Published:Updated:

அம்மா.. பகவதியே !

அம்மா.. பகவதியே !

அம்மா.. பகவதியே !

அம்மா.. பகவதியே !

Published:Updated:
அம்மா.. பகவதியே !

காளி, துர்க்கை, பார்வதி, லட்சுமி, சரஸ்வதி... இப்படி பல நூறு நாமங்கள்... பல நூறு வடிவங்கள் அம்மனுக்கு! ஒவ்வொருவரையும் தேடி, அவரவரின் அவதார தலங்களை நாடிச்சென்று கொண்டிருக்கின்றனர் பக்தர்கள்! ஆனால், எந்த அன்னையை மனதில் நினைத்து நோக்குகிறோமோ... அதே அன்னையாக, ஒரே இடத்தில் இருந்து கொண்டே காட்சி தரும் கருணைத் தாய் ஒருத்தியும் இங்கே இருக்கிறாள் என்பது ஆச்சர்யமான செய்திதானே!

உருவே இல்லாமல் மேருமலையை நிகர்த்ததாக, ஐந்து முகம் கொண்ட மண் புற்றாக இருக்கும் மண்டைக்காட்டு பகவதிக்குதான் எத்தனை எத்தனை சிறப்புகள்! கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது இந்த புண்ணிய தலம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாற்பதடி உயரத்துக்கு வளர்ந்து நிற்கிறது மண் புற்று. அதன் மீது, சந்தனம் கொண்டு அழகாக உருவாக்கப்பட்டுஇருக்கிறது பகவதி அம்மனின் முகம். அதற்குக் கீழே உற்சவ விக்கிரகம். எந்த ஆரவாரமும், பரபரப்பும், கெடுபிடி யும் இல்லாமல், அன்னையின் முகம் பார்த்து மணிக்கணக்கில் தியானம் செய்து கொண்டிருக்கிறார்கள் பெண்கள். பிரார்த்தனை களை அம்மன் காது கொடுத்துக் கேட்டு விட்டாள் என்பதை, திடீர் என்று எழும் பல்வேறு ஓசைகளே சமிக்ஞையாக அறிவிக்க... பிரார்த்தனையை முடிக்கின்றனர் அந்தப் பெண்கள்.

##~##

அம்மனின் அருட்செய்தி கிடைத்து வெளியே வந்து, பொங்கல் வைப்பதில் தீவிரமான கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தங்கமணி, ''எங்க இடத்தை ஆக்கிரமிச்சு மதில்சுவர் கட்டிட்டார் ஒருத்தர். எவ்வளவோ சொல்லியும், பேச்சுவர்த்தை நடத்தியும் மசியல. கடைசியில் அம்மாகிட்ட வந்து, முறையிட்டேன். நல்ல சமிக்ஞை கிடைக்கவே... மன நிம்மதியோட ஊருக்குப் போனேன். சரியா ஒரு மாசத்துல... தானே மதில்சுவரை இடிச்சுட்டு, 'இது உங்க இடம்தான்' சொல்லி மன்னிப்பு கேட்டார் அந்த ஆள். அதிலிருந்து என் குலதெய்வமா நினைச்சு மாசாமாசம் இங்க வந்துகிட்டிருக்கேன்.

இப்பவும்கூட ஒரு பிரார்த்தனையாத்தான் வந்திருக்கேன். 'நல்லது நடக்கும் போய் வா' அம்மா சொல்லியாச்சு. நன்றிக்கடனுக்குத்தான் பொங்கல் வைக்கிறேன்'' என்று மெய்மறந்தவராகச் சொன்னார்.

சபரிமலைக்கு ஆண்கள் செல்லுவது போல, கேரளத்து பெண்கள் 41 நாள் விரதமிருந்து இருமுடி கட்டி வருகை தருகிறார்கள். லட்சக்கணக்கில் வரும் இவர்களின் பக்தியைப் பார்த்துத்தான், 'பெண்களின் சபரிமலை' என மண்டைக்காட்டை அழைக்கிறது ஆன்மிக உலகம். சரி, இங்கே இவள் எழுந்தருள ஒரு காரணம் இருக்கும்தானே!

அம்மா.. பகவதியே !

ஆடு, மாடுகள் மேயும் மந்தை இது. காடாகவும் இருந்ததால் மந்தைக்காடு என அழைக்கப்பட்டு, இப்போது 'மண்டைக்காடு' என்றாகியிருக்கிறது. ஆதிசங்கரரின் சீடர் ஒருவர், அருகிலுள்ள சேரமங்கலத்தில் வசித்திருக்கிறார். ராஜராஜேஸ்வரி குடியிருப்பதாகச் சொல்லப்படும் ஸ்ரீசக்கரத்தை கையிலேந்தி தினமும் இந்த இடத்துக்கு வரும் அவர், ஸ்ரீசக்கரத்தை கீழே வைத்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். மாலைக்குள் அவர் மீது புற்று பரவிவிடும். ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள்தான், மாலையில் புற்றைக் கலைத்து அவரை எழுப்பி விடுவார்கள். ஸ்ரீசக்கரத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்புவார். ஒரு நாள் ஸ்ரீசக்கரத்தை அவரால் எடுக்க முடியவில்லை. 'நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்’ என்று அசரீரி கேட்டது. தானும் இங்கேயே இருந்துவிட முடிவெடுத்தவர், 'புற்றைக் கலைத்து எழுப்ப வேண்டாம்' என்று சொல்லிவிட்டு, ஜீவசமாதியாகிவிட்டார். அந்த புற்று, மேருவாக... ஸ்ரீசக்கர அன்னை, பகவதியாகிவிட்டாள்!

அன்னையின் அற்புதத்தைக் கேள்விப்பட்டு, திருவிதாங்கூர் மகராஜாதான் இந்த இடத்தில் இருந்த ஓலைக்குடிசை கோயிலை, கட்டடமாக மாற்றித் தந்திருக்கிறார். பின்னர், இருமுறை திருப்பணிகள் செய்யப்பட்டு, மாற்றிக் கட்டப்பட்டுள்ளது. ஆர்ப்பரிக்கும் அரபிக்கடலிலிருந்து அரை ஃபர்லாங் தூரத்தில் வடக்கு நோக்கியதாக அமைந்திருக்கிறது ஆலயம்.

கோயிலில் இருக்கும் அரச மரத்தில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டிருந்தார் ஒழுகினசேரி அருகில் உள்ள தேரேகால்புதூர் சுதா.

அம்மா.. பகவதியே !

''மகத்துவம் நிறைந்தவளான இந்தம்மா இருக்கும் மண்டைக்காடுதான்... தமிழ்நாடு மற்றும் கேரளத்து பெண்களின் தாய்வீடு. முதலில் ஒரு பெண் குழந்தை. அடுத்து, ஆண் குழந்தை வேண்டும் என்று வேண்டி வந்தேன். அடுத்த வருடமே இந்த சிபி பிறந்தான். அந்த நன்றிக் கடன் தீர்க்கவும்... அவன் ஆரோக்கியமாக நீண்டநாள் வாழவும் வேண்டித்தான் இப்போது தொட்டில் கட்டி நேர்த்திக்கடன்'' என்று சிலிர்த்தபடியே தொட்டில் ஆட்டுவதைத் தொடர்ந்தார்.

தலைபோகிற பிரச்னைகள், மூளைக்கோளாறு, தீராத தலைவலி, உடல் ரீதியிலான பெரும் பிரச்னைகள் என்று பலவற்றையும் தீர்த்து வைக்கிறது இங்கு தரப்படும் 'மண்டையப்பம்' என்பது பக்தர்களின் அபரிமிதமான நம்பிக்கை. கோயிலின் நைவேத்திய பிரசாதமான இந்த அப்பம்... அரிசிமாவில் வெல்லம், பாசிப்பருப்பு, ஏலம், சுக்கு ஆகியவை சேர்த்து நீராவியில் அவித்து தயாரிக்கப்படுகிறது. அம்மனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு தரப்படுகிறது.

வைசூரி என்னும் அம்மை நோயை உருவாக்கு கிறவள் இந்த அம்மை. அதை குணமாக்கித் தருகிற வளும் இவள்தான். அந்நோய் முற்றியதால் வந்த பாதிப்பை போக்கவும், மற்றவர்களுக்கு வராமல் தடுக்கவும் அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் 'முத்தப்பம்' என்ற ஒன்றை நைவேத்தியம் செய்கிறார்கள்.

மாசி மாதம்தான் அம்மனுக்கு உகந்த மாதம். அப்போது நடக்கும் கொடைவிழா உலக பிரசித்தம். லட்சக்கணக்கில் கேரளத்துப் பெண்கள் இருமுடி கட்டி அம்மனை தரிசிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும்!

இதைப்பற்றி எல்லாம் பேசிய கோயில் மேல்சாந்திகளில் ஒருவரான சட்டைநாத குருக்கள். ''உடல்கோளாறு, திருமணத் தடை, குழந்தையின்மை என்று எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும் இந்த அன்னை... நாம் எந்த அன்னையை நினைத்து உருகினாலும், அந்த அன்னையாகவே நமக்குக் காட்சி தந்து கவலைகள் போக்குவதுதான்... அவளுடைய கருணையிலேயே... பெருங்கருணை'' என்று பெருமிதம் பொங்கச் சொன்னார்!

எப்படிச் செல்வது?

 

 

நாகர்கோவில் வரை ரயில், பஸ் வசதிகள் உண்டு. நாகர்கோவிலிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் மண்டைக்காட்டுக்கு, அடிக்கடி நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 4.30 முதல் மதியம் 1.00 மணி வரை.

மாலை 5.00 முதல் 8.30 வரை.

 

அலுவலக தொலைபேசி எண்: 04651-222596.

                            - சக்தி வருவாள்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism