நம்பிக்கை தருகிறது, சமீபத்தில் தனியார் பேருந்து பயணத்தில், பெண் டாக்டர் ஒருவருக்கு நேர்ந்த கொடுமையும்... அவருக்குத் துணையாக ஓடோடி வந்து போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையும்! அதைப் பற்றி, சென்னை, கோயம்பேடு காவல் நிலைய அதிகாரி ஒருவர், தன் பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்றபடி அதைப் பற்றி விவரித்தார்!  

பெண் சுதந்திரம்...  தானாகக் கிடைக்காது...  நீங்களாகத்தான் எடுக்க வேண்டும்!

''தஞ்சாவூரில் இருந்து கோயம்பேடு வந்திருக்கிறது அந்த தனியார் பேருந்து.  அதிகாலை 3 மணிக்கு... 'லைட்ட போடுங்க... லைட்ட போடுங்க' என்று ஒரு பெண் கூச்சலிட்டிருக்கிறார். 'என் ஸீட்டுக்குப் பின்னால் இருக்கறவங்க... எங்கிட்ட தவறா நடக்கறாங்க... பஸ்ஸை நிறுத்துங்க...’ என்றும் கூப்பாடு போட்டிருக்கிறார்.

'பேசாம இரும்மா... நீ மட்டும்தான் இந்த பஸ்ல வர்றியா..?’ என்று அந்தப் பெண்ணை அதட்டியிருக்கிறார் கண்டக்டர். 'இந்தப் பொம்பளைங்களுக்கு எல்லாம் இதே பொழப்பா போச்சு...’ என்று அதை வழிமொழிந்திருக்கிறார் டிரைவர். பக்கத்து இருக்கையில் இருந்தவர்கள் சிலர், அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகப் பேசியபோதும்... பலன் எதுவும் இல்லை. உடனே 100 எண்ணுக்கு அழைத்து, காவல்துறையிடம் புகார் செய்தார் அந்தப் பெண். அதைக் கேட்ட பின் ஸீட் வக்கிரக்காரர்கள், 'டேய் மச்சீ... இங்க ஒரு ஃபிகரு போலீஸுல கம்ப்ளெயின்ட் கொடுக்குதாம். ரொம்ப பண்ணுதுடா. நீ காலையில நேரா கோயம்பேடு வந்துட்டு, நான் சொல்ற மாதிரி சொல்லு...’ என்று தன் ஆட்டோக்கார நண்பன் ஒருவருக்கு போனில் பேசியிருக்கிறார்கள். இதுவும் போலீஸுக்கு வந்து சேர்ந்தது.

காலை 6 மணி வரை பாலியல் சீண்டல்களை தடுத்து, விலக்கி என போராடியபடி அந்தப் பெண் வர, கோயம்பேட்டில் நாங்கள் காத்திருந்தோம். பேருந்து வந்து நின்றதுமே... அந்த அயோக்கியன்கள் இருவரையும் நாங்கள் பிடிக்க, அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆட்டோக்காரன் வந்து, 'இவ அந்த மாதிரிப் பொண்ணு சார். என்னோட ஆட்டோலயே இவ ரெண்டு, மூணு தடவை வந்திருக்கா’ என்றான் அசால்டாக. அவனையும் மடக்கிவிட்டோம். வக்கிரக்காரர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள். அவர்களையும், பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரையும் கைது செய்து ரிமாண்ட் செய்துவிட்டோம்.

பாதிக்கப்பட்ட பெண் ஒரு டாக்டர். வழக்கமாக இதுபோன்ற பேருந்து பாலியல் சீண்டல்களில் சிக்கும் பெண்கள் செய்வதுபோல பல்லை கடித்துக் கொண்டோ, பயத்தில் நடுங்கிக் கொண்டோ பயணத்தை முடித்துச் செல்லாமல், குற்றவாளிகளை தண்டித்தே ஆக வேண்டும் என்ற அவரின் தைரியமும், துணிச்சலும்தான் இந்த வக்கிரக்காரர்களின் கைகளுக்கு விலங்கு மாட்ட வைத்தது'' என்று சொன்ன அந்த போலீஸ் அதிகாரி,

''பெரும்பாலும் பெண்களுக்கான சுதந்திரம் தானாகக் கிடைப்பதில்லை. தாங்களாகத்தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சூழ்நிலையைப் பொறுத்து தைரியத்தை வரவழைத்து நடவடிக்கை எடுத்தால், காவல்துறை அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும்'' என்று தெம்பூட்டினார்.

