Published:Updated:

“ஒரு பெண் தனியா வாழவே கூடாதா?”

கனகாவின் சுதந்திரக் கேள்வி!சுதந்திர தின ஸ்பெஷல்

“ஒரு பெண் தனியா வாழவே கூடாதா?”

கனகாவின் சுதந்திரக் கேள்வி!சுதந்திர தின ஸ்பெஷல்

Published:Updated:
##~##

''எனக்கு 40 வயசாயிடுச்சு... இதுக்கு மேல எனக்கு யார் ஹீரோயின் ரோல் தருவாங்க. அதைத் தாண்டி அக்கா, அம்மானு எந்த ரோலையும் பண்றதுக்கு எனக்கு விருப்பமில்லை...''

''எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணல... அதனால பண்ணிக்கல. நான் பாட்டுக்கு தனியா வாழறேன். இதுல என்ன தப்பு? ஜெயலலிதாம்மாகூடத்தான் கல்யாணம் கட்டிக்காம வாழறாங்க...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- 'கனகா இறந்துவிட்டார்' என்று தவறாக பரவிய செய்திகளை அடுத்து, மீடியாக்களில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக இடம் பிடித்த 'கரகாட்டக்காரன்' புகழ் கனகா, கலகலவென சிரித்தபடி வார்த்தைகளை வெளியிட்டாலும்... ஒவ்வொரு வார்த்தையிலும் சோகம் ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பதை நம்மால் நன்றாகவே உணரமுடிகிறது!

'என்னதான் ஆச்சு கனகாவுக்கு?'

“ஒரு பெண் தனியா வாழவே கூடாதா?”

ஒரு மாலை வேளையில் அவருடைய வீட்டுக்குச் சென்றோம். 'தேவிகா', 'கனகா' என்று பெயர்கள் பொறிக்கப்பட்ட பழங்காலத்து வீடு. வெளிப்பக்க கேட் பூட்டியிருக்க, செல்போன் மூலமாக கனகாவுக்கு தகவல் தெரிவித்ததுமே... தலையில் துண்டு சுற்றப்பட்டு, இடுப்பில் கேரளா பெண்கள் ஸ்டைலில் லுங்கி அணிந்தபடி வந்த வயதான வேலைக்கார அம்மா, கேட்டை திறந்துவிட்டு மறுநிமிடமே பூட்டுகிறார். வராண்டாவில் உட்கார வைத்தவர்... வீட்டுக் கதவையும் பூட்டிவிட்டு, தன் வேலைகளில் மூழ்குகிறார்.

வராண்டா முழுவதும் கால் வைக்க முடியாத அளவுக்கு தூசு; ஆங்காங்கே துணி காய போடும் கொடி கயிறுகள்; மூலையில் எறும்பு மொய்க்கும் ஸ்வீட் சிதறல்கள்; வராண்டா சுவர் முழுக்க அனுமார், அம்மன் என விதம்விதமான சாமி படங்கள்; வீட்டிலிருந்து ஏதோ ஒருவித துர்நாற்றம்; பூனைகள் மற்றும் கிளிகளின் ஓயாத சத்தம்... என ஏதோ ஓர் அமானுஷ்ய சூழ்நிலைதான் வீடு முழுக்க!

சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட... பளிச் புன்னகையுடன் வந்த கனகா, கையோடு கொண்டு வந்த வீடியோ கேமரா (ஹேண்டிகேம்) ஒன்றை, ஸ்டாண்டில் வைத்து, பேட்டி மொத்தத்தையும் ரெக்கார்ட் செய்யும் வகையில் அதை ஆன் செய்ய... நம்முடைய குழப்பம் இன்னும் உச்சத்தைத் தொட்டது. அதே வினாடியில்... சட்டென பேட்டிக்கு ரெடியான கனகாவின் பேச்சில்... அத்தனை அன்பு, நட்பு, சிநேகம், புன்னகை எனக் கலந்து கலந்து வர... இப்போது நாம் ஆச்சர்யத்தின் உச்சத்தில்!

''தமிழ் சினிமாவுல கலக்கின நடிகை தேவிகாவோட பொண்ணு. நான் நடிப்பேனு எல்லாம் நினைக்கல. அவ்வளவு சூட்டிகையான பொண்ணா வளரல. ரொம்ப சாதாரணமாதான் வளர்ந்தேன். அம்மாவுக்கு நான்தான் உலகம். சின்ன குழந்தையா இருந்தப்ப... அழகா, குண்டா இருந்தேனாம். அதனால வெளியில கூட்டிட்டு போறப்ப கண்ணுபட்டுரும்னு 'அக்கா குழந்தை'னு மத்தவங்ககிட்ட சொல்வாங்களாம் அம்மா. ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர், என்னை வெச்சு கிருஷ்ணர் படம் எடுக்க அம்மாகிட்ட அப்ப அனுமதி கேட்டிருக்கார். 'திருஷ்டி பட்டுரும்'னு அம்மா மறுத்துட்டாங்களாம்...'' சிரிக்க சிரிக்கப் பேசுகிறார்.

