##~## |
அரசு உயர் அதிகாரிகளின் நேர்மையான நடவடிக்கைக்குப் பரிசாக, அயோக்கியர்களின் பிடிக்குள் திணறும் அரசு இயந்திரம், பலமுறை அவர்களைத் தண்டித்திருக்கிறது. அந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறார், இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா ஷக்தி நாக்பால். உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஆற்று மணல் திருடும் மாஃபியாக்களை தைரியமாக சிறைபிடித்ததற்கு தண்டனையாக, மாநில அரசால் பணியிலிருந்து துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட, நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது அவருக்கு.
நொய்டா மாவட்டத்தில் ஓடும் கங்கை ஆற்றில், அரசு அனுமதி இன்றி சமூக விரோதிகள் மணலைத் திருடி விற்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்... அரசியல் கட்சிகளின் ஆதரவோடு! மிரட்டல் மற்றும் பணி மாற்றலுக்கு பயந்து, அதிகாரிகள் அனைவருமே கைகட்டி நிற்கும் நிலை தொடர்கதையே! இந்நிலையில், அந்தப் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உதவி கலெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டார் துர்கா. கடந்த ஏப்ரல் தொடங்கி, இதுவரை திருட்டு மணலை அள்ளிச் சென்றதற்காக 300 டிராக்டர் டிராலிகள் மற்றும் 20 டிப்பர் லாரிகள் என பறிமுதல் செய்துள்ளார். 15 பேரை கைது செய்ய வைத்திருப்பதுடன், 17 வழக்குகளும் பதிவு செய்து, 82.34 லட்ச ரூபாயை அபராதமாகவும் வசூலித்துள்ளார் துர்கா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போது, துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மனைவியும், சமூக சேவகருமான நூத்தன் தாக்கூர் என்பவர், நியாயம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரிடம் பேசியபோது, ''நொய்டாவின் கதல்பூர் பகுதியில் உள்ள ஒரு மசூதியின் காம்பவுண்ட் சுவர், அதன் பஞ்சாயத்து நிலத்தில் சட்டவிரோதமாக எழுப்பப்பட்டது. இதை அறிந்த துர்கா, தன் அதிகாரிகள் படையுடன் வந்து சேர்வதற்குள், சுவரை எழுப்பியவர்களே இடித்துவிட்டனர். இதை துர்காதான் இடித்தார் எனவும், அதனால் அங்கு மதக்கலவர சூழல் கிளம்பியதாகவும் அவரைப் பற்றி தவறாகச் சித்திரித்து, மணல் மாஃபியாக்களின் பிடிக்குள் இருக்கும் உ.பி அரசு அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது'' என்று குமுறினார் தாக்கூர்.
நேர்மையான ஓர் அதிகாரிக்கு எதிரான இந்த அநியாய நடவடிக்கை, மீடியாக்களால் நாடு முழுவதும் தெரியவர, மக்கள் கொதித்தெழுந்தனர். மத்திய அரசும் வேறு வழியின்றி துர்காவின் விவகாரத்தில் தலையிட்டு, மாநில அரசுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை நீட்டி போராடி வருகிறது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், துர்காவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.
அதேசமயம், இந்த சஸ்பெண்ட் விவகாரம் துவங்கியது முதல், 'நான் ஒரு அரசு அதிகாரி' என்று சொல்லியே... மீடியாவிடம் பேச அன்புடன் மறுக்கிறார் துர்கா.
துர்கா மீண்டும் பணிக்கு திரும்புவதற்காக நாடு முழுவதும் பெருகி வரும் ஆதரவு, அவருக்கு வெற்றியைத் தேடித் தரும் என நம்புவோம்!
- ஆர்.ஷஃபி முன்னா