பெண் சுதந்திரம்...  தானாகக் கிடைக்காது...  நீங்களாகத்தான் எடுக்க வேண்டும்!

யில் பயணங்களின் கதி எப்படி இருக்கிறது?

இதைப்பற்றி பேசிய சென்னை, சென்ட்ரல் ரயில்நிலைய துணைக் கண்காணிப்பாளர் பொன்ராம், ''ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுடைய குறைகளைக் கேட்டறிவதற்காக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் 12 பெண் காவலர்கள் அடங்கிய பெண்கள் காவல் நிலையம் இயங்கி வருகிறது. பயணத்தில் ஏற்படும் ஆபத்துகளின்போது அழைக்க, ஹெல்ப் லைன் எண் 99625 00500 மாவட்ட காவல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்குகிறது. இந்த எண் அனைத்து ரயில் பெட்டிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. புகார் வந்தால், அதே ரயிலில் பாதுகாப்பு அலுவலில் செல்லும் காவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, 10 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இது, கடந்த 2 ஆண்டுகளாக தமிழகமெங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.

புறநகர் மின்சார ரயில்களில் அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கங்களிலும் பெண் சார்பு ஆய்வாளர் மற்றும் 6 காவலர்கள் வீதம் சாதாரண உடையில் பயணிகளுடன் பயணிகளாக பயணம் செய்கிறார்கள். பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் களையெடுப்பது, வன்முறைகள் நடக்காமல் கண்காணித்து தடுப்பது இவைதான் இவர்களுடைய பணி!

இந்த காவல் படை மூலமாக காப்பாற்றப்பட்ட பெண்களின் பட்டியல் நீளமானது என்பது... நம்பிக்கையைத் தரக்கூடிய விஷயம். நீலகிரி எக்ஸ்பிரஸில் பயணம் செய்த பிரஜிதா என்ற 19 வயது மாணவி, மின்சார ரயிலில் பயணித்த 22 வயது வள்ளியம்மாள் என்று எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும். நெல்லூரிலிருந்து ஷாலிமர் எக்ஸ்பிரஸில் சென்னை வந்த லலிதா ஜெயினிடம், குடிபோதையில் தகாத முறையில் நடந்துகொண்ட அந்த ரயிலுடைய பயணச் சீட்டு பரிசோதகர் ராமாராவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது ஒன்றே போதும்... போலீஸின் பாரபட்சமற்ற நடவடிக்கையை உங்களுக்கு எடுத்துச் சொல்ல...'' என்று தன் பங்குக்கு நம்பிக்கையூட்டினார்.

- வே.கிருஷ்ணவேணி

பெண் சுதந்திரம்...  தானாகக் கிடைக்காது...  நீங்களாகத்தான் எடுக்க வேண்டும்!

சுதந்திரத்தோடு... சுதாரிப்பும் அவசியம்!

''பொதுவெளியில் பெண்கள் சுதந்திரமாக இருக்கலாம்தான். அதேசமயம், சுதாரிப்பாகவும் இருக்க வேண்டியது முக்கியம்'' என்று சொல்லும் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி ஐ.பி.எஸ், பெண்களின் பாது காப்புக்காக தந்த டிப்ஸ்கள்!

பொது இடங்களில் பெர்சனல் விஷயங்களை சத்தமாகப் பேசாதீர்கள்.

பொது இடங்களில் உங்கள் போன் நம்பர், உறவினர்களின் போன் நம்பர், முகவரி போன்றவற்றை போனிலோ அல்லது உடன் இருப்பவர்களிடமோ பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

வேலை முடித்து இரவு நேரத்தில் செல்ல நேரிட்டால், அலுவலகத் தோழிகள் சிலருடன் தனி வாகனத்தில் செல்லலாம். பின்இரவுகளில் பேருந்துப் பயணத்தை தவிருங்கள்.

லுவலகத்தின் அருகில் இருக்கும் காவல் நிலைய தொலைபேசி எண்ணை, கூடவே வைத்துக் கொள்ளுங்கள். உங்களை பாதிக்கும் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அங்கு புகார் கொடுங்கள். உங்களின் விவரம் நிச்சயம் ரகசியமாக வைக்கப்படும்.

பொது ஊடகங்களில் உங்களுடைய பெர்சனல் விஷயங்களைப் பகிராதீர்கள்.

கைபறிப்பு பரவலாக இருப்பதால், ஆடம்பர நகைகளை தினசரி பயன்படுத்த வேண்டாம்.