''மொத்தமே தமிழ்ல 50 படம்தான் நடிச்சிருப்பேன். சினிமாவை விட்டு விலகி இருபது வருஷம் ஆகுது. அதுக்குப் பிறகு எனக்கு ஒரு திமிர் வந்திருச்சு. கதாநாயகியா நடிச்ச எனக்கு, அதைவிட குறைஞ்ச ரோலா கருதின மத்த கதாபாத்திரங்கள செய்ய மனசு வரல. ஸோ, வீட்டுலயே செட்டிலாகிட்டேன்'’ என்பவரிடம், அம்மா பற்றி கேட்டால், மறுநிமிடம் சந்தோஷம் கலந்த புன்னகை பொங்கி வழிகிறது.

''நான் ஒரு தாயா இருந்திருந்தா கூட, என் அம்மாவுக்கு இருந்த மாதிரியான தாய்மை குணம், என்கிட்ட இருந்திருக்கும்னு சொல்ல முடியாது. அம்மாகூட வேலை பார்த்த ஒருத்தவங்க, தன் குழந்தை சாப்பிடற மிக்ஸர்ல சின்ன ஸ்டேப்ளர் பின் இருந்ததா ஒரு தடவை சொல்லியிருக்காங்க. அதிலிருந்து... எனக்கு மிக்ஸர் கொடுக்கறப்பல்லாம் எவ்வளவு பெரிய வேலை வந்தாலும், அதை அலசி ஆராய்ஞ்ச பிறகே கொடுப்பாங்க'' என்றவர் தலைமுடியை கோதிவிட்டு சற்று அமைதியாகிறார்.

''அப்பா?''

''அவருக்கும் எனக்குமான பாசம் வளர வாய்ப்பே இல்லாம போச்சு. பொறுப்போட, பாசத்தோட அவர் இருந்ததே இல்ல. அதனால அப்பாங்கிற பிம்பம் என் மனசுக்கு நெருக்கமாவே வரல. இப்பகூட 'டிரக் அடிக்ட்'னு என்னைப் பத்தி வெளியில பேசுற அவர்கிட்ட, எந்த அக்கறையை எதிர்பார்க்க முடியும்? அவரை நான் மதிக்கறதில்லை. அதனால, வார்த்தைகளால என்னை பழி வாங்கறார். இதுக்கு மேல என்ன சொல்ல..? இதோ, இந்த கிளிகளும், பூனைகளும்தான் இப்போ என்னோட துணை!'' என்றபடியே அவற்றிடம் பாசப் பார்வை வீசுகிறார்.

“ஒரு பெண் தனியா வாழவே கூடாதா?”

''கிளி, பூனையெல்லாம் தன்னால வந்து சேர்ந்ததுங்கதான். முயல்கூட இருக்கு. ஒருதடவை கடைக்கு போனப்ப, வித்துட்டு இருந்தாங்க. கலர்கலரா இருந்துச்சு. ஆசையா இருக்கவே... வாங்கிட்டு வந்துட்டேன். இந்த பூனைகளுக்கு எல்லாம் பக்கத்து வீட்ல சாப்பாடு போடுறாங்க. எல்லா பூனைகளும் நோய்வாய்ப்பட்ட நிலையிலதான் என்கிட்ட வந்திருக்கு. அதுகள பராமரிக்கறதுல எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். அம்மா இருந்தப்ப நாங்க நேசிச்ச ஜீவன்னா... ரெண்டு வெளிநாட்டு உயர்ரக நாய்கள்தான். அம்மா இறப்புக்கு பிறகு, கொஞ்ச மாசத்துலேயே அதுங்களும் இறந்து போக... தாங்க முடியாத மனவேதனையில திண்டாடினேன். இப்பகூட அம்மாவோட நினைவுகள் என்னை வதைச்சுட்டுதான் இருக்கு. நான் இறந்தாலும், அந்த நினைவுகள் நீங்கவே நீங்காது'’ என்று உருகும் கனகா...

''அடிக்கடி கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போறது, தினமும் வாங்கிங் போறதுனு சராசரி வாழ்க்கையிலதான் இருக்கேன். ஆனா, வீட்டுக்குள்ளயே முடங்கி கிடக்கிறதாகவும், திரைச்சீலை போட்டு மூடி வெச்சிருக்கிறதாவும் சொல்றாங்க. பாருங்க ஒரு அறைக்கு கூட திரைச்சீலை கிடையாது. ஏன்னா... பூனைங்க அவ்வளத்தையும் கடிச்சு குதறி வெச்சுடுது. எனக்கு எந்த வேலையும் இல்ல. நான் பாட்டுக்கு தனியா வாழ்ந்துட்டிருக்கேன். இதுல என்ன தப்பு? ஒரு பெண் தனியா வாழவே கூடாதா..?'' என்று அழுத்தமான கேள்வியை எழுப்பிய கனகா, கலகலவென சிரித்தபடியே கைகூப்பினார்!

- ம.பிரியதர்ஷினி

படங்கள்: தி.குமரகுருபரன்