Published:Updated:

நெஞ்சுக்கு நெருக்கமான பரிசு!

சிறுதொழில் சிறப்பிதழ்

நெஞ்சுக்கு நெருக்கமான பரிசு!

சிறுதொழில் சிறப்பிதழ்

Published:Updated:
##~##

டற்கரை மணற்பரப்பில் பார்த்து ரசித்த காதலியின் காலடிச்சுவடு, வாழ்க்கைத் துணையைக் கரம் பிடித்த முதல் தருணம், பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசம்... ஒவ்வொன்றும் நம் நினைவைவிட்டு நீங்காத, உணர்வுப்பூர்வமான பொக்கிஷங்கள்!

''இவற்றை நினைவில் மட்டுமல்ல, நிஜத்திலும் நீங்காத பொக்கிஷமாக்கி, கண்முன்னே நீங்கள் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்க முடியும்'' என்கிறார், 'ரீ ஃப்ரேம் சாஃப்ட்டெக்’ எனும் நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் அரவிந்த்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில மாதங்களுக்கு முன்பு 'ஸ்ரீப்ரியா ஸ்கல்ப்சர்’ எனும் பெயரில் இந்தியாவில் முதல் முறையாக 'ஹேண்ட் அண்ட் லெக் லைஃப் காஸ்டிங்' (Hand and leg life casting) என்கிற வித்தியாசமான கான்செப்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார் அரவிந்த்.

''புதுசா ஏதாச்சும் பண்ணிட்டே இருக்கறதுனா... எனக்கு ரொம்ப பிடிக்கும். இதுவும் அப்படி ஆரம்பிச்சதுதான். லண்டனில் இருக்கும் மெழுகு அருங்காட்சியகம் போல, மும்பையிலிருந்து புனே செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் சிறிய அளவிலான மெழுகு அருங்காட்சியத்துக்கு போயிருந்தோம். அப்போ, என்னுடைய கஸின் ஸ்ரீப்ரியா, 'நாம ஏன் இந்த மாதிரி வித்தியாசமா செய்யக்கூடாது?’னு கேட்டதுதான் இதுக்கான விதை.

நெஞ்சுக்கு நெருக்கமான பரிசு!

'மெழுகுச் சிலையெல்லாம் பல ஆயிரங்கள், லட்சங்கள்னு விலை உயர்ந்த விஷயம். ஆனா, நாம செய்யுறது எல்லாத் தரப்புக்கும் போய் சேர்ற மாதிரி குறைஞ்ச விலையில் இருக்கணும்னு யோசிச்சேன். கடைசியிலதான்... ஒவ்வொருத்தரும் தங்களோட சந்தோஷ தருணங்கள பதிவு பண்ற மாதிரி... ஒரிஜினல் கை, கால்களை அச்செடுத்து, அதை சிலைகளா வார்த்தெடுத்து கொடுக்க முடிவு செஞ்சேன்''

- இப்படி சொல்லும் அரவிந்த், கிட்டத்தட்ட 250 தடவைகளுக்கு மேல் இந்த முயற்சியில் தோல்வியுற்றும் சளைக்காமல் முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார். நம் வீட்டுக் குட்டி தேவதையின் பஞ்சு போன்ற பாதங்கள், தாயின் கரம் சேர்ந்திருக்கும் பிஞ்சுக் கரங்கள், வாழ்க்கைத் துணையின் கரத்தோடு கரம் பற்றியிருக்கும் தருணம் இப்படி அனைத்தையுமே சிலையாக வடித்து உரியவர்களுக்கு பரிசாகக் கொடுத்தால் எப்படி இருக்கும்?!  

நெஞ்சுக்கு நெருக்கமான பரிசு!

''கம்ப்யூட்டர்ல தேடலில் இறங்கி, அதை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, நம்ம ஊர்ல கிடைக்கக்கூடிய மெட்டீரியல்களை வெச்சு செஞ்சு பார்ப்பேன். இந்த விஷயத்தில் என்னோட வொய்ஃப் ப்ரீத்திதான் பக்கபலமா இருந்தாங்க. தேவைப்படற எல்லா மெட்டீரியலையும் லிஸ்ட் போட்டு கொடுத்துட்டு ஆபீஸ் போயிடுவேன். அவங்கதான் கடை கடையா ஏறி இறங்கி வாங்கிட்டு வருவாங்க. சமயத்துல இதுக்காக பெங்களூரு, ஹைதராபாத்னு போயும் தேடிப் பிடிச்சு வாங்கிட்டு வந்திருக்காங்க'' என்று மனைவியைப் பெருமைப்படுத்தும் அரவிந்த்,

''இது வெறும் பரிசு பொருளா மட்டும் இல்லாம, காலத்துக்கும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமா இருக்கும். அதுவும் உங்க குழந்தைகளோட மெழுகுப் பாதங்களை அவங்க வளர்ந்ததும், 'இந்தக் குட்டி குட்டி காலுக்கு சொந்தக்காரன் நீதான்’னு எடுத்துக் காட்டுறப்ப... அவங்களோட சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. இந்த சந்தோஷம், அடுத்தடுத்த தலைமுறைக்கும் போய்ச் சேரும்'' என்றவர்,

இந்த முயற்சியில் வெற்றி கிடைத்தவுடன், முதலில் தன்னுடைய கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனியின் கையை அச்செடுத்து, அவருக்கு பரிசளித்திருக்கிறார்.

''பாடகி சைந்தவி, மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ் ரெண்டு பேரோட கைகளும் கோத்தபடி ஒரு மெழுகுச் சிலையை அவங்களோட திருமணத்துக்கு பரிசா கொடுத்தேன். அந்த பரிசை மட்டும் மேடையிலயே பிரிச்சு, 'எங்க திருமணத்துக்கு கிடைச்ச பரிசுகள்ல நெஞ்சுக்கு நெருக்கமான பரிசு இதுதான்!’னு அவங்க சொன்னப்போ... ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு'' எனும் அரவிந்த், அடுத்ததாக கமல்ஹாசன், அஜீத் மற்றும் கருணாநிதி இம்மூவரின் கை அல்லது கால்களை அச்செடுத்து சிலையாக வார்த்தெடுக்கக் காத்திருக்கிறார்!

- இந்துலேகா.சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism