Published:Updated:

போராட்டத் தீயை பற்ற வைத்த பானு அப்பாவின் மரணம்...!

போராட்டத் தீயை பற்ற வைத்த பானு அப்பாவின் மரணம்...!

போராட்டத் தீயை பற்ற வைத்த பானு அப்பாவின் மரணம்...!

போராட்டத் தீயை பற்ற வைத்த பானு அப்பாவின் மரணம்...!

Published:Updated:
##~##

பெண்களைப் புரட்சியாளர்களாகக் கொண்ட போராட்டங்கள்... எப்போதுமே அதிக முக்கியவத்துவமும், வீரியமும் பெறுவது சரித்திரம். அப்படி ஒரு சரித்திரத்துக்கு அச்சாரம் போட்டுள்ளார்... மதுரை, சட்டக் கல்லூரி நான்காமாண்டு மாணவி நந்தினி. 'தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும்' என்றபடி, ஜூலை 29-ம் தேதி முதல் தன் தந்தை ஆனந்தனின் ஆதரவுடன் போராட்டத்தில் அமர்ந்தார் நந்தினி. நாளாக ஆக... மதுவினால் சீரழிந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், சட்டக் கல்லூரி மாணவ - மாணவியர், பொதுநல அமைப்பினர், அரசியல் கட்சியினர் என்று ஆதரவுக்கரம் நீட்ட... நந்தினி உருவாக்கியிருக்கும் களத்தின் கனம் கூடிவிட்டது!

உண்ணாநிலைப் போராட்டப் பந்தலில் இருந்தபடி தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த நந்தினியின் பேச்சில், வேகம் மட்டுமல்ல... இந்த சமுதாயத்தின் மீதான உண்மையான அக்கறையும் பொங்குகிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ப்ளஸ் டூ படிக்கும்போது, என் உயிர்த்தோழி பானுவோட அப்பா குடியால இறந்துட்டார். அந்தக் குடும்பத்தை பார்த்தப்போதான், குடியோட கோர முகம் எனக்கு முழுசா புரிஞ்சுது. அதிலிருந்து, குடி மேல ஆத்திரமும் ஆற்றாமையும் பொங்கினதோட, மது ஒழிப்பு என்கிற விதையும் மனசில் ஆழமா விழுந்துடுச்சு. தோழிகளோட சேர்ந்து... குடியால தடுமாறுற குடும்பங்களையும், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில இருந்த குடிக்கு அடிமையானவங்களையும் பார்த்தப்போ, 'இதுக்கு ஏதாவது செய்தே ஆகணும்'னு மனசு உறுதியாச்சு.

போராட்டத் தீயை பற்ற வைத்த பானு அப்பாவின் மரணம்...!

'பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’னு தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். 'இது அரசின் கொள்கை முடிவு.... இதை மாற்றியமைக்க இயலாது’னு பதில் வந்துச்சு. '15 வயசு பசங்க தொடங்கி, பெரிய ஆளுங்க வரை தமிழ்நாட்டு ஆண்களை எல்லாம் குடிகாரர்களாக்கி, பல குடும்பங்களை தெருவில் நிறுத்துறதுதான் அரசாங்கத்தோட கொள்கை முடிவா?’ங்கற கேள்வி என்னை தொடர்ந்து போராடத் தூண்ட, உயர் நீதிமன்றத்தோட 36 நீதிபதிகளுக்கும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடிதம் எழுதினேன். இதுவரை பதில் இல்லை. இறுதியா, உச்ச நீதிமன்றத்தையும் நாடி யிருக்கேன். போராட்டங்கள்தான் சத்தமா நியாயம் கேட்கும்னு உண்ணாநிலைப் போராட்டத்தையும் கையில எடுத்திருக்கேன்.

இது மாணவர்களால நடத்தப்படுற போராட்டம். பலரும் ஆதரவு தர்றது... நம்பிக்கையைக் கூட்டுது. எல்லா போராட்டங்களுக்கும் வெற்றி சாத்தியமில்லைதான். ஆனா, மாணவர்கள் போராட்டத்தோட வீச்சு எப்பவுமே ஊக்கமளிக்கும் விதமாத்தான் இருந்திருக்கு. தெலுங்கானா போராட்ட வெற்றியில்கூட மாணவர்களோட பங்குதானே அதிகம்?  

சாலை விபத்து, குடும்ப வன்முறை, பாலியல் கொடுமைகள், நோய்னு இந்தக் குடியால விளையும் கேடுகள் கொஞ்சம் நஞ்சமா..? நூறுக்கும் இருநூறுக்கும் நாளெல்லாம் உழைக்கிறவன்கிட்ட இருந்து, 'அந்தக் காசையும் எங்கிட்ட கொடுத்துட்டுப் போ’னு பிடுங்க வீதிக்கு வீதி சாராயக்கடைகளை திறந்து வெச்சிருக்கு அரசாங்கம். இந்த சீரழிவுகளுக்கும், நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் நிச்சயமா முற்றுப்புள்ளி வெச்சே ஆகணும்!''

- தீர்க்கமாக வார்த்தைகளை வீசும் நந்தினி, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா, ஓய்வுபெற்ற அரசுப் பொறியாளர். இப்போது முழுநேர சமூகப்பணியில் இருக்கிறார். அம்மா, இல்லத்தரசி. தங்கை, பள்ளி மாணவி.  

உண்ணாவிரதம் இருந்துவந்த நந்தினி, கருப்பசாமி, விஜி, வினோத், யுவராஜ் ஆகிய ஐந்து மாணவர்களையும் ஜூலை 31 நள்ளிரவில் படையாக திரண்டு வந்த போலீஸ் கைது செய்தது. பிறகு, மதுரை அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுநாள் போராட்டத்தை வாபஸ் பெற்ற நந்தினி, ''நாங்க ஏன் சாகணும்... அரசு எங்க கோரிக்கையை நிறைவேத்தல... எந்த நீதிபதிக்கும் இதுல அக்கறை இல்லை. அதனால, நீதிமன்றத்தில் போராடவும் விருப்பமில்ல. இனி, ஒவ்வொரு கல்லூரிக்கும் போய் மாணவர்களைத் திரட்டுவேன்... கூடவே பொதுமக்களையும் திரட்டி, பெரும் போராட்டமாக இதை நிச்சயம் நடத்துவேன்'' என்றார் குரலில் உறுதி கூடியவராக!

- டி.பி.ஜி.சாமுவேல் டேவிட் டில்டன்

படம்: பா.காளிமுத